தனியன்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

srisailesa-thanian-smallதனியன் என்பது பொதுவாக ஆசார்யரைப் பற்றிய புகழ் பாடும்  துதி, அவரது சிஷ்யரால் இயற்றப்படுவது. கூரத்தாழ்வான் நம் குரு  பரம்பரை பற்றி அருளியுள்ள ஓர் அழகிய ச்லோகம் நித்யாநுஸந்தானமாகக் கொண்டாடப்படுகிறது.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

சுருக்கமாக இதன் பொருளாவது: மஹாலக்ஷ்மியின் நாதனாகிய நாராயணனைத் தொடக்கமாகவும், நாத முனிகள் ஆளவந்தாரை நடுவாகவும் .என் ஆசார்யனை ஈறாகவும் உடைய குரு பரம்பரையை வணங்குகிறேன்.

இதில், என்  ஆசார்யர் என ஆழ்வான் இராமாநுசரை வைத்துப் பாடியுள்ளார். இதை அநுஸந்திக்கும் ஒவ்வொருவரும் தமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய  தத்தம் ஆசார்யரை நினைந்து துதிப்பது க்ரமமாகும்.

Acharyas

நம் பூர்வாசார்யர்களின் தனியன்களைக் காண்போம். ஓராண்  வழி (பெரிய பெருமாள் முதல் மணவாள மாமுனிகள் வரையிலான) ஆசார்யர்களின் தனியன்களை முதலில் காண்போம்.

கேட்க – ஓராண் வழி ஆசார்யர்களின் தனியன்ள் //yourlisten.com/embed/html5?17703279

  • பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும், ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

  • பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)

நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப்  பாமரன் என்றோ பண்டிதன் என்றோ, செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

  • சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர, எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும் நடத்தும் விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

  • நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

  • ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி  அனுஷம்)

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம் ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

  • உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)

நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

  • மணக்கால் நம்பி (மாசி மகம்)

அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத்   திருத்திப் பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

  • ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து என்னை ஒரு பொருளாக உளவாக்கிய யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

  • பெரிய நம்பி (மார்கழி கேட்டை)

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண
காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாணகுணக் கடலில் ஆழ்ந்துள்ள நிறைவுள்ள மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

  • எம்பெருமானார் (சித்திரை  திருவாதிரை)

யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ்
ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும், அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி  பணிகிறேன்.

  • எம்பார் (தை  புனர்வஸு)

ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

  • பட்டர் (வைகாசி அனுஷம்)

ஸ்ரீ பராஶர பட்டார்ய ஸ்ரீரங்கேஶ புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின் திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

  • நஞ்சீயர் (பங்குமி உத்தரம்)

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

  • நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால் வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

  • வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி  ஸ்வாதி)

ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

நம்பிள்ளையின் திருவடித்  தாமரைகளில் அடியவரான ஸ்ரீக்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

  • பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)

லோகாசார்யா குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப்  பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

  • திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)

நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்யஸ்ரீயை அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

  • அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல்போல் நிரம்பியவரும் யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஆழ்வார்களும் ஆசார்யர்கள் பிறர் பலரும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.

வரிசைக் கிராமத்தில் ஆழ்வார்கள்:

  • பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)

காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே
ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத்  தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால் ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத்  துதிக்கிறேன்.

  • பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால் நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

  • பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே
ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

  • திருமழிசை ஆழ்வார் (தை  மகம்)

சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச  பூதங்களால் ஆனது. எம்பெருமான் திருமேனியோ  விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச  உபநிஷத்துகளால் ஆனது) எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள். ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

  • மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)

அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

நம்மாழ்வாரைப்  பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம்  தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

  • நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

  • குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)

குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம்
சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர் குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

  • பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)

குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஶேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாது காம: |
ஶ்வஶுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின்  தமப்பனார், திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

  • ஆண்டாள் (ஆடி பூரம்)

நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம்
ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ஶ்ரஜிநிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்  துயிலுணர்த்துபவள் , எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

  • தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)

தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைபோல் மிகவும் நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

  • திருப்பாணாழ்வார் (கார்த்திகை  ரோஹிணி )

ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய, லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த  கண்களால்  இனி வேறொன்றும் காணேன்  என்று அவன் திருவடி  சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

  • திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால்  முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

  • குருகைக் காவலப்பன் (தை விசாகம்)

நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர், யோகிகளில் சிறந்தவரான குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

  • திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)

ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், மணக்கால்நம்பிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், ஸ்ரீபராஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

  • திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )

ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக்  கடல் போன்றவர், ஆசார்யர்களில் சிரேஷ்டரான திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

  • பெரியதிருமலைநம்பி (வைகாசி ஸ்வாதி)

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

திருமலையப்பனாலேயே தன்  தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த உத்தம தேசிகரான திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

  • திருமாலை ஆண்டான் (மாசி மகம்)

ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான மஹாமேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் மாலாதரரைப் பூசிக்கிறேன்.

  • திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர், ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர், ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

  • மாறனேரி நம்பி (ஆனி  ஆயில்யம்)

யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி, ஞான பக்திக்  கடல் ஆகிய மாறனேரி நம்பியை  பஜிக்கிறேன்.

  • கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)

ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

யாருடைய ஸ்ரீஸூக்திகள் வேதம் என்கிற பெண்ணுடைய கழுத்துக்கு மங்கள ஸூத்ரம் போன்று இருக்கிறதோ, அந்த கூரத்தாழ்வானை வணங்குகிறோம்.

  • முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர், முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

  • அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை  பரணி)

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர், ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

  • கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)

ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர், ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

  • கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)

ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர் ஆகிய ப்ரணதார்த்திஹர குரு கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

  • வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில் நிலை நின்றவர் ஆகிய சாலக்ராமாசார்யர் வடுகநம்பியைத் தொழுகிறேன்.

  • வங்கிபுரத்து நம்பி

பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

பாரத்வாஜ  குலத்திலகர், எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர், வங்கிபுரத் தலைவர்  க்ருபாநிதியாகிய வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

  • சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)

நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக்  கடல் என்னலாம்படி அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

  • பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி நம்பெருமாளைக் காப்பவர், ராமாநுசர்க்கு  ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாகப் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

  • திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )

த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர், மஹா மேதாவியான குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

  • எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)

ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது? அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

  • அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர், தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

  • திருவரங்கத்து அமுதனார் (பங்குனி  ஹஸ்தம்)

ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர், ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட திருவரங்கத்து அமுத்தனாரிடம் புகல்  அடைகிறேன்.

  • நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது  ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்  நடாதூர் அம்மாள் எனும் வரதாசார்யரை வணங்குகிறேன்.

  • வேதவ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)

பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும், ஆழ்வானின் திருக்குமாரரும், பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும் வேதவ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

  • கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)

ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது  காவலரும் ஞான, பக்திக்கடலுமான ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

  • ச்ருத ப்ரகாசிகா பட்டர்

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ, அந்தக் கூர குலத்தோன்றல்,  மஹா ஞானி சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

  • பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

  • ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய) வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

  • ஈயுண்ணி பத்மநாபப்  பெருமாள் (ஸ்வாதி)

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

  • நாலூர்ப் பிள்ளை (பூசம்)

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், எம்பெருமானார் சிஷ்யரான எச்சான் வம்சத் திலகர், திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

  • நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)

நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

நாலூர்ப் பிள்ளை எனும் ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர் தேவராஜகுரு ஆகிய மஹா குணசாலி நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

  • நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர், கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான நடுவில் திருவீதிப்  பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

  • பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)

ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான எனது ஆசார்யர் பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

  • அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)

த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர் ஸ்ரீ கிருஷ்ணர் எனும் வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

  • நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)

ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும் கதிரவன்போல் விளங்கச்  செய்பவர், எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர், அபயப்ரத ராஜர் பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர் நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

  • வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் அழகிய மணவாள முனியின் திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

  • கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)

லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன், கல குண ம்பன்னரான கூர  குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

  • விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)

துலாSஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர், ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

  • வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப்  பண்ணுகிறேன்.

  • திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)

ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஆசார்ய ஹ்ருதய பொருளை விரித்துரைத்தவர் ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

மாமுனிகளின் காலத்திலும் அதற்குப் பிற்பட்டும், பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்தனர் (மேலும் பலர் உள்ளனர்):

  • பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

மாமுனிகளை  எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும், அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

  • பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர், வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

  • கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சரண் புக்கவரான வரத நாராயண குரு எனும் கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

  • ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், மணவாள மாமுனிகள் கருணைக்குப் பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

  • எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும் மங்கள ஸ்வபாவருமான தேவராஜ குரு என்கிற எறும்பி  அப்பாவை வணங்குகிறேன்.

  • அப்பிள்ளை

காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மணவாள மாமுனிகள் திருவடித்த தாமரைகளில் வண்டு  போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர் ப்ரணதார்த்திஹர குரு என்கிற அப்பிள்ளையை வணங்குகிறேன்.

  • அப்பிள்ளார்

காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த ராமானுஜ குரு என்கிற அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

  • கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)

வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம்  ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், மாமுனிகள் கருணையைப் பெற்றவரும் குண ரத்நக் கடலுமான கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

  • ஸ்ரீபெரும்புதூர்  ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)

ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு  போன்றவர், பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர், வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

  • அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)

ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர், வாதூல வரதாசார்யர் என்கிற அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

  • பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், மாமுனிகளிடம் பரம பக்தர், யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர், லோகார்ய முனி என்கிற பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

  • திருமழிசை அண்ணா அப்பங்கார்  (ஆனி அவிட்டம்)

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு  போன்றவர், அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், வாதூல வீரராகவர்  என்றும் அண்ணா அப்பங்கார்  என்றும்  பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.   .

  • அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார்  ஜீயர் (ஆவணி ரோஹிணி)

ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், சேனை முதலியார் அம்சர், அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில் கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

பகவத் விஷய காலக்ஷேபத்தின் பொழுது அநுஸந்திக்கப்படும் தனியங்கள்  – http://divyaprabandham.koyil.org/index.php/2015/03/bhagavath-vishayam-thaniyans/ .

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
அடியேன் ஸாரதி ராமனுஜ தாஸன்

ஆதாரம் : https://acharyas.koyil.org/index.php/thanians/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org