நாயனாராச்சான் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் சித்திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்

ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை

சிஷ்யர்கள் : வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ ரங்காசார்யார், பரகாலதாஸர் மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை : சரமோபாய நிர்ணயம் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html), அணுத்வ புருஷகாரத்வ ஸமர்த்தனம், ஞானார்ணவம், முக்த போகாவளி, ஆளவந்தாரின் சது:ச்லோகீ வ்யாக்யானம், பெரியவாச்சான் பிள்ளையின் விஷ்ணு சேஷி ச்லோகத்திற்கு வ்யாக்யானம், தத்வத்ரய விவரணம், கைவல்ய நிர்ணயம் மற்றும் பல.

நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்வீகார புத்ரர் (வளர்ப்புப் பிள்ளை) ஆவார். இவருக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (ஸுந்தரவர ராஜாசார்யார்) என்ற திருநாமம் சூட்டப்பட்டது. மேலும் பரகால தாஸரின் பரகால நல்லான் ரஹஸ்யத்தில் ஸௌம்யவரேஸ்வரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் இவர் “ஸ்ரீ ரங்கராஜ தீக்ஷிதர்” என்றும், நன்கு தேர்ந்த பண்டிதராக அடையாளம் காட்டப்படுகிறார். இவர் நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயக் கொள்கைகளை நிலை நாட்ட மிகவும் அதிகாரப்பூர்வமான விதத்தில் பல க்ரந்தங்களை எழுதியுள்ளார். பிள்ளை லோகாசார்யார் மற்றும் அழகிய மணவாள பெருமாள் நாயனார் போன்றோர் வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்தார்.

இவர் அருளிச் செய்தவை எல்லாம் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரார்த்தங்களை வெளிக் கொணர்வதாக அமைந்துள்ளது. இவர் அருளிச் செய்த சரமோபாய நிர்ணயம் எம்பெருமானாரின் பெரும் புகழை காட்டுவது மட்டுமல்லாமல், நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருக்கு உள்ள சிறப்பான நிலையையும் காட்டுவதாக உள்ளது. இவருடைய சது:ச்லோகீ வ்யாக்யானத்தில் பெரிய பிராட்டியின் ஸ்வரூபத்தை இவர் மிகவும் விரிவாக விளக்கியுள்ளார்.

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யரான யாமுனாசார்யர் தாம் எழுதிய ப்ரமேய ரத்னத்தில், நாயனாராச்சான் பிள்ளை சிறு பிராயத்தில் இருக்கும் பொழுது முக்த போகாவளியை எழுதியதாகவும், அதை பெரியவாச்சான் பிள்ளையிடம் காண்பித்ததாகவும் கூறியுள்ளார். முக்த போகாவளியின் ஆழ்ந்த அர்ததங்களையும் கருத்துக்களையும் கண்ட பெரியவாச்சான் பிள்ளை, அதை மிகவும் புகழ்ந்து நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரத்தை மேலும் அவருக்கு விவரமாக கற்பித்தார்.

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ ரங்காசார்யர், பரகால தாஸர் ஆகியோர் பெரியவாச்சான் பிள்ளையின் சிஷ்யர்களாக இருப்பினும் பகவத் விஷயங்களை நாயனாராச்சான் பிள்ளையிடமிருந்தே கற்றுக் கொண்டனர்.

இது வரை நாம், நாயனாராச்சான் பிள்ளையின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் நன்கு கற்றறிந்த பண்டிதரும் பெரியவாச்சான் பிள்ளையின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவரும் ஆவார். நாமும் இது போன்று சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள அவரது திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்

ச்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும்
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/21/nayanarachan-pillai-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org