நடாதூர் அம்மாள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

engaLazhwanஎங்களாழ்வானின் திருவடித் தாமரைகளில் நடாதூரம்மாள்

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.

ஆசார்யன்: எங்களாழ்வான்.

சிஷ்யர்கள்: ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.

பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.

அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் (கீழ்கண்ட வலைத்தளத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது- http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html), கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.

காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கு தினமும்  இளம் சூடான பாலமுது  ஸமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார் . எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும்  செய்து வந்ததால், தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார் .

அம்மாள் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம் ) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் அது என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான்  “நான்” செத்தவுடன் திரும்பி வா என்று அனுப்பிவிட்டார் . அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் நடாதூராழ்வான்  சொன்னார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் (தாசன் ) என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்”. இந்த ஸம்ப்ரதாயத்தைப் புரிந்து கொண்டு    அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார் . எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக் கொண்டு அவர்க்கு எல்லா சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார். நடாதூரம்மாளின் ஆசார்யனாக இருந்து அவரைச் சிறந்த அறிஞர் ஆக்கியதால் எங்களாழ்வான்  “அம்மாள் ஆசார்யன்” என்று அறியப்படுகிறார்.

அம்மாளின் பிரதான சிஷ்யர் ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன ஸூரி – வேத வ்யாஸ பட்டரின் பேரன் ) ஆவார்.  இவர் அம்மாளிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தைக் கற்ற பிறகு ச்ருத ப்ரகாஸிகை என்னும் புகழ் பெற்ற விளக்கவுரையையும், வேதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் சரணாகதி கத்யத்திற்கும் விளக்கவுரைகளை அருளிச் செய்தார்.

ஒருமுறை அம்மாள் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு  ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். பக்தி யோகம் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறினர். அம்மாளும் அது கேட்டு ப்ரபத்தியை ப் பற்றி விளக்கினார். அவர்களும் ப்ரப்பத்தி  நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்றார்கள். அப்பொழுது அம்மாள்  ” எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருந்தால் நீங்கள் உய்வடையலாம்” என்று  கூறினார்.

இதே போன்ற சம்பவம் ஒன்று சரமோபாய நிர்ணயத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

நடாதூரம்மாள் சில ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக்  கொண்டிருந்தார். அச்சயமத்தில் அவர்களில் சிலர் அம்மாளிடம்  ” ஜீவாத்மாவினால் பக்தி யோகத்தை கடைபிடிக்க முடியாது (அதற்கு தேவையான ஆண் என்ற அதிகாரத்துவம் , த்ரைவர்ணிகர் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய என்ற வர்ணங்கள்) என்னும் அதிகாரம், மேலும் இடைவிடாது எம்பெருமானை த்யானித்தும் , தொண்டு செய்துகொண்டும் மற்றும்  பல), ப்ரபத்தி செய்ய முடியாது தடுக்கும் ஸ்வரூபம் (எம்பெருமானையே சார்ந்திருக்கும் ஜீவாத்மா இந்தச் சார்ந்திருக்கும் தன்மைக்கு எதிராக, தானே இலக்குக்காக எதனையும் செய்யும் குணம்) என்ற இந்த சூழ்நிலைகளில் ஜீவாத்மா எவ்வாறு தன்னுடைய இலக்கை அடைய முடியும்?” என்று கேட்டனர். ” எவர்களால் இதைக் கடைபிடிக்க முடியவில்லையோ,  அவர்களுக்கு  எம்பெருமானாரது அபிமானமே இறுதியான வழி, இதைத் தவிர வேறு வழியில்லை, நான் இதை நிச்சயமாக நம்புகிறேன் ” என்று நடாதூரம்மாள் பதிலளித்தார்.  அம்மாளுடைய சரம உபதேசங்களை விளக்கும் பிரபலமான ச்லோகம்,  பின்வருமாறு:

ப்ரயாண காலே சதுரச் ச்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய
பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்

நடாதூரம்மாளின் இறுதிக் காலத்தில் அவரின் சிஷ்யர்கள் அவரிடம் சென்று எங்களுக்குப் புகலிடம்  என்ன என்று கேட்க அதற்கு நடாதூரம்மாள் “பக்தியும் ப்ரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்திற்கு உகந்தது இல்லை, எம்பெருமானாரையே அடைக்கலம் புகுந்து அவரையே முழுமையாக சார்ந்து இருங்கள்; உங்களுடைய குறிக்கோள் நிறைவேறிவிடும்” என்று கூறினார்.

வார்த்தாமாலையில் சில இடங்களில் நாடாதூரம்மாளை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்போது அவற்றை நாம் காண்போம்.

 • 118 – எங்களாழ்வான் நடாதூரம்மாளுக்குச் சரமச்லோகத்தின் அர்த்தத்தை விளக்கிக் கொண்டிருந்தார். “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய“- என்ற ச்லோகத்தின் பகுதியை எங்களாழ்வான் விளக்கிக் கொண்டிருக்கும் வேளையில், “சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து தர்மங்களையும் (உபாயங்களை) ஸ்வதந்த்ரமாகப் புறக்கணித்து எதற்காக எம்பெருமான் இப்படிக் கூறியுள்ளார்” என்று நடாதூரம்மாள் வியந்தார். இது பகவானுடைய உண்மை ஸ்வரூபம் – மற்றும் அவர் முழு ஸ்வாதந்திரியம் உள்ளவர் ஆவார்- ஆதலால் அவர் கூறுவது முற்றும் பொருந்தும் என்று எங்களாழ்வான் பதிலளித்தார். மேலும்  “எம்பெருமான் ஜீவாத்மாவை அதன்  இயற்கைக்கு எதிரான  மற்ற உபாயங்கள் மேற்கொள்ளுவதிலிருந்து விடுவிக்கிறார், ஏனென்றால்  பகவானையே முற்றிலும் சார்ந்திருக்கும் ஜீவாத்மாவுக்கு, அந்த பகவானையே  உபாயமாக கொள்ளுவது மிக பொருந்தும்” என்றும் அவர் கூறினார். இதிலிருந்து  பகவானுடைய வார்த்தைகள் முற்றிலும் சரியே என்று எங்களாழ்வான் உரைக்கிறார்.
 • 198 – ஒருமுறை நடாதூரம்மாளும் ஆளிப் பிள்ளான் என்ற ஸ்ரீவைஷ்ணவரும் (அப்ராஹ்மண ஸ்ரீவைஷ்ணவர் அல்லது ஆசார்ய புருஷர் அல்லாதவர்) சேர்ந்து ப்ரசாதம் சாப்பிடும் பொழுது பெருங்கூர்ப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர் அவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் சுதந்திரமாகப் பழகுவதற்கும், நான் தற்போது கேட்ட பொதுவான விதிமுறைகளான வர்ணாச்ரம தர்மத்தை எப்போதும் மதிக்கவேண்டும் என்ற சாரத்தை முழுவதுமாக அடியேன் இழந்தித்திருப்பேன் என்று உரைத்தார் . அதற்கு அம்மாள் “உண்மையான ஆசார்யனின் தொடர்பு உள்ள யாராயினும்/எதுவாயினும் , அவர்களுடன்/அவற்றுடன் நாமும் தொடர்பு உள்ளவராக இருக்க வேண்டும். ஆதலால் இப்பொழுது அனுஷ்டானத்துடன் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் பழகுவது கூட பூர்வாசார்யர்கள் விளக்கியது போல் பாகவத தர்மத்தின் சிறப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்” என்று பதிலுரைத்தார் .

பிள்ளை லோகாசார்யரின் தத்வத்ரயம் சூத்திரம் 35 ல் மணவாளமாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், அம்மாளின் தத்வ சாரத்திலிருந்து ஒரு அழகான ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார் – ஜீவ ஸ்வதந்த்ரியம் (எம்பெருமான் ஜீவாத்மாவிற்கு அருளிய ஸ்வதந்திரம் )ஒவ்வொரு செயலின் முதல் நினைவாயும், அதை எவ்வாறு எம்பெருமான்  ஜீவாத்மாவிற்கு முதல் நினைவாய் இருந்து ஒவ்வொரு செயலிலும் வழி காட்டுகிறான் என்பதையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார் .

இதுவரை நடாதூரம்மாளின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். அவர் முற்றும் கற்ற அறிஞர் மேலும் எங்களாழ்வானின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.  நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

நடாதூரம்மாளின் தனியன்:

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/05/nadathur-ammal-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

3 thoughts on “நடாதூர் அம்மாள்”

 1. சுவாமிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கம்.
  வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமிகளின் உபந்யாசத்தில் சுவாமி நடாதூர் அம்மாள் பற்றிய ஒரு சம்பவத்தைக் கேட்டேன். இணையத்தில் அவர் பற்றி தேடியதும், தங்களின் கட்டுரை மிகவும் விளக்கமாக, திருப்தியாக இருந்தது. தங்களின் சேவை அடியேனை மிகவும் வியக்க வைத்தது. எம்பெருமானாரின் திருவுள்ளப்படி தாங்கள் மேற்கொண்டுள்ள இத்தொண்டு, இன்னும் வளர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
  அடியேன்
  தெய்வநாயகன் ராமானுஜ தாஸன் (மு.இசக்கியப்பன்),
  வானமாமலை (நாங்குநேரி),
  திருநெல்வேலி மாவட்டம்.

Comments are closed.