எறும்பியப்பா

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

eRumbiappA-kAnchiஎறும்பி அப்பா – காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

எறும்பி அப்பா ஸம்ப்ரதாய ரக்ஷணார்த்தமாக மாமுனிகள் நியமித்த அஷ்ட திக் கஜங்களில் ஒருவர். இவர் இயற்பெயர் தேவராஜன்.  எறும்பி க்ராமத்தில் தம் சிஷ்டாசாரத்தோடு வாழ்ந்திருந்த அப்பா, மாமுனிகள் புகழ் கேட்டு அவரால் ஈர்க்கப்பட்டார். மாமுனிகள் காலமே நம் ஆசார்யர்களால் நல்லடிக்காலம் எனப்படுகிறது. ஏனெனில் இக்காலத்திலேயே நம் பூர்வர்கள் பாஹ்யர்கள் தொல்லையின்றி ஆசார்ய அநுக்ரஹத்தோடு பகவத் குணாநுபவத்தில் ஆழ்ந்திருக்க முடிந்தது. உதாரணமாக, எம்பெருமானார் காலத்தில் அவரே ஸ்ரீரங்கத்தை விட்டு நீங்கி மேல்நாட்டில் இருக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்ந்தன. பட்டரும் ஸ்ரீரங்கம் விட்டு ஆழ்வானின் சிஷ்யர்கள் தாமே பட்ட அபசாரங்களால் வெறுப்போடு திருக்கோட்டியூரில் இருக்க வேண்டியதாயிற்று. பிள்ளை லோகாசார்யரோ நம்பெருமாளோடு ஸ்ரீரங்கம் நீங்கி முகமதியர் படையெடுப்பால் பாண்டி நாடு சென்றார். மாமுனிகள் பெரிய  ஸம்ப்ரதாய நிர்வாகம் பண்ணியருளியபோது ஆசார்ய  புருஷர்கள் யாவரும் மீண்டும் கோயிலில் திரண்டனர். பூர்வர்கள் கிரந்தங்கள் யாவும் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பிரசாரமும் ஏற்பட்டது. அருளிச்செயல், வ்யாக்யானங்கள் கிரந்த காலக்ஷேபங்கள் தழைத்தோங்கின.

மாமுனிகள் வைபவம் கேட்டு அவரைத் தண்டனிட கோயில் (ஸ்ரீரங்கம்) வந்த எறும்பியப்பா, மாமுனிகளின் காலக்ஷேபத்தில் திருவாய்மொழி முதல் பாசுரமான “உயர்வற” பாசுர விளக்கத்தில் எம்பெருமான் பரத்வம் கேட்டு அதில் வேத வேதாந்தங்கள் செறிவுக்கு நெகிழ்ந்தார். மாமுனிகள் அவரைத் ததீயாராதனத்துக்கு எழுந்தருளப் பண்ண, அப்பா சந்யாசி அளிக்கும் ஆஹாரம் நிஷேதம் எனும் சாமான்ய சாஸ்த்ரம் காட்டி அவ்வுணவுண்டால் தோஷம் நீங்கச் சாந்த்ராயண வ்ரதம் செய்யவேணும் என்று நினைத்து திருமாலையில் ஆழ்வார் 41ம் பாசுரத்தில் “தருவரேல் புனிதமன்றே” என்று அருளிய விசேஷ தர்மத்தை உணராது  மறுத்து தன் ஊர் திரும்பினார். காலையில் அநுஷ்டானங்கள் முடித்து அவர் தம் திருவாராதனத்துக்குக் கோயிலாழ்வார் திறக்கமுயல, அது முடியாமல் போக, தம் பெருமாளான சக்ரவர்த்தித் திருமகனைத் தொழாத வருத்தத்தால் ப்ரசாதம் உண்ணாமல் உறங்க, கனவில் அவன் வந்து மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் ஆதலால் அவரைச் சரண் புக்கு உய்வுறும் என நியமிக்க, அப்பா மீண்டும் விரைந்து கோயிலேறச் சென்று மாமுனிகளிடம் பிழை பொறுத்தருள  வேண்டி, கோயில் கந்தாடையண்ணன் புருஷகாரத்தால் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, சிஷ்யராகி அஷ்ட திக் கஜங்களில் ஒருவரும் ஆனார்.

eRumbiappA's srIrAma-parivArஎறும்பி அப்பா திருவாராதனம் – ஸ்ரீ ராம பரிவாரம், காஞ்சீபுரம் அப்பன் ஸ்வாமி திருமாளிகை

இவ்வாறு சரண் புகுந்தபோது மாமுனிகள் தினசரி அனுஷ்டானங்களை அழகிய ச்லோகங்களினால் வரவரமுனி தினசர்யா என அழகிய பிற்காலத்தில் நூலாக்கினார்.

மாமுனிகளோடு சில காலம் இருந்து, பின் எறும்பி  கிராமம் திரும்பிய எறும்பி அப்பா தம் கைங்கர்யங்களைத் தொடர்ந்தார். தாம் எழுதிய வரவரமுனி தினசர்யா ப்ரபந்தத்தை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருந்த மாமுனிகளிடம் ஸமர்ப்பிக்க, மாமுனிகள் உகந்து அவர் நிஷ்டையைக் கொண்டாடினார். மீண்டும் மாமுனிகள் அழைத்தருள, கோயில் சென்று நம்பெருமாள் முன்பே மாமுனிகள் செய்தருளிய ஈடு பகவத் விஷய காலக்ஷேபங்களில் அந்வயித்தார்.

தம் ஊர் திரும்பிய அப்பா மாமுனிகள் பரமபதம் எய்தியது அறிந்து மிக துக்கித்து எம்பெருமானிடம் தம்மையும் திருவடி சேர்த்தருளப்  பிரார்த்தித்தார் .

அப்பாவின் பெரிய க்ருபா விசேஷம் அவர் அருளிச் செய்த முற்றிலும் பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளையே அடிப்படையாகக் கொண்ட “விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” எனும் திவ்ய க்ரந்தமாகும். சிஷ்யர்கள் மனதில் இருந்த பல ஸாம்ப்ரதாயிக, சாஸ்த்ரார்த்த ஐயங்கள் குழப்பங்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் பூர்வர்களின் தீர்வுகளை அவர்தம் திருவாக்குக்களாலேயே இந்த நூலில் அப்பா தெரிவித்துள்ளார். ஸம்ஸாரத்தில் வைராக்யத்தையும், பூர்வாசார்யர்களின் ஞான அனுஷ்டானங்களில் ஈடுபாட்டையும், அவற்றை நம் வாழக்கையில் செயல் படுத்துவதின் முக்கியத்துவத்தை பூர்வர்கள் வாக்கினாலேயே இதில் நிரூபித்துள்ளார்.

அப்பாவின் பூர்வ உத்தர தினசர்யா ச்லோகங்களை அனுசந்தித்தபின்னரே ஆஹாரமுட்கொள்ளவேனும் என்று ஆன்றோர் வாக்கு. அந்த ச்லோகங்கள் கல்லும் கறையும்படி உள்ளன, http://divyaprabandham.koyil.org/index.php/2015/05/sri-varavaramuni-dhinacharya-tamil/.

மாமுனிகளை எப்பொழுதும் த்யானிக்கும் எறும்பி அப்பாவை நாம் த்யானிப்போம்.

எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2012/10/27/erumbiappa-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org