பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம:

OLYMPUS DIGITAL CAMERA

திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம்

அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.

அருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை

திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை

கோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பரவஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.

மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்)  என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற  மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.

பட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ச்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் சுவீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் சுவீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

மாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதேபோல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

மாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய  தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம்போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.

மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை நாம் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் விசேஷமான வைபவத்தில் சிலவற்றை அனுபவித்தோம். இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவதநிஷ்டையைப் பெறுவோம்.

பரவஸ்து பட்டர்பிரான் தனியன்:

ரம்யஜாமாத்ருயோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/06/01/paravasthu-pattarpiran-jiyar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

1 thought on “பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்”

Comments are closed.