ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியில் ஈயுண்ணி மாதவப் பெருமாள்
திருநக்ஷத்ரம்: கார்த்திகை பரணி (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் ஹஸ்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : நம்பிள்ளை
சிஷ்யர்கள்: ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -அவருடைய திருக்குமாரன்)
ஈயுண்ணி மாதவப் பெருமாள் நம்பிள்ளையின் ப்ரியமான சிஷ்யர். அவர் சிரியாழ்வான் அப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். இவர் மூலமாகத்தான் திருவாய்மொழியின் ஈடு மஹா வ்யாக்யானம் மணவாள மாமுனிகளுக்குக் கிடைத்தது.
“ஈதல்” என்றால் தமிழில் கொடுத்தல், தர்மம், கருணை, அன்பு என்று பலவேறு அர்த்தங்கள் உடையது. “உண்ணுதல்” என்றால் சாப்பிடுதல் என்று பொருள். ஈயுண்ணி என்றால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவு கொடுத்த பின்பே தான் உண்ணுபவர் என்று பொருள்.
நம்பிள்ளை ஒரு சமயம் பகவத் காலக்ஷேப விஷயங்களை எல்லோருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அந்தக் காலமே ஸ்ரீரங்கத்தின் பொற்காலம் என்று கூறலாம். ஏனென்றால் நம்பிள்ளையின் சிறந்த ஞானத்தாலே அங்கு எல்லோரும் பகவத் அனுபவங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருந்தனர். எம்பருமானின் எல்லையற்ற கருணையாலும், அவருடைய ஆசார்யனின் (நஞ்சீயர்) பரிபூர்ண க்ருபையாலும் நம்பிள்ளை மிகச் சிறந்த ஞானத்தைப் பெற்று இருந்தார். அவர், ஆழ்வார்கள் பாசுரங்களில் கூறப்பட்ட அழகான விஷயங்களை எல்லாம், ஸ்ரீ ராமாயணத்திலிருந்தும் இதிகாச புராணங்களிலிருந்தும் உதாரணங்களை எடுத்துக் காட்டி மிக அழகாக விளக்கினார்.
நம்பிள்ளையின் மற்றுமோர் பிராதான சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளை. வடக்குத் திருவீதிப் பிள்ளை தன் ஆசார்யன் நம்பிள்ளையிடம் பகலில் கேட்டறிந்து கொண்ட திருவாய்மொழி காலக்ஷேபங்களை எல்லாம் தினமும் இரவு நேரத்தில் பதிவெடுத்துக் கொண்டிருப்பார். தனது காலக்ஷேபத்தை முடித்துக் கொண்ட நம்பிள்ளை ஒரு நாள் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருமாளிகைக்குச் சென்றார். அங்கே ஓலைச் சுவடிகளில் தன்னுடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தின் போது ,தான் உரைத்த வார்த்தைகளை அக்ஷரம் பிசகாமல் பூரணமாக வடக்குத் திருவீதிப் பிள்ளை பதிவு பண்ணியிருந்ததைப் பார்த்து மிகுந்த ஆனந்தம் அடைந்தார். ஆனாலும் தன்னுடைய உத்தரவு இல்லாமல் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதி இருந்ததைப் பார்த்து கொஞ்சம் வருத்தம் அடைந்தார். அவர் தன்னுடைய அபிப்ராய பேதத்தை வெளியிட்டாலும் வடக்கு திருவீதிப் பிள்ளையின் ஆழ்ந்த விச்வாஸத்தால் தேறி ஸமாதானம் அடைந்தார். திருவாய்மொழியின் இந்த வ்யாக்யானமே “ஈடு 36000 படி” என்று பிரபலமானது. அதன் பின்னால் இந்த ஓலைப் பிரதிகளை ஈயுண்ணி மாதவப்பெருமாளிடம் கொடுத்து எதிர்கால சந்ததியர்களுக்குக் கற்பிக்குமாறு பணித்தார். இந்த சரித்திரம் https://acharyas.koyil.org/index.php/2015/09/23/vadakku-thiruvidhi-pillai-tamil/ என்ற இணைய தளத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஈயுண்ணி மாதவப் பெருமாள் தன்னுடைய திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு இவைகளை கற்றுக் கொடுத்தார். பத்மநாபப் பெருமாளுடைய திருநக்ஷத்ரம் ஸ்வாதி. பத்மநாபப் பெருமாள் தன்னுடைய சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு இதை உபதேசித்தார்.
நாலூர் பிள்ளை நாலூரானின் (கூரத்தாழ்வானின் சிஷ்யர்) வம்சத்தவர். இவர் மேல்பாடகம் (தொண்டை நாடு) என்ற ஊரில் அவதரித்தார். இவருடைய திருநக்ஷத்ரம் பூசம் (புஷ்யம்). இவர் ஸுமந:கோசேலர், கோல வராகப் பெருமாள் நாயனார், ராமானுஜ தாசர், அருளாளர் திருவடி ஊன்றியவர் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய சிஷ்யர்கள் நாலூராச்சான் பிள்ளை, திருப்புளிங்குடி ஜீயர் மற்றும் திருக்கண்ணங்குடி ஜீயர் ஆவார்கள்.
திருப்புளிங்குடி ஜீயர் ஸ்ரீவைஷ்ணவ சரிதம் என்ற க்ரந்தத்தை எழுதியுள்ளார்.
நாலூர் பிள்ளையின் அபிமான சிஷ்யரும், புதல்வனும் ஆவார் நாலூராச்சான் பிள்ளை. இவருடைய திருநக்ஷத்ரம் மார்கழி பரணி. இவர் தேவராஜாச்சான் பிள்ளை, தேவேசர், தேவாதிபர் மற்றும் மேல்னாடு ஆச்சான் பிள்ளை என்றும் அழைக்கப்பட்டார். நாலூராச்சான் பிள்ளை அவருடைய தகப்பனாரின் திருவடித் தாமரைகளிலே ஈடு 36000 படி கற்றுக் கொண்டார். இவருடைய சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆய், இளம்பிளிசைப் பிள்ளை மற்றும் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்கள்.
நாலூர் பிள்ளை மற்றும் நாலூராச்சான் பிள்ளை இருவரும் திருநாராயணபுரத்தில் தான் வசித்து வந்தார்கள்.
திருவாய்மொழிப் பிள்ளை குரகுலோத்தம தாஸரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கான அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ள காஞ்சிபுரத்திற்குச் சென்றார். அந்த சமயம் நாலூர் பிள்ளை மற்றும் நாலூராச்சான் பிள்ளை இருவரும் காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். மூவரும் தேவப்பெருமாளின் முன் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது அர்ச்சகர் வாயிலாக தேவப் பெருமாள் அவர்களுக்கு பிள்ளை லோகாசார்யார் எம்பெருமானின் அவதாரமே என்றும், திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானத்தைக் கற்றுக் கொடுக்குமாறும் நாலூர் பிள்ளைக்கு ஆணையிடுகிறார். அப்போது தன்னால் இது முடியுமோ (வயோதிகத்தால்) என தேவப் பெருமாளை வினவ அதற்கு அவர் “அப்படியென்றால் உம்முடைய குமாரர் (நாலூராச்சான் பிள்ளை) கற்றுக் கொடுக்கட்டும் ஏன் என்றால் அவர் சொல்வதும் நீர் சொல்வதும் ஒன்றே” என்று கூறினார். அதன் பின்னால் திருவாய்மொழிப் பிள்ளை நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ஈடு வ்யாக்யானத்தைக் கற்றுக் கொண்டு ஆழ்வார் திருநகரிக்குத் திரும்பி அங்கு அதை மணவாள மாமுனிகளுக்குக் கற்றுக் கொடுத்தார். மாமுனிகளே பின்பு “ஈட்டுப் பெருக்கர் ” (ஈடு வ்யாக்யானத்தைபோற்றி வளர்த்தவர்) என மிகவும் பிரபலமாக விளங்கினார்.
நாலூர் பிள்ளையோ நாலூராச்சான் பிள்ளையோ திருமொழிக்கும் பெரியாழ்வார் திருமொழிக்கும் வ்யாக்யானம் அருளியுள்ளார்கள் என்று சொல்வதுண்டு.
மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்னமாலை 48, 49 பாசுரங்களில் ஈடு வ்யாக்யானத்தைப் பற்றி அழகாக விளக்குகிறார்.
- 48 வது பாசுரத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு வ்யாக்யானத்தை பதிவு செய்ததையும், நம்பிள்ளை அதை எடுத்து ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார்.
- 49 வது பாசுரத்தில் ஈயுண்ணி மாதவப் பெருமாளிடமிருந்து அவரது குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் கற்றுக் கொண்டதையும் அவரிடமிருந்து நாலூர் பிள்ளை மற்றும் நாலூராச்சான் பிள்ளை கற்றுக் கொண்டு பின்பு அவர்களிடமிருந்து திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் திருநாராயணத்து ஆய் போன்றோர் கற்றுக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
இப்படியாக நாம் இதுவரை ஈயுண்ணி மாதவப் பெருமாளைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். அவர் மிகப் பெரிய பண்டிதராகவும் நம்பிள்ளையின் ஆத்ம சிஷ்யராகவும் விளங்கினார். நாமும் நமக்கும் அவரைப் போன்று சிறிதளவாவது பாகவத நிஷ்டை கிடைக்க வேண்டும் என்று அவருடைய திருவடித் தாமரைகளில் பிரார்த்திப்போமாக. இந்தப் பதிவில் மேலும் நாம் எவ்வாறு ஈடு வ்யாக்யானம் நம்பிள்ளையிடமிருந்து மணவாமாமுனிகளுக்குக் கிடைத்தது என்றும் பார்த்தோம்.
ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||
ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||
நாலூர் பிள்ளை தனியன்
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||
நாலுராச்சான் பிள்ளை தனியன்
நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||
அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி
ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/21/eeynni-madhava-perumal-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Dhanyosmi!