பெரிய திருமலை நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

periya-thirumalai-nambi

திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி

அவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்)

ஆசார்யன்: ஆளவந்தார்

சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர்.

பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.

ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.

திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார். இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார். தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.

கோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்றபொது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி, காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார். கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.

உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்) அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார். கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள். கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார். நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார். சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை (இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது) பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார். கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார். அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார். கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது. அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார். அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏரி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார். நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார். நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார். கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச்செயலைக் கற்றுக்கொடுத்தார்.

எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார். நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால்,  எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க, அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார். எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.

ptm-ramayana-goshtiபெரிய திருமலை நம்பியின் ஸ்ரீ ராமாயண காலக்ஷேப கோஷ்டி

ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார். ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார். காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று  கேட்டுகொண்டார். அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள். ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார். ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர் எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். இப்படி அவருடைய அர்ப்பணிப்பு இருந்தது. இந்த சரித்திரத்தை மிகவும் விரிவாக இந்த வலைத்தலத்தில் https://acharyas.koyil.org/index.php/2015/07/23/embar-tamil/ பார்க்கலாம். பின்னர் கோவிந்தப்  பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.

நம்பியினுடைய வைபவம் மற்றும் அவருடைய விளக்கங்கள் நமது வ்யாக்யானங்களில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

  • திருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார். கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால், இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும். அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.
  • நாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும் நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது. ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூதுவிடுகிறாள். ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார். நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்றுவைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.
  • திருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா? (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்) அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா? என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார் என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.
  • திருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது, ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார். அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார். கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை. பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார். நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார். அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.
  • திருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால் தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார் (தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்). தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார். இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார். தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று, தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

திருமலை நம்பி எம்பெருமானாருடைய பெருமைகளை நிலை நாட்டியதை விளக்கமாக சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் பார்க்கலாம். அதை இந்த வளைத்தளத்தில் பார்க்கலாம் – http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html.

இதன் மூலம் நாம் நம்பியினுடைய வைபவத்தை சிறிது அனுபவித்தோம்.

இப்படி ஆளவந்தார் மீதும், எம்பெருமானார் மீதும் பற்று வைத்துள்ளா திருமலை நம்பியினுடைய திருவடித்தாமரைகளை நாமும் வணங்கி வாழ்சி பெறுவோம்.

குறிப்பு : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாழி திருநாமத்தில்  வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.

பெரிய திருமலை நம்பியின் தனியன்

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/03/01/periya-thirumalai-nambi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “பெரிய திருமலை நம்பி”

Comments are closed.