திவ்ய தம்பதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

கீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (http://acharyas.koyil.org/index.php/2015/03/14/introduction-2-tamil/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றித்  தெரிந்து கொள்வோம்.

periyaperumAL

        • ஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் ஶிஷ்யனுக்கும், அந்த ஶிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய ஶிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய த்ரயம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பெரிய பெருமாள்:

திருநக்ஷத்ரம்: பங்குனி, ரோஹிணி

அருளிய சாஸ்த்ரம்: பகவத் கீதை, ஸ்ரீஶைலேச தயாபாத்ரம் தனியன்

எம்பெருமான் தன்னுடைய எல்லையில்லாத கருணையாலே, இந்த ஓராண்வழி ஆசார்ய பரம்பரையில், தானே ப்ரதமாசார்யனாக வரித்து பெரிய பிராட்டியாருக்கு ரஹஸ்ய த்ரயத்தை உபதேசித்தருள்கிறான்.

ஶாஸ்த்ரம் எம்பெருமானை நிரங்குஶ ஸ்வதந்த்ரன், ஸர்வசக்தன், ஸர்வஜ்ஞன், ஸர்வவ்யாபகன் என்று பலவாறாக அவனுடைய கல்யாண குணங்களை கோஷிக்கிறது. நிரங்குஶ என்றால் எத்தாலும் நிறுத்தவோ தடுக்கவோ முடியாது என்று பொருள். இந்த ஸத்குணங்களும் ஸ்வாதந்த்ரியமுமே தன்னைச் சரணடைந்தவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பதற்கு ஹேதுவாகிறது.

நாராயண பரம் ப்ரம்ம தத்வம் நாராயண: பர:” என்று ஶாஸ்த்ரம் அறிவித்த அந்த பரம்பொருள் நாராயணனே, பெரிய பெருமாளாக ஸ்ரீரங்க விமானத்துடன், ப்ரம்மா வழிபடுவதற்காக ஸத்யலோகம் வந்தடைந்தார். பிறகு இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த ரகுகுல மன்னர்கள் வழிபடுவதற்காக அயோத்தி வந்தடைந்தார். இராவண வதம் முடிந்து, ஸீதா ராம பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கை திரும்பும் சமயத்தில், இராமன் தன் திருவாராதன பெருமாளான பெரிய பெருமாளை விபீஷணனுக்கு கொடுத்தான். விபீஷணன் திரும்பிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்வதற்காக ஸ்ரீரங்க விமானத்தை நிலத்தில் வைக்க, “வண்டினம் முரலும் சோலை மயிலினமாலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை” (திருமாலை) என்று ஸ்ரீரங்க அழகிலே திளைத்து எம்பெருமான் அங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினான்.

பெரிய பெருமாள் தனியன்:

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேஶயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

பெரிய பெருமாள் வாழி திருநாமம்:

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பிராட்டியார்

periyapirAttiyAr

திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்ரம்

ரஹஸ்ய த்ரயத்தில் இரண்டாம் ரஹஸ்யமான த்வய மஹாமந்த்ரத்தை எம்பெருமான் விஷ்ணு லோகத்தில் பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்தார். ஸம்ஸாரப் பெருங்கடலிலே விழுந்து வெளியேறத் தெரியாமல் தவிக்கும் ஜீவனிடம் காருண்யம், தன் ப்ரயோஜனம் என்றில்லாமல் எம்பெருமானின் ப்ரயோஜனத்திற்காகவே இருக்கும் பாரதந்த்ரியம், எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையான அநந்யார்ஹ ஶேஷத்வம் போன்ற ஆசார்யனுக்கே உரித்தான முக்கியமான ஸத்குணங்கள் நிரம்பப்பெற்ற பெரிய பிராட்டியாரே இந்த குருபரம்பரையின் இரண்டாம் ஆசார்யராக போற்றப்படுகிறாள். மற்ற ஆசார்யர்களுக்கு இவளே முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுகிறாள்.

ஸீதா பிராட்டியாக அவதரித்து இராமனை பிரிந்த போது கீழே கூறிய மூன்று குணங்களை பெரிய பிராட்டியார் வெளிப்படுத்தியருளியதை பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீவசந பூஷணத்தில் விளக்கியுள்ளார். அவற்றை மேலே காண்போம்.

  • முதல் முறையாக இராவணன் ஸீதையைக்  கவர்ந்து செல்லும்போது தனது கருணையால் அதை அனுமதிக்கிறாள். லோகமாதாவான அவள் இலங்கை சென்றால் மட்டுமே தேவர்களின் மஹிஷிகளை காப்பாற்ற முடியும் என்கிற காரணத்தினால்.
  • பட்டாபிஷேகம் ஆன பின்பு, தன் நாட்டுப் ப்ரஜைகளின் பேச்சால் கர்ப்பவதியான ஸீதையைக்  காட்டிற்கு அனுப்பினான் இராமன். அப்போதும் எம்பெருமான் கட்டளைப்படி காட்டிற்குச் சென்று தான் பரதந்த்ரை, அவன் ப்ரயோஜனத்திற்காகவே இருப்பதைக் காட்டினாள்.
  • லவ குஶர்களைப் பெற்றபின், வநவாஶம் முடிந்து இராமனை முழுவதுமாகப்  பிரிந்து பரமபதம் செல்லும்போது தன் அநந்யார்ஹ சேஷத்வத்தை, அதாவது, எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையைக் காட்டினாள்.

இப்படியாக ஓர் ஆசார்யனுக்கு உண்டான முக்கியமான குணங்களுடன் நம்மிடையே இருந்து வாழ்ந்து காட்டினாள்.

பெரிய பிராட்டியாரின் தனியன்:

நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத: |
ஈஶேஶிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

பெரிய பிராட்டியாரின் வாழி திருநாமம்:

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

அடுத்த பதிவில் ஸேனை முதலியாரை (விஷ்வக்ஸேனர்) தரிசிப்போம்.

அடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2012/08/17/divya-dhampathi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

29 thoughts on “திவ்ய தம்பதி”

  1. பெரிய பெருமாள் திருநக்ஷத்ரம் பங்குனி ரோஹிணி என்று நித்யாநுஸந்தானப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஶ்ரீக்ருஷ்ணனின் திருநக்ஷத்திரமான ஆவணி ரோஹிணி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே சரிதானா?

Comments are closed.