ஆளவந்தார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/24/mannakkal-nambi-tamil/) மணக்கால் நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

alavandharஆளவந்தார் – காட்டு மன்னார் கோயில்

திருநக்ஷத்ரம்: ஆடி உத்திராடம்

அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில்

ஆசார்யன்மணக்கால் நம்பி

ஶிஷ்யர்கள்: பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஶ்வராண்டான், ஜீயராண்டான் ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவபெருமாள், மாறனேறி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்க பெருமாள் அரையர் (மணக்கால் நம்பியினுடைய சிஷ்யர் மற்றும் ஆளவந்தாருடைய திருக்குமாரர்), திருக்குருகூர் தாஸர், வகுளாபரண  ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, கோவிந்த தாஶர் (வடமதுரையில் அவதரித்தவர்), நாதமுனி தாஶர் (ராஜ புரோஹிதர்), திருவரங்கத்தம்மான் (ராஜ மஹிஷி).

ஆளவந்தார் அருளிச்செய்தவை: சது:ஶ்லோகீ, ஸ்தோத்ரரத்னம், ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம், கீதார்த்த சங்ரஹம்

பரமபதித்த இடம்: திருவரங்கம்

யமுனைத்துறைவர் காட்டு மன்னார் கோயிலில் திருவவதரித்தார். இவருக்கு ஆளவந்தார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக இருக்கிறது. இவருக்கு பெரிய முதலியார், பரமாசாரியர், வாதிமதேப ஸிம்ஹேந்திரர் என்ற திருநாமங்களும் உண்டு.

ஆளவந்தார் ஈஶ்வரமுனிக்கு திருக்குமாரராகவும், ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு திருப்பேரனாராகவும் அவதரித்தார். இவர் மஹாபாஷ்யபட்டரிடம் ஸாமான்ய ஶாஸ்த்ரத்தைக் கற்றுக்கொண்டார். அந்த சமயத்தில், ராஜ புரோஹிதரான ஆக்கியாழ்வான் அவனுடைய பிரதிநிதிகளை அனுப்பித்து, அவன் தலைமை புரோஹிதராக இருப்பதால் அனைத்து புரோஹிதர்களும் அவனுக்கு வரி கட்டுமாறு கூறினான். இதை கேட்டவுடன் மஹாபாஷ்யபட்டர் வருத்தப்பட, யமுனைத்துறைவர் இந்த பிரச்சினையை தாம் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். யமுனைத்துறைவர் “அல்பமான விளம்பரத்தை விரும்பும் கவிஞனை அழித்துவிடுவேன்” என்ற ஒரு ஶ்லோகத்தை அந்த பிரதிநிதிகளிடம் கொடுத்து அனுப்பினார். இதைப் பார்த்த ஆக்கியாழ்வான் மிகவும் கோபமடைந்து, அவனது வீரர்களை அழைத்து, யமுனைத்துறைவரை ராஜாவின் தர்பாருக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். யமுனைத்துறைவர் அந்த வீரர்களிடம் “தன்னை தக்க மரியதையுடன் அழைத்தால் தான் வருவேன்” என்று கூறினார். இதைக்கேட்ட அந்த ராஜா ஒரு பல்லக்கை அனுப்ப, யமுனைத்துறைவரும் ராஜ தர்பாருக்கு வந்தார்.

வாதம்  தொடங்குவதற்கு முன், யமுனைத்துறைவர் தான் வெற்றிபெறுவார் என்று உறுதியாக ராஜ மஹிஷி ராஜாவிடம் கூறினார். அப்படி அவர் தோற்றால், ராஜ மஹிஷி ராஜாவின் சேவகியாக இருப்பதாக சவால் விட்டாள். ராஜாவும் ஆக்கியாழ்வான் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். அப்படி அவர் தோற்றால் பாதி ராஜ்யத்தை யமுனைத்துறைவருக்குத் தருவதாகக் கூறினார்.

ஆக்கியாழ்வான் தன்னுடைய வாதத்திறமையை நினைத்து, யமுனைத்துறைவர் எதைக்கூறினாலும் அதை தன்னால் மறுத்துப்பேசமுடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார். யமுனைதுறைவர் 3 கேள்விகளை கேட்டு அதை மறுத்துபேசுமாறு கூறினார்.

 • உன் தாய் மலடி அல்ல
 • இந்த ராஜா பேரரசர்
 • இந்த ராணி பதிவிரதை

இதைக் கேட்ட ஆக்கியாழ்வான் ஒரு வார்த்தையும் பேசாமல் நின்றார். ராஜா என்ன செய்வாரோ என்று பயந்து இதை அவரால் மறுத்துப்பேச முடியவில்லை. ஆனால் யமுனைத்துறைவரோ மிகச் சுலபமாக இந்த 3 கேள்விகளுக்கும் மறுத்துப்பேசி பதில் அளித்தார்.

 • ஆக்கியாழ்வனுடைய தாயார் மலடி தான். ஏனெனில் அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. (ஸாமான்ய ஶாஸ்த்ரத்தில் ஒரு குழந்தை மட்டுமே உடைய பெண்மணியை மலடி என்றே கூறுகிறது)
 • இந்த ராஜா பேரரசன் அல்ல. ஏனெனில் இவர் உலகத்தையே ஆளவில்லை, உலகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆள்கிறார்.
 • ஶாஸ்த்ரப்படி நடக்கும் திருமணங்களில், குறிப்பிட்ட சில மந்திரத்தின் மூலம் மணமகள் தேவர்களுடன் திருமணம் ஆன பின்னரே அவளுடைய கணவனுடன் திருமணம் நடக்கும். இதனால் ராஜமஹிஷி பதிவிரதை இல்லை என்று நிரூபித்தார்.

ஆக்கியாழ்வான் யமுனைத்துறைவருடைய உண்மையான திறமையை உணர்ந்தார். யமுனைத்துறைவர் ஶாஸ்த்ரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வனை தோற்கடித்து விஶிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவருக்கு ஶிஷ்யரானார். ராஜ மஹிஷி, எம்மை ஆளவந்தீரோ! என்று கூறி, யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்று பெயர் கொடுத்தார். ராஜ மஹிஷியும் அவருக்கு ஶிஷ்யை ஆனாள். ஆளவந்தாருக்கும் பாதி ராஜ்யம் கிடைக்கிறது, அவரும் தன்னை நிர்வாகப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்.

மணக்கால் நம்பி ஆளவந்தாரை எப்படி திருத்திப்பணி கொண்டார் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். மணக்கால் நம்பி ஆளவந்தாரை மறுபடியும் திருவரங்கத்திற்கு அழைத்துவந்து, நமது ஸம்பிரதாயத்திற்குத் தலைவராக நியமித்தார். அவர் திருவரங்கத்திற்கு எழுந்தருளியவுடன், ஸந்யாஸம் ஏற்றுக்கொண்டு நமது ஸம்பிரதாயத்தை பரப்பத்தொடங்கினார். பலர் இவருக்கு ஶிஷ்யர்களாக ஆனார்கள்.

மணக்கால் நம்பி, குருகைக்காவலப்பனிடமிருந்து அஷ்டாங்க யோகத்தை கற்றுக்கொள்ளுமாறு ஆளவந்தாரை நியமித்தார். ஆளவந்தார் அங்குச் சென்றபோது குருகைக் காவலப்பன் தன் யோகத்திறமையின் மூலம் பகவத் அனுபவத்தில் ஆழ்ந்திருந்தார். ஆனால் அவர் ஆளவந்தார் எழுந்தருளினதைத் தெரிந்துகொண்டார். யோகத்தில் இருக்கும் பொழுது ஆளவந்தாரை பார்ப்பதற்காக எம்பெருமான் தன் தோள்களை அழுத்தி எட்டிப்பார்க்கிறார் ஏனென்றால் ஆளவந்தார் நாதமுனிகளுடைய திருவம்ஸத்தில் (எம்பெருமானுக்கு மிகவும் ஈடுபாடு உள்ள திருவம்ஸம்) வருவதனால் என்று குருகைக் காவலப்பன் ஆளவந்தாரிடம் கூறினார். அவர் ஆளவந்தார் யோக ரகஸ்யத்தை கற்றுக்கொள்வதற்கு ஒரு நாளையும் (தான் இந்த ஸம்ஸாரத்தை விட்டு பரமபதம் செல்வதற்கு சில நாள் முன்னர்) குறித்துக் கொடுத்தார். ஆனால் அந்த நாளில் ஆளவந்தார் திருவனந்தபுரத்திற்கு மங்களாஶாஸனம்  பண்ணுவதற்கு சென்றதால் அவரால் யோக ரகஸ்யத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த நேரத்தில் ஆளவந்தாருடைய ஶிஷ்யர்களில் ஒருவரான தெய்வவாரி ஆண்டான், அவருடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஆளவந்தாரும் அங்கிருந்து திருவரங்கத்திற்குப் புறப்பட்டார். தெய்வவாரி ஆண்டான், ஆளவந்தாரைத் திருவனந்தபுரத்தில் ஸேவித்தார். தெய்வவாரி ஆண்டானுக்குத் தன் ஆசார்யனைச் ஸேவித்ததும் மிகவும் ஸந்தோஷமாக இருந்தது. தெய்வவாரி ஆண்டான், ஆளவந்தாருடன் திருவரங்கத்திற்குச் செல்ல புறப்பட்டார். உடனே ஆளவந்தார், தெய்வவாரி ஆண்டானை அனந்தஶயன எம்பெருமானைச் ஸேவிக்கச் சொல்ல, தெய்வவாரி ஆண்டான் பெருமாளை விடத் தன் ஆசார்யன் தான் முக்கியம் என்று கூறினார். அத்தனை ஆசார்ய பக்தியுடன் இருந்தார் தெய்வவாரி ஆண்டான்.

ஆளவந்தார் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகரை நியமிக்கவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுது இளையாழ்வார் (ஸ்ரீ இராமானுசர்) காஞ்சிபுரத்தில் யாதவப்ரகாஶரிடம் சாஸ்த்ரங்களை கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. ஆளவந்தார் காஞ்சிபுரத்திற்குச் சென்று, தேவப்பெருமாள் கோவிலில் உள்ள கரியமாணிக்கம் பெருமாள் சன்னதி முன்பு, இளையாழ்வாரும் அந்த வழியில் செல்லும் பொது, ஆளவந்தார் இளையாழ்வாரைக் குளிரக் கடாக்ஷித்தார். பிறகு ஆளவந்தார் தேவப்பெருமாளிடம் இளையாழ்வாரை அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக நியமிக்க வேண்டும் என்று ஶரணாகதி பண்ணினார். இப்படி ஆளவந்தார் விதைத்த விதையே இன்று மகா வ்ருக்ஷமாக (எம்பெருமானார் தரிஶனமாக) இருக்கிறது. இளையாழ்வார் நமது ஸம்ப்ரதாய விஷயத்தை அறிந்துகொள்வதற்குத் திருக்கச்சி நம்பிகளை உதவுமாறு ஆளவந்தார் கூறினார்.

ஆளவந்தாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவருடைய ஶிஷ்யர்களை திருவரங்கப்பெருமாள் அரையரிடம் ஆஶ்ரயிக்கச் சொன்னார். மேலும் அவருடைய சரம தசையில் சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றுமாறு ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார். அதில் சில முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:

 • திவ்யதேசத்தில் கைங்கர்யம் பண்ணுவது மற்றும் அவற்றின் பெருமைகளைச் சிந்தனை செய்வது தான் நமது வாழ்க்கையாக அமையவேண்டும்.
 • பெரிய பெருமாளுடைய திருவடித்தாமரைகளில் எழுந்தருளியிருக்கும் திருப்பாணாழ்வாரை (திருவடியிலிருந்து திருமுடி வரை) நாம் எப்பொழுதும் வணங்கவேண்டும். ஆளவந்தார் திருப்பாணாழ்வாரை மட்டுமே உபாயமாகவும், உபேயமாகவும் சிந்தனை செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். அதோடு அவர் திருப்பாணாழ்வார் (பெரிய பெருமாளை பற்றிப் பாடியவர்), குறும்பறுத்த நம்பி (களி மண்ணில் புஷ்பம் செய்து திருவேங்கடமுடையானுக்குச் ஸமர்ப்பித்தவர்) மற்றும் திருக்கச்சி நம்பியை (காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டக் கைங்கர்யம் செய்தவர்) ஒரே நிலையில் ஒப்பிட்டு பார்ப்பதாகக் கூறினார்.
 • ஒரு ப்ரபன்னன் தன்னுடைய ஆத்ம யாத்திரைக்கோ (பகவத் விஷையம்) அல்லது தேக யாத்திரைக்கோ (லௌகீகம்) கவலைப்படக்கூடாது. ஏனென்றால், ஆத்மா எம்பெருமானுடைய அத்யந்த பரதந்த்ரன் அதனால் எம்பெருமான் ஆத்ம யாத்திரையை பார்த்துக்கொள்வார். நமது கர்மவினையே தேஹத்திற்குக் காரணம் என்பதால் நம் பாப/புண்யங்கள் தேஹ யாத்திரையை நடத்திச்செல்லும். அதனால் இவை இரண்டிற்குமே நாம் கவலைப்பட அவசியம் இல்லை.
 • பாகவதர்களுக்கு இடையே வேறுபாடுகளை நாம் பார்க்கக்கூடாது. எம்பெருமானை மதிப்பது போல் பாகவதர்களை நாம் மதிக்க வேண்டும்.
 • எப்படி எம்பெருமானுடைய சரணாம்ருதத்தை ஒப்புக்கொள்கிறோமோ, அதே போல் ஆசார்யருடைய ஸ்ரீ பாத தீர்த்ததையும் எற்றுக்கோள்ள வேண்டும்.
 • ஆசார்ய புருஷர்கள்  ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுக்கும் பொழுது, நமது பூர்வாசார்யர்களுடைய சார்பில் வாக்கிய குருபரம்பரை / த்வய மஹாமந்த்ரத்தை அனுசந்தித்துக்கோண்டே கொடுக்க வேண்டும்.

கடைசியில் ஆளவந்தார் அவருடைய ஶிஷ்யர்களை அழைத்து, அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை க்ஷமிக்க வேணுமாறு ப்ரார்த்தித்து, அவர்களிடம் ஸ்ரீ பாத தீர்த்தத்தை பெற்றுக்கொண்டார். பிறகு அவர்களுக்கு ததியாராதனம் செய்து, இந்த சரம திருமேனியை விட்டு, திருநாடலங்கரித்தார். அனைத்து ஶிஷ்யர்களும் வருத்தத்தில் ஆழ்ந்தனர், பிறகு இதைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இந்த பூத உடலை விட்டு பரமபத்திதால், உண்மயையாக அவர்கள் பெற்ற பேற்றை நினைவில் கோண்டு அதை நன்றாகக் கொண்டாட வேண்டும். திருமஞ்சனம், ஸ்ரீசூர்ண பரிபாலனம், அலங்காரம், ப்ரஹ்ம ரதம் போன்ற அனைத்து சரம கைங்கர்யங்களும் ஆளவந்தார் மற்றும் மற்ற ஆசார்யர்களுடைய சரித்திரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பெரிய நம்பிகள் இளையாழ்வரை திருவரங்கத்திற்கு அழைத்து வருவதற்காக காஞ்சிபுரம் சென்றார். இளையாழ்வர் தேவப்பெருமாளுக்கு சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, பெரிய நம்பி ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னத்தை உரக்கச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த ஶ்லோகத்தின் அழ்ந்த அர்த்தத்தையும் உணர்ந்து, இந்த ஶ்லோகத்தை அருளிச்செய்தது யார் என்று பெரிய நம்பியிடம் கேட்டார். பெரிய நம்பியும் ஆளவந்தாருடைய பெருமையை இளையாழ்வாருக்குக் கூறி அவரை திருவரங்கத்திற்கு எழுந்தருளுமாரு ப்ரார்த்தித்தார். இளையழ்வரும் ஒப்புக்கொண்டு, தேவப்பெருமாள் மற்றும் திருக்கச்சி நம்பியிடம் நியமனம் பெற்றுக்கோண்டு திருவரங்கத்திற்கு புறப்பட்டார். திருவரங்கத்தை அடையும் சமயத்தில், ஆளவந்தாருடய ப்ரம்ஹ ரதத்தை பார்த்த பெரிய நம்பி கீழே விழுந்து அழுதார். இளையாழ்வாரும் மிகவும் வருத்தமுற்று என்ன நடந்தது என்று அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கோண்டார்.

அந்த நேரத்தில், ஆளவந்தாருக்கு கடைசி கைங்கர்யம் செய்யும் பொழுது, அவருடைய ஒரு கையில் 3 விரல்கள் மடங்கி இருப்பதை அனைவரும் கவனித்தார்கள். என்ன காரணம் என்று அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் இளையாழ்வார் கேட்க, ஆளவந்தாருக்கு 3 நிறைவேறாத ஆசைகள் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

 • வ்யாஸ மற்றும் பராஶர ரிஷிகளுக்கு நமது க்ருதஜ்ஞதையைக் காட்ட வேண்டும்.
 • நம்மாழ்வரிடம் நமது அன்பைக் காட்ட வேண்டும்.
 • வ்யாஸருடைய ப்ரஹ்ம சூத்திரத்திற்கு விஶிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் படி உரை (பாஷ்யம்) எழுத வேண்டும்.

இதைக்கேட்டவுடன் இளையாழ்வார் இந்த 3 ஆசைகளையும் நிறைவேற்றுவேன் என்று ப்ரதிஜ்ஞை எடுத்தார், உடனே அந்த 3 விரல்களும் நேராக ஆயின. இதைப் பார்த்த அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் மிகவும் ஸந்தோஷமடைந்து, ஆளவந்தார் தன்னுடைய முழுமையான சக்தியையும், க்ருபையையும் கொண்டு இளையாழ்வாரை நன்றாக குளிரக் கடாக்ஷித்திருக்கிறார், அதோடு இளையாழ்வார் தான் அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகர் என்று கூறினார்கள். அனைத்து கைங்கர்யங்களும் முடிந்தவுடன், இளையாழ்வார் ஆளவந்தாரை இழந்த வருத்ததில் நம்பெருமாளை மங்களாஶாஸனம்  செய்யாமலே காஞ்சிபுரத்திற்கு  எழுந்தருளினார்.

ஆளவந்தார் உபய வேதாந்ததிலும் நல்ல பண்டிதராக இருந்தார். அவருடைய க்ரந்தங்களிலிருந்தே அதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

 • நான்கே (4) ஶ்லோகங்களில் பிராட்டி வைபவத்தின் ஸாரத்தை சது:ஶ்லோகியில் அருளிச்செய்துள்ளார்.
 • ஸ்தோத்ர ரத்னம் உண்மையான ரத்தினம் தான் – ஏனென்றால் எளிமையான ஸ்தோத்ரத்தின் மூலம் சரணாகதியின் தாத்பர்யத்தை (திருவாய்மோழி மற்றும் பல க்ரந்தங்களில் விளக்கி இருப்பது போல்) விளக்கியிருக்கிறார்.
 • கீதையின் சாரத்தை கீதார்த்த சங்ரஹத்தில் அருளிச்செய்துள்ளார்.
 • பாஞ்சராத்ர ஆகமத்தின் முக்கியத்துவத்தை, முதன் முதலில் சிறப்பாக தனிப்படுத்திக் காட்டும் வகையில் ஆகம ப்ராமாண்யம் என்று ஒரு க்ரந்த்தத்தை அருளிசெய்தார்.

ஆளவந்தாருடைய தனியன்:

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஶேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமி தம்

ஆளவந்தாருடைய வாழி திருநாமம்:

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

மேலே, அடுத்த ஆசார்யரான பெரிய நம்பி வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: 

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org