வேத வ்யாஸ பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

azhwan_bhattarsகூரத்தாழ்வான்பராசர பட்டர் மற்றும் வேத வ்யாஸ பட்டருடன்

திருநக்ஷத்ரம் : வைகாசி, அனுஷம்

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன் : எம்பார்

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

வேத வ்யாஸ பட்டர் கூரத்தாழ்வானின் ஒப்பற்ற குமாரரும் பராசர பட்டரின் இளைய சகோதரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமபிள்ளை என்றும் ஸ்ரீ ராமசூரி என்றும் அழைக்கப்படுவார். ஸ்ரீபாஷ்யத்திற்கு வ்யாக்யான உரை எழுதிய ஸுதர்சன ஸூரி (ச்ருத பிரகாசிகா பட்டர்), இவருடைய சந்ததியில் வந்தவராவார்.

பராசர பட்டரும் வேத வ்யாஸ பட்டரும் பெரிய பெருமாளின் (ஸ்ரீ ரங்கநாதர்) ப்ரசாதத்தினால், ஆழ்வானுக்கும் ஆண்டாளுக்கும் குமாரர்களாக அவதரித்தார்கள். ஒரு நாள் சாயரக்ஷையில் ஆழ்வானும் ஆண்டாளும் ப்ரஸாதம் ஏதும் உட்கொள்ளாமல் (மழை காரணமாய் ஆழ்வான் உஞ்ச விருத்தி செய்ய முடியாததாலும், திருமாளிகையிலே சஞ்சித பதார்த்தம் ஒன்றும் இல்லாமையாலும்) பட்டினியுடன் கண்வளர்த்தருளினர். அச்சமயம் கோயிலிலிருந்து கடைசி நைவேத்தியத்திற்கான மணி ஓசையை செவி மடுத்தார்கள். உடனே அதைக் கேட்டு ஆண்டாள் எம்பெருமானிடம் “தங்களுடைய பக்தன் ஆழ்வான் பட்டினியாயிருக்க நீர் என்ன அமுது செய்து அருளுகிறீர்” என்று கேட்டாள். அதை உணர்ந்த பெரிய பெருமாள் உத்தம நம்பியிடம் சென்று அவருடைய பிரசாதத்தை சகல வாத்திய சகிதமாக ஆழ்வான், ஆண்டாளிடம் கொண்டு போய் கொடும் என்று சொன்னார். உத்தம நம்பியும் பெருமாள் அருளிச்செய்தபடியே தளிகையை ஆழ்வான் திருமாளிகைக்குச் சென்று கொடுத்தார். ஆழ்வானும் பதறி அடித்துக்கொண்டு எழுந்து , அதைப்பார்த்து எம்பெருமானிடம் என்ன விண்ணப்பித்தாய் என்று ஆண்டாளிடம் கேட்க அதற்கு ஆண்டாளும் தான் விண்ணப்பித்ததைக் கூறினாள். நீ இப்படி சொல்லலாமோ ? என்று ஆண்டாளை வெறுத்து இரண்டு திரளைகளை மட்டுமே எடுத்து பிரசாதத்தை தாமும் ஸ்வீகரித்து ஆண்டாளுடன் பகிர்ந்துகொண்டார். அந்த இரண்டு கைப்பிடி அளவே உள்ள பிரசாதம் தான் இரண்டு திருக்குமாரர்கள் அவதரிக்க ஹேதுவாகியது.

குமாரர்கள் அவதரித்த பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் ஆழ்வான் திருமாளிகைக்கு தன் சிஷ்யர்களுடன் சென்றார். எம்பெருமானார் எம்பாரைப் பார்த்து “ஆழ்வான் குமாரர்களை எடுத்துக்கொண்டு வாரும்” என்று சொல்ல அவரும் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வரும்போது, எம்பார் குழந்தைகளின் செவியில் த்வயத்தை அனுசந்தித்துவிட்டு குழந்தைகளை அவரிடம் கொடுத்தார். எம்பெருமானார் குழந்தைகளுக்கு த்வய மந்திரோபதேசம் நடந்து முடிந்ததை அறிந்து எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யராகும்படி சொன்னார் [எம்பாரும் மிக ஆனந்தத்துடன் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களையும் மற்றும் நமது சித்தாந்ததையும் கற்பித்தார்]. பிறகு எம்பெருமானார் அவர்களுக்கு பராசர பகவானின் திருநாமமாக பராசர பட்டர் என்றும் ஸ்ரீவேதவ்யாஸரின் நினைவார்த்தமாக வேத வ்யாஸ பட்டர் என்றும் நாமகரணம் சாற்றினார். இவ்வாறாக நாமகரணத்தைச் சாற்றி ஆளவந்தாருக்குக் கொடுத்த வாக்குகளில் ஒன்றான “பராசர வேத வ்யாஸர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும்” செயலைச் செய்து முடித்தருளினார்.

இவ்விரு சகோதரர்களில், பராசர பட்டர் சிறிது காலமே வாழ்ந்து சம்சாரத்தைத் துறந்து மிக இச்சையுடன்  பரமபதம் சென்றடைந்தார். பட்டர் தான் பரமபதம் அடைந்து அங்கு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் செய்வதற்குத் தயாரானதால், ஆண்டாள் (பட்டரின் தாயார்) பட்டரின் கடைசி காலத்தில் அவருடன் கூட இருந்ததுடன் பட்டரின் சரம கைங்கர்யங்களை (இறுதிச் சடங்குகளை) நிறைவான மகிழ்ச்சியுடன் நடத்தி வைத்தார். பட்டரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு தன்னுடைய திருமாளிகைக்குத் திரும்பிய வேத வ்யாஸ பட்டர், பராசர பட்டரின் பிரிவை தாள முடியமால் மிக உரக்கமாக அழுது வெளிப்படுத்தினார். உடனே ஆண்டாள் வேத வ்யாஸ பட்டரை சமாதானப்படுத்தி அவரிடம் “பராசர பட்டர் பரமபதத்திற்குச் சென்றதைப் பார்த்து உமக்குப் பொறாமையா?” என்று வினவினார். வேத வ்யாஸ பட்டரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, தாயாரிடம் மன்னிப்பு கேட்டு, பராசர பட்டருக்காக மிக விமரிசையாக விழா எடுத்து கொண்டாடினார்.

பெரிய பெருமாள் வேத வ்யாஸ பட்டரை தனது சந்நிதிக்கு வரவழைத்து அவரிடம் “பராசர பட்டர் உம்மை விட்டு பிரிந்ததாக எண்ணி கவலைப்பட வேண்டாம், உம்முடைய தந்தைபோல் நாமே உள்ளோம்” என்று உரைத்தார். வேத வ்யாஸ பட்டரும் , நஞ்சீயர் மற்றும் பலருடன் நம்முடைய சம்பிரதாயத்தை நடத்தி வந்தார்.

நமது வ்யாக்யானங்களில், வேத வ்யாஸ பட்டரின் சிறப்பைச் சில ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

  • திருமாலை 37 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்த பாஸுரத்தில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் “பெரிய பெருமாள் நம்முடைய நித்ய உறவினர் , அவர் மேலும் நம்மை எப்பொழுதும் ரக்ஷிப்பார்” என்று விளக்கியுள்ளார். வேத வ்யாஸ பட்டர் ஏதோ சங்கடத்தில் உள்ளதை அறிந்த பராசர பட்டர், இந்த பாஸுரத்தில் உள்ள நெறி முறையை வேத வ்யாஸ பட்டருக்கு உணர்த்தி பெரிய பெருமாளையே முழுதுமாக நம்பியிருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
  • முதல் திருவந்தாதி 4 – நம்பிள்ளை/பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்கள் – பொய்கையாழ்வார் அவர் பாடிய முதல் திருவந்தாதியில் அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷன் மற்றும் மார்க்கண்டேயன் முதலான ரிஷிகளுக்கு சிவபெருமான் பகவத் விஷயங்களை விவரித்தார் என்று பாடி இருக்கிறார். இதைப்படித்த வேதவ்யாஸ பட்டர் கேலியுடன் “ருத்ரன் பகவான் எம்பெருமானை முற்றும் அறிந்தவர் போல் பிறருக்கு உபதேசிக்கிறாரே” என்றார் .அதைக்கேட்ட பராசர பட்டர் ருத்ரனை தமோகுணம் ஆட்கொண்டதால் குழப்பம் அடைவது உண்டு, ஆனால் இப்போது அவர் பகவத் விஷயத்தில் ஈடுபட்டுள்ளார் அதனால் அவரை கேலி செய்வது கூடாது என்றார்.
  • திருவாய்மொழி 1.2.10 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – இந்தப் பாசுரத்தில் நம்மாழ்வார் திருமந்திரத்தின் (அஷ்டாக்ஷரம்) அர்த்தம் தெரிவிக்கிறார். இங்கு அழகான ஒரு நிகழ்வு நம்பிள்ளையால் மேற்கோள் காட்டப்படுகிறது.அஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் தங்கள் ஆசார்யரின் மூலமே தெரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை ஆழ்வான் தன் சிஷ்யர்களுக்கு இந்தப் பாசுரத்திற்கு விளக்கம் அளிக்கும் சமயத்தில் இவ்விரு குமாரர்கள் அங்கிருப்பதை அறிந்து அவர்களை அவர்களது ஆசார்யர் எம்பாரிடம் சென்று விளக்கம் பெறச்சொன்னார். அதற்கு சம்மதித்து எழுந்திருக்கும்போது ஆழ்வான் குமாரர்களிடம் இந்த உலகத்தில் எல்லாம் நிரந்தரம் இல்லாமல் இருப்பதால் (நீங்கள் ஆசார்யரின் மடத்தை அடைய முடியாமல் உங்களுக்கு எதுவும் நேரலாம்) அதனால் நானே அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருளை விளக்குகிறேன் என்று சொல்லி மந்திரத்திற்கு விளக்கம் அளித்தார். ஒரு வைஷ்ணவர் எப்படி மற்றவரிடத்தில் கருணையுடனும், அவர்களின் ஆன்மீக நலத்தில் அக்கறை உள்ளவராகவும், எல்லாரிடத்திலும் பௌதிக பற்றற்று இருக்கவேண்டும் என்பதற்கு ஆழ்வான் தகுந்த உதாரணமாவார்.
  • திருவாய்மொழி 3.2 முகவுரை – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – இதில் நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரின் அழகை முற்றிலும் அனுபவிக்க முடியாமல் தவித்தார். இங்கே வேதவ்யாஸ பட்டர் , பராசரபட்டரிடம் ஒரு கேள்வி எழுப்புகிறார். பகவான் அர்ச்சாவதார நிலையில் முன்னால் எழுந்தருளி இருக்கும் போது ஏன் ஆழ்வார் அவரை அனுபவிக்காமல் கவலைப் படுகிறார் (பரமபதம் வெகு தொலைவில் இருக்கிறது அல்லது விபவ அவதாரம் வெகு நாட்களுக்கு முன் ஏற்பட்டது). அதற்கு, பராசர பட்டர் குறைவாக பகவத் ஞானம் உள்ளவர்களுக்கு பர, வியூக, விபவ, அர்ச்சை மற்றும் அந்தர்யாமி ஆன பகவானின் ஐந்து நிலைகள் வேறு வேறு என்றே கொள்வர். எல்லா நிலைகளிலும் ஒரே பகவான் தான் உள்ளார் என்றும், ஒரே குணம் கொண்டவர் பகவான் என்றும் முற்றும் உணர்ந்தவர்கள் கொள்வர். இப்பொழுது ஆழ்வார் அழகரின் அழகில் மயங்கி உணர்ச்சி வயப்பட்டவராய் துன்புற்றார் – என்று விளக்கினார்.
  • திருவாய்மொழி 6.7.5 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – திருக்கோளூர் வைத்தமாநிதி எம்பெருமான் கோயிலைப் பற்றியும் அந்த ஊரின் செழிப்பையும் பராசர பட்டர் வேதவ்யாஸ பட்டருக்கு விவரிக்கும்போது வேதவ்யாஸ பட்டர் அவ்விடத்தில் “ஆழ்வார் அந்த திவ்ய தேசத்தின் அழகையும், சுற்றுச் சூழலையும் கண்டு ஆறுதல் அடைகிறார்” என்று தனது ஆசார்யர் எம்பார் விவரித்ததை பராசர பட்டருக்கு ஞாபகப்படுத்தினார் .
  • திருவாய்மொழி 7.2 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – இரு பட்டர்களுக்கும் திருமண வயது வந்த பொழுது, பெரிய பெருமாளிடம் சென்று அறிவிக்கும்படி ஆண்டாள் ஆழ்வானிடம் விண்ணப்பித்தாள். அதற்கு ஆழ்வானும் “பகவானின் குடும்பத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றார். மேலும் அவர் எம்பெருமானையே முற்றிலும் சார்ந்திருந்தால் தன்னுடைய சொந்த முயற்சி எதையும் எடுக்காது இருந்தார். ஆழ்வான் பெரிய பெருமாளிடம் சென்றபோது, பெரிய பெருமாளே ஆழ்வானிடம் “என்ன சொல்ல வந்தீர்” என்று கேட்க அதற்கு ஆழ்வான் “இரண்டு குமாரர்களுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்” என்று பதிலுரைக்க, உடனே எம்பெருமானும் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இது வரை நாம், வேத வ்யாஸ பட்டரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் முழுமையாய் பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொண்டவர், மற்றும் எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர் ஆவார். நாமும் இது போல் சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள அவரது திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

வேத வ்யாஸ பட்டரின் தனியன்:

பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம் |
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம் ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/04/16/vedha-vyasa-bhattar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “வேத வ்யாஸ பட்டர்”

  1. ஆழ்வானைப்போல எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து விட்டால் உலக கவலைகள் இருக்காது. அவர் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது குறித்து பெருமாளிடம் கேட்காமல் இது பெருமாளுடைய குடும்பம் என்பது பக்தியின் உச்சம். அவர் கோயிலுக்குள் வந்தபோது பெருமாளே என்ன சொல்ல வந்தீர் ? என்று கேட்பது பாசத்தி்ன் சிகரம். அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்

Comments are closed.