முதலாழ்வார்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

இந்த கட்டுரையில் முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்) வைபவத்தை பேசுவோம்.

பொய்கை ஆழ்வார் :

திருநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம்

அவதார திருத்தலம் : திருவெஃகா (காஞ்சிபுரம்)

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : முதல் திருவந்தாதி

திருவெஃகா யதோக்தகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் (புஷ்கரணி) பொய்கை ஆழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் காஸார யோகி மற்றும் ஸரோ முனீந்திரர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம்
கலயே : ஶ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத்

இவரது வாழி திருநாமம்:

செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

பூதத்தாழ்வார்:

திருநட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம்

அவதார திருத்தலம் : திருக்கடல்மல்லை

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி

திருக்கடல்மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் பூதத்தாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

மல்லாபுர வராதீஶம் மாதவீ குஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத்

இவரது வாழி திருநாமம்:

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

பேயாழ்வார்:

திருநட்சத்திரம் : ஐப்பசி சதயம்

அவதார திருத்தலம் : திருமயிலை (மயிலாப்பூர்)

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி

திருமயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே

இவரது வாழி திருநாமம்:

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

முதலாழ்வார்கள் சரித்திரம்/ வைபவம்:

மூன்று ஆழ்வார்களையும் ஒரு சேர்ந்து போற்றப்படும் காரணங்கள் பின் வருமாறு.

  • பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான யுக சந்தியில் அவதரித்தார்கள். (யுக சந்தி – யுக மாற்றம் ஏற்படும் இடைவெளிக்காலம் – விவரத்திற்கு கட்டுரையின் கடைசியில் காண்க)
  • இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீகக்  கருணையால் பூவிலிருந்து தோன்றினர்.
  • இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (ஸர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.
  • வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேஶங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் ஓடித் திரியும் யோகிகள் – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மூன்று ஆழ்வார்களும் வெவ்வேறு இடங்களில் பிறந்து எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அடியார்களை தனது உயிராக கொண்டிருக்கும் எம்பெருமான் (கீதை – “ஞானி து ஆத்ம ஏவ மே மதம்”) இவர்களை ஒரு சேரக் காண திருவுள்ளம் கொண்டான். ஆதலால் அவன் ஒரு தெய்வீகத்  திருவிளையாடல் புரிந்து மூவரையும் திருக்கோவிலூருக்கு ஒரு இரவுப் பொழுதில் வரவழைத்தான்.

அன்று இரவு பலத்த மழை பெய்த காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக ஒரு சிறிய கொட்டாரத்தை (இடை கழி) வந்தடைந்தனர். அந்த இடமோ ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்கிற அளவாகவே இருந்தது. மூவரும் வந்ததால் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தங்கள் தங்கள் முகவரியை பற்றி விசாரித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கையில் திடீரென்று எம்பெருமான் திருமாமகளோடு அந்த இருட்டு மிகுந்த இடை கழியில் புகுந்தான். தன் அடியார்கள் இருக்கும் இடத்தில் தான் எம்பெருமானுக்கு எவ்வளவு ஆசை! எவர் புகுந்தார் என்று பார்ப்பதற்காக,

  • பொய்கை ஆழ்வார் வெளிச்சத்திற்காக இவ்வையத்தை (உலகத்தை) தகளியாக (விளக்கு), கடலை நெய்யாக மற்றும் கதிரவனை விளக்கொளியாக ஏற்றினார்.
  • பூதத்தாழ்வார் வெளிச்சத்திற்காக தன் அன்பையே விளக்காக, ஆர்வத்தையே நெய்யாக மற்றும் தன் சிந்தையை விளக்கொளியாக ஏற்றினார்.
  • பேயாழ்வார், மேலே கூறியபடி மற்ற இரண்டு ஆழ்வார்களின் உதவியைக் கொண்டு திருமாமகளோடு கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனான எம்பெருமானின் ஒப்பற்ற அழகினை கண்டு, அதற்கு மங்களாசாசனம் செய்கிறார். கண்டதோடு மட்டுமல்லாமல் தான் கண்டதை மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார் (…கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் என்ற பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி பாசுர வரிகளை நினைவில் கொள்வது சுவை கூட்டும்)

இவ்வாறு இம்மூவரும் இந்த லீலா விபூதியில் ( நித்ய லோகமான ஸ்ரீவைகுண்டத்தை தவிர்த்த மற்றைய லோகங்கள் லீலா விபூதியாகும் ) இருக்கும் காலத்தில் திருக்கோவலூர் ஆயனையும் மற்றும் பல திவ்ய தேஶ எம்பெருமான்களையும் ஒன்று கூடி அனுபவித்து மகிழ்ந்தனர்.

தனது ஈடு வியாக்கியானத்தில் நம்பிள்ளை முதலாழ்வார்களின் பெருமைகளை தகுந்த இடங்களில் வெளிக்கொணர்கிறார். அவற்றில் சில உதாரணங்களை நோக்குவோம்:

  • “பாலேய் தமிழர்” (1.5.11) – நம்பிள்ளை இங்கு அளவந்தாரின் நிர்வாகத்தை/கருத்தை கண்டுகொள்கிறார். இங்கு நம்மாழ்வார் முதலாழ்வார்களைத் தான் புகழ்ந்து ஏற்றுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில் முதலாழ்வார்கள் தான் முதலில் எம்பெருமானின் பெருமைகளை தேனிலும் இனிய தமிழில் பாடினவர்கள்.
  • “இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6) – இங்கு நம்பிள்ளை, ஆழ்வார்களின் தமிழ் பெரும்புலமையைத் தெரிவிப்பதற்காக, பொய்கையாரும் பேயாரும் பூதத்தாழ்வாரை எம்பெருமானின் கல்யாண குணங்களைப் பாடுமாறு விண்ணப்பிக்க, அவரும் அங்கே அப்பொழுதே பாடியதைக் கொண்டு குறிப்பிடுகிறார். இது எது போல் எனில், பெண் யானை கேட்க ஆண் யானை எவ்வாறு தேனைக் கொணருமோ அது போலவே (இந்த யானை வர்ணனை பூதத்தாரின் “பெருகு மத வேழம்” என்ற இரண்டாம் திருவந்தாதியின் 75 ஆம் பாசுரத்தில் காணலாம்) முதலாழ்வார்களுக்கு “செந்தமிழ் பாடுவார்” என்னும் திருநாமமும் இருப்பதைக்  குறிப்பிடுகிறார்.
  • “பலரடியார் முன்பருளிய” (7.10.5) – நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நம்பிள்ளை இங்கு மிக அழகாக வெளிக் கொணர்கிறார். இந்த பாசுரத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர் மற்றும் முதலாழ்வார்களுக்கு பதிலாக தன்னைத் திருவாய்மொழி பாடுவிக்க எம்பெருமான் தேர்ந்தெடுத்து அருளாசி வழங்கியமையை ஆழ்வார் தெரிவிக்கிறார்.
  • “செஞ்சொற் கவிகாள்” (10.7.1) – இங்கு நம்பிள்ளை முதலாழ்வார்களை “இன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” என்றெல்லாம் குறிப்பிட்டு, இவர்கள் அநந்ய பிரயோஜனர்கள் (எம்பெருமானை பாடுவதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பாராதவர்கள்) என்று கண்டு கொள்கிறார்.

மாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இவர்களை “முதலாழ்வார்கள்” என்று குறிப்பிட காரணத்தை அருளிச்செய்கிறார்.

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.

சுருக்கமான மொழி பெயர்ப்பு:

இம்மூன்று ஆழ்வார்களும் ஏனைய 7 ஆழ்வார்களுக்கு முன்னே அவதரித்து இந்த நாட்டை தமிழ்ப்  பாசுரங்களைக் கொண்டு உய்வித்தபடியால் இவர்களுக்கு “முதலாழ்வார்கள்” என்ற பிரபலமான பெயர் ஏற்பட்டது.

மேலும் ஐப்பசி ஓணம், அவிட்டம், சதயத்தின் புகழை முதலாழ்வார்கள் இந்த மூன்று நாட்களில் பிறந்தபடியால் வெளிக்காட்டுகிறார் மாமுனிகள்.

பிள்ளை லோகம் ஜீயர் தனது வியாக்கியானத்தில் சில அருமையான கருத்து கோணங்களை அருளிச்செய்கிறார். அவையாவன:-

  • முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
  • திருமழிசை ஆழ்வாரும் இவர்கள் காலத்தில் அவதரித்தார் (துவாபர-கலியுக சந்தி / இடைவெளிக்காலம்). இவர்களையடுத்து கலியுகத் தொடக்கத்தில் மற்ற ஆழ்வார்கள் ஒருவர் பின் ஒருவர் அவதரித்தார்கள்.
  • முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.

பெரியவாச்சான் பிள்ளையின் “திருநெடுந்தாண்டகம்” வியாக்கியான அவதாரிகையில் கண்டுகொண்டபடி, முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்துவத்தில் ஆழங்கால் பட்டு அதிலே அதிகம் ஈடுபட்டனர். இதனாலேயே இவர்கள் த்ரிவிக்ரமாவதாரத்தை அடிக்கடி போற்றி பாசுரங்கள் பாடினர். மேலும் இயற்கையிலேயே அர்ச்சாவதார எம்பெருமான்கள் மீது எல்லா ஆழ்வார்களுக்கும் ஈடுபாடு உண்டாதலால், பல அர்ச்சாவதார எம்பெருமான்களை இவர்கள் மங்களாசாசனம் செய்தனர். முதலாழ்வார்களின் அர்ச்சாவதார அனுபவங்கள் பற்றிய கட்டுரை இங்கே காண்க (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-azhwars-1.html)

அடியேன் லக்ஷ்மீநரஸிம்ஹ ஸ்ரீவைஷ்ணவ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2012/10/22/mudhalazhwargal-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

யுக சந்தி :

யதீந்திர மத தீபிகை பல்வேறு சம்பிரதாய கருத்துகளை விளக்கும் அதிகார பூர்வமான மூல நூலாகும். இதில் கால தத்துவம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு யுகங்கள் மற்றும் அவைகளின் சந்தி காலங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.

  • தேவர்களின் 1 நாள் (சுவர்க்க லோகம்) = மனிதர்களின் 1 வருடம்.
  • 1 சதுர் யுகம் என்பது 12000 தேவ வருடங்கள் – (க்ருத 4000, த்ரேதா 3000, த்வாபர 2000 & கலி 1000)
  • பிரமனின் (பிரம்மா) 1 நாள் = 1000 சதுர் யுகங்கள். இவரின் இரவும் இதே நீளம் கொண்டது. ஆனால் இரவின் போது சிருஷ்டி நடக்காது. இந்த கணக்கில் பிரம்மா 100 வருடங்கள் (1 வருடம் = 360 நாட்கள்) வாழ்கிறார்.
  • யுகங்களுக்கு இடையிலான சந்தி பொழுது மிகவும் நீண்டது. அவற்றின் கணக்கு பின் வருமாறு :-
  • க்ருத – த்ரேதா யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 800 தேவ வருடங்கள்.
  • த்ரேதா-த்வாபர யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 600 தேவ வருடங்கள்.
  • த்வாபர-கலி யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 400 தேவ வருடங்கள்.
  • மேலும், கலியுகத்திற்கும் அடுத்த க்ருத யுகத்திற்கும் இடையிலான சந்தி காலம் = 200 தேவ வருடங்கள்.
  • பிரமனின் 1 நாள் ஆயுள் காலத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் மற்றும் 14 சப்த ரிஷிகள் இருப்பார்கள்/மாறுவார்கள்.(இவைகள் அனைத்தும் குறிப்பிட்ட ஜீவாத்மாக்களுக்கு அவர் கருமங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் பதவிகளே ஆகும்.)

3 thoughts on “முதலாழ்வார்கள்”

  1. ஒரு யுகம் என்பது 12000 தேவ வருடங்கள் என்று சொன்ன பிறகு, ஒவ்வொரு யுகத்துக்கும் கொடுக்கப்பட்ட வருடங்களைக் கூட்டிப் பார்த்தால், 10000 வருடங்களே தேறுகின்றன. இடைப்பட்ட 2000 வருடங்கள் யுகசந்தி வருடங்களைச் சேர்த்தால் கிடைக்கும். இந்த விவரத்தை வெளிப்படையாகவே மேலே கொடுத்தால் படிப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கும்.

Comments are closed.