ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

கீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவித்தோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஶ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம்.

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)

திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்

அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை

இவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்கிறார். ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு ஶேஷாஶநர் என்ற திருநாமமும் உண்டு.

நாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார். பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள். ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய ஶிஷ்யர்களாக இருக்கிறார்கள்.

ஸேனை முதலியாரிடம் உலக விஷயங்களை நடத்தும் பொறுப்பை விட்டு, எம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய், பரமபதமான நித்ய விபூதி மற்றும் ஸம்ஸாரமாகிற லீலா விபூதியையும் ஆனந்தமாக அனுபவிக்கிறார் என்று பூர்வாசார்யர்கள் மூலமாக அறிகிறோம். மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

ஸ்தோத்ர ரத்னம் என்ற ப்ரபந்தத்தில், 42-ஆவது  ஶ்லோகத்தில், எம்பெருமானுக்கும் ஸேனை முதலியாருக்கும் உண்டான ஸம்பந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

த்வதீய புக்த உஜ்ஜித ஶேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதா
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி
தத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:

இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் எம்பெருமானிடம் ஸேனை முதலியாரைப் பற்றிப் போற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.

அர்த்தம்:

விஷ்வக்ஸேனரே உமது ஶேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராகவும்,
உம்மால் நித்ய லீலா விபூதி சாம்ராஜ்யத்தை நடத்த அனுமதி கொடுக்கப்பெற்றவரும், எல்லோராலும் விரும்பப்படுபவருமான அவர், உம்முடைய பார்வைக் கடாக்ஷத்தாலேயே எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிப்பவராக உள்ளார். எம்பெருமான் திருவள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து அதைச் செவ்வனே செய்யக்கூடியவராக இருப்பவர்.

ஸேனை முதலியாரின் தனியன்:

ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விஸ்வசித சிந்நயநாதிகாரம்
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ்தமஶிஶ்ரியாம

ஸேனை முதலியாரின் வாழி திருநாமம்:

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

நாமும் அவ்வெம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் இருப்பதற்கு ஸேனை முதலியாரை ப்ரார்தித்துக் கொள்வோம்.

அடுத்த பதிவில் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று போற்றப்படும் நம்மாழ்வாரை தரிசிப்போம்.

அடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2012/08/18/senai-mudhaliar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

13 thoughts on “ஸேனை முதலியார் (விஷ்வக்ஸேநர்)”

  1. அருமை. ஸ்வாமிகளுக்கு என் சாஷ்டாங்க தண்ணங்கள்.

  2. மார்ச் 2015ல் நான்கு பதிவுகள் என்று காணப்படுகின்றது. ஆனால் முதல் பதிவு விஷ்வக்ஷேனர் பற்றியது மட்டுமே ஓபனாகிறது மீதமுள்ள மூன்று பதிவுகளை எப்படி ஓபன் செய்வது

  3. விஷயங்கள் தாங்கி வரும் பயனுள்ள பதிவுகள்.

Comments are closed.