ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: தை விசாகம்
அவதார ஸ்தலம்: ஆழ்வார்திருநகரி
ஆசார்யன்: நாதமுனிகள்
குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் அன்பிற்குரிய ஶிஷ்யர்களில் ஒருவர். நாதமுனிகள் காட்டு மன்னார் கோயிலுக்குத் திரும்பிய பின்பு, எம்பெருமானை தியானிப்பதில் காலம் கழித்து வந்தார். அப்பொழுது குருகைக் காவலப்பனை யோக ரஹஸ்யத்தை கற்றுக் கொள்ளப் பணித்து, பின்பு அவரே கற்றும் கொடுத்தார். குருகைக் காவலப்பனும் அதைக் கற்று எம்பெருமானை அஷ்டாங்க யோகத்தில் தியானித்து வந்தார். எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாமல் நாதமுனிகள் பரமபதம் அடைந்த பின்னர், குருகைக் காவலப்பன் நாதமுனிகள் தன் விமல சரம திருமேனி விட்டு பரமபதத்துக்குக் கிளம்பிச் சென்ற இடத்துக்கே சென்றுவிட்டார். அதன் பின் தன் வாழ்நாட்களை எம்பெருமானைத் தியானிப்பதற்கும், அந்த இடத்தை பேணிக் காப்பதற்கும் அர்ப்பணித்தார்.
மணக்கால் நம்பி, ஆளவந்தாரைக் குருகைக் காவலப்பனிடம் சென்று யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ளும்படி நியமித்தார். ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுடன் காவலப்பன் எம்பெருமானைத் தியானிக்கும் இடம் வந்தடைந்தார். அப்பனின் யோகத்தை தொந்தரவு செய்ய விருப்பம் இன்றி அவர் அமர்ந்து இருந்த இடத்திற்குப் பின் புறம் இருந்த மதிளின் பின் மறைந்து அப்பனை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீர் என்று அப்பன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தார். “இங்கு சொட்டைக் குலத்தைச் (ஶ்ரேஷ்ட குலம் – நாதமுனிகளுடையது) சேர்ந்தவர் யார்?” என்று கேட்டார். ஆளவந்தார் வெளிப்பட்டு தான் யமுனைத் துறைவன், நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நாங்கள் தங்களுக்கு பின் இருந்த மதிளின் பின் பக்கம் மறைந்து இருந்தோமே, தாங்கள் எங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டீர்கள்” என்று அவர் வினவினார். அதற்கு அப்பன், “நான் எம்பெருமானை தியானிக்கும் பொழுது, பெரிய பிராட்டியாரே வந்து அழைத்தால் கூட அவர் திரும்பிப் பார்க்க மாட்டார். ஆனால் இன்று என் தோளை அழுத்தித் தாங்கள் இருந்த பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து அவருக்கு விருப்பமான நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறினார். அப்பனுக்கு பகவானிடத்தில் கிட்டிய அனுபவத்தையும், பகவானுக்கு நாதமுனிகளிடத்தில் இருக்கும் அன்பையும் கண்டு ஆளவந்தார் மனம் நெகிழ்ந்தார். அப்பனின் திருவடி பணிந்து தனக்கு யோக ரஹஸ்யம் கற்றுத் தரும்படி வேண்டிக் கொண்டார். அப்பன் அவரை எடுத்து உயர்த்தி, யோக ரஹஸ்யம் கற்றுத் தருவதாக வாக்களித்தார். ஆனால், தன் ஸம்ஸார வாழ்வின் இறுதி நாட்களில் தான் அதைக் கற்றுத் தருவேன் என்றார். உயர்ந்த ஞானியாக இருந்தமையால், தாம் பரமபதம் அடையும் நாளை அவர் அறிந்திருந்தார். அதை பற்றிய குறிப்பு ஒன்றை ஆளவந்தாருக்குக் கூறி அந்த சமயத்தில் யோக ரஹஸ்யம் கற்க வருமாறு கூறினார். அதற்கு இசைந்து ஆளவந்தார் திருவரங்கம் சென்று, தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார்.
அதன் பின், ஸ்ரீரங்கம் அத்யயன உத்சவத்தில் ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நம்பெருமாள் திருமுன்பு தாளமிசைத்துப் பாடுகிறார். அவர் திருவனந்தபுரம் – கெடுமிடர் (10.2) பதிகத்தில் “நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக்கு அறியச் சொன்னோம்” என்ற பாசுரத்தை ஆளவந்தாரை நோக்கியபடிப் பாட (பக்தர்களே, உடனே திருவனந்தபுரம் நோக்கி புறப்படுங்கள்), ஆளவந்தாரும், அதை நம்பெருமாளின் கட்டளையாக ஏற்றுக் கொண்டு, உடனே திருவனந்தபுரம் சென்றார். அங்கே மங்களாஶாஸனம் செய்த பின் தான் அப்பன் தன்னை யோக ரஹஸ்யம் கற்றுக் கொள்ள வரச் சொன்ன நாள் அன்று தான் என்று ஆளவந்தாருக்கு நினைவுக்கு வந்தது. தன்னிடம் உடனே பறந்து செல்ல புஷ்பக விமானம் இல்லையே என்று வருந்தினார்.
இவ்வாறு அப்பன் தன் ஆசார்யன் ஸம்ஸாரம் துறந்த இடத்திலேயே எம்பெருமானை தியானித்துக் கொண்டு இருந்து, இறுதியில் நாதமுனிகள் திருவடியைச் சென்று அடைந்தார்.
நாமும் குருகைக் காவலப்பனின் திருவடி வணங்கி எம்பெருமான் மற்றும் ஆசார்யனின் பேரன்பைப் ப்ரார்த்திப்போம்.
குருகைக் காவலப்பனின் தனியன்:
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி ஶிரஸா ஸதா ||
அடியேன் ஶ்ருதி மதுரகவி தாஸி
ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/02/03/kurugai-kavalappan-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org