நாதமுனிகள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/06/07/nammazhwar-tamil/) நம்மாழ்வாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

நாதமுனிகள் – காட்டு மன்னார் கோயில்

திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம்

அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)

ஆசார்யன்: நம்மாழ்வார்

ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகரதாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான், வானமாமலை தெய்வநாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான்.

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.

நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார்.

ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார்.

நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச்செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார்.

நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார்.

நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப்பேரனாருக்கு “யமுனைத்துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வரமுனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத்துறைவருக்குக் கற்றுகொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார்.

நாதமுனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாதமுனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.

மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடிவிட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள்.

நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார்.

“சிந்திக்க முடியாத, அற்புதமான, எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் கடல் போல ஞானம், பக்தி, வைராக்யத்தைப் பெற்ற நாதமுனிகளை வணங்குகிறேன்” என்று முதல் ஶ்லோகத்தில் கூறுகிறார்.

“மதுஸூதனன் திருவடித்தமரைகளில் உண்மையான அன்பும் அறிவும் உடைய நாதமுனிகளின் திருவடித்தாமரைகளே இந்த ஸம்ஸாரத்திலும் அந்தப் பரமபதத்திலும் எனக்குத் தஞ்சம்” என்று இரண்டாம் ஶ்லோகத்தில் கூறுகிறார்.

“அச்சுதன் மீது அளவில்லாத, உண்மையான அன்பும் அறிவும் உடையவரை, ஸம்ஸாரத்திலிருந்து அனைவரையும் காப்பற்ற வந்தவரை, முழுமையான பக்தியும் உடையவரை, யோகிகளுகெல்லாம் தலைவருமான நாதமுனிகளை வணங்குகிறேன்” என்று மூன்றாம் ஶ்லோகத்தில் கூறுகிறார்.

ஆளவந்தார் “எனது பாபத்தையும், சாதனைகளையும் பார்க்காமல், உனது திருவடிகளில் உண்மையான அறிவும், அன்பும் வைத்திருந்த எனது பாட்டனார் நாதமுனிகளைப் பார்த்து எனக்கு அருள்புரிய வேண்டும்” என்று கடைசி ஶ்லோகத்தில் எம்பெருமானிடம் கூறுகிறார்.

மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித்தாமரைகளை வணங்குவோம்.

நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2012/08/22/nathamunigal-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

5 thoughts on “நாதமுனிகள்”

  1. DEAR SIR, I HUMBLY REQUEST YOU SIR WHY DON’T YOU PUBLISH EITHER IN ENGLISH/KANNADA SO THAT I MAY UNDERSTAND IT EASILY, QUICKLY AND I TOO MAY ALSO EAGER TO UNDERSTAND OUR CUSTOMS,CULTURES FOR NON-TAMILIANS BE CAUSE IHAVE BORN BROUGHT UP FROM KARNATAKA THAT TOO FROM BANGALORE HEBBAR SHRIVAISHNAVA IYENGAR’S COMMUNITY SIR. SO, I HOPE YOU WILL SENDIT TO ME EITHER IN ENGLISH/KANNADA SIR. ADIEN….

Comments are closed.