மாறனேரி நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

alavandhar-deivavariandan-maranerinambi

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி

திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம்

அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்)

ஆசார்யன்: ஆளவந்தார்

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் ஆசார்யன் ஆளவந்தார் மீதும், பெரிய பெருமாள் மீதும் வைத்திருந்த பற்றைப் (அன்பை) பார்த்து ஸ்ரீங்கத்தில் உள்ள அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டார்.

இவர் குணங்கள் மாறனைப் (நம்மாழ்வரைப்) போலே இருப்பதால், சில நேரங்களில் இவரை மாறனேர் நம்பி (மாறன் + நேர்) என்று அழைக்கப்பட்டார்.

இவர் ஆளவந்தாரிடம் எப்பொழுதுமே காலக்ஷேபம் கேட்பதிலே முழு ஈடுபாட்டுடன் இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுதும் பெரிய பெருமாளுடைய குணானுபவத்திலே மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர், தான் மற்றவர்கள் மீது வைத்திருந்த பற்றை (அன்பை) விட்டு ஸ்ரீரங்கம் கோயில் ப்ரகாரத்திலேயே வாழ்ந்து வந்தார்.

மாறனேரி நம்பி தன்னுடைய அந்திம காலத்தில் பெரிய நம்பியிடம், தன் தேஹ பந்துக்கள் அனைவரும் ஸ்ரீவைஷ்ணவர்களாக இல்லாததால், இந்த திருமேனியை (பூத உடலை) அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் அந்திம க்ரியைகள் அனைத்தையும் பெரிய நம்பியையே செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார். அவர் இந்த உடலை ஹவிஸோடே (யஞ்யத்தில் ஸமர்பிப்பது) ஒப்பிட்டார். அதாவது எப்படி அது பகவானுக்கு மட்டுமே ஸமர்பிக்கத் தகுந்ததோ இதுவும் அப்படியே என்றும், அதை எப்படி மற்றையார்கள் தொடக்கூடாதோ அதே போல் இதையும் மற்றையார்கள் தொடக்கூடாது என்று கூறினார். பெரிய நம்பி இந்த நியமனத்தை சிரஸாக வகித்து, மாறனேரி நம்பி பரமபதித்த உடன் அவருக்கு சரம கைங்கர்யத்தைச் செய்து முடித்தார். இதைப் பார்த்த அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் அவருடைய (மாறனேரி நம்பி) வர்ணத்தினால் குறைவு என்பதால், இவர் அந்திம க்ரியைகள் செய்தது தவறு என்று கூறி, எம்பெருமானாரிடம் சென்று குறை கூறினார்கள். எம்பெருமானாருக்கோ பெரிய நம்பி மூலமாக மாறனேரி நம்பியினுடைய பெருஞ்சிறப்பை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவர் பெரிய நம்பியிடம் சென்று “ஏன் இப்படிச் செய்தீர்?” என்று வினவினார். “அடியேனோ சாஸ்திரங்கள் மீது ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை வளர வேண்டும் என்று சில காரியங்களைச் செய்தால், தேவரீர் எதற்காக இப்படி ஒரு காரியத்தை சாஸ்திரத்திற்கு முரணாகச் செய்தீர்?” என்று எம்பெருமானார் பெரிய நம்பியிடம் கேட்டார். அதற்குப் பெரிய நம்பி “பாகவத கைங்கர்யத்திற்கு நாம் வேறொருவரை நியமிக்க முடியாது. நாமே தான் செய்து முடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஸ்ரீ ராமன், ஜடாயுவிற்கு அந்திம க்ரியைகளைச் செய்தான். நான் ராமனை விட உயர்ந்தவன் அல்ல, இவரும் ஜடாயுவை விடத் தாழ்ந்தவன் அல்ல, அதனால் அடியேன் இவருக்கு செய்த கைங்கர்யம் ஒன்றும் தவறு இல்லை. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் “பயிலும் சுடரொளி” (திருவாய்மொழி 3-7) மற்றும் “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) பதிகங்களில் பாகவத சேஷத்வத்தை பற்றி மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார். அது வெறும் தத்வார்த்தம் மட்டும் அன்று, நாம் ஆழ்வாருடைய தெய்வீக வார்த்தையை நம்மால் இயன்ற அளவு பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எம்பெருமானார் மிகவும் சந்தோஷத்துடன் பெரிய நம்பியைச் சேவித்தார். பிறகு பெரிய நம்பி செய்தது உன்னதமான செயல் என்று அறிவித்தார். இதைக் கேட்ட அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இந்த அழகான ஸம்பாஷணையை, மணவாள மாமுனிகள் பிள்ளை லோகாசாரியருடைய ஸ்ரீவசன பூஷனத்தில் உள்ள 234வது ஸூத்திரத்தினுடைய வ்யாக்யானத்தில் மிகவும் அருமையாக விளக்கிக் காட்டியுள்ளார்.

நம்பியினுடைய வைபவம் வ்யாக்யானங்களில் சில இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

  • திருப்பாவை 29 – ஆய் ஜனன்யாசாரியர் வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் எம்பெருமானார் மற்றும் பெரிய நம்பிக்கு இடையே நடந்த சம்பாஷணை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மாறனேரி நம்பியின் கடைசி நாட்களில், அவர் சரீரரீதியான இடர்பாடுகளை சகிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், தன்னுடைய இறுதிக் கணங்களில் தாம் எம்பெருமானைப் பற்றி த்யானிக்க முடியாதோ என்று மிகவும் வருந்தினார். அந்த நிலையைப் பார்த்த பெரிய நம்பி, எம்பெருமானாரிடம் மாறனேரி நம்பி பரமபதம் சென்றடைவாரா? என்று கேட்டார். அதற்கு எம்பெருமானார் “வராஹப் பெருமாள் முன்பே வராஹ சரம ச்லோகத்தில் உத்திரவாதம் கொடுத்துள்ளாரே! அதாவது எவன் ஒருவன் தன்னைச் சரணடைந்தானோ அவனைக் கடைசி நேரத்தில் தான் நினைத்து, தானே அவனை பரமபதத்தில் சேர்ப்பதாகக் கூறியுள்ளார்” என்றார். உடனே பெரிய நம்பி “அந்த வார்தைகளை நம்ப முடியாது, ஏனென்றால் அவன் அதை பூமிப் பிராட்டி மீது உள்ள பற்றினால் கூறியிருப்பான், அதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார். அதற்கு எம்பெருமானார் “பிராட்டி எப்பொழுதுமே எம்பெருமானுடன் இருப்பதால், அவளை சமாதானப்படுத்துவதற்காக அவன் இந்த வார்தைகளைக் கூறியிருக்கமாட்டான்” என்றார். உடனே பெரிய நம்பி “ஒருவன் பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருந்தால் அவனுக்கு மோக்ஷம் கொடுக்கப்படும் என்று எங்கே கூறியுள்ளது? அதற்கு ப்ரமாணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு எம்பெருமானார், கண்ணன் எம்பெருமான் சாதித்த கீதையில் 4.10ல் உள்ள வார்தையை எடுத்துகாட்டினார் “ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுன“. அதாவது எவன் ஒருவன் பகவானுடைய அவதாரத்தையும், அவனுடைய சேஷ்டிதங்களையும் உண்மையாகப் புரிந்து கொள்கிறானோ, அவனது ஜன்மத்தின் முடிவில் நிச்சயமாகப் பரமபதத்திற்குச் செல்வான். எம்பெருமானாரின் இந்த வார்தையைக் கேட்டவுடன்  பெரிய நம்பி மிகவும் மகிழ்ந்தார்.
  • பெரிய திருமொழி 7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் அவதாரிகை – இந்தப் பதிகத்தில், “கண்சோர வெங்குருதி” பாசுரத்தில் , திருச்சேறை ஸாரநாதன் எம்பெருமானிடம் சரணடைந்த ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் புகழ்ந்து பேசுகிறார் திருமங்கை ஆழ்வார். இந்த இடத்தில் பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம கைங்கர்யங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
  • முதல் திருவந்தாதி 1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஒருவர் மாறனேரி நம்பியிடம் “எம்பெருமானை மறவாதிருக்க ஏதேனும் வழி உண்டோ?” என்று கேட்க அதற்கு அவர் “எம்பெருமானை மறப்பதற்கு ஏதேனும் வழி உண்டோ?” என்று கேட்டார் (ஏனென்றால் இவர் எப்பொழுதுமே எம்பெருமானைப் பற்றி த்யானித்துக் கொண்டிருப்பதால், அவரால் எம்பெருமானை மறப்பது சாத்தியம் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை).
  • ஸ்ரீவசன பூஷணம் 324 – பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பெருமையை இந்த ஸூத்திரத்தில் கூறினார். குறிப்பாக ஒருவன் பிறக்கும் வர்ணத்தினால் அந்த பெருமைகள் குறையாது என்று கூறினார். பல உதாரணங்களுக்கு மத்தியில், பெரியநம்பி தான் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம கைங்கர்யங்களைப் பற்றி எம்பெருமானாருக்கு விவரித்ததை எடுத்துக் காட்டியுள்ளார். மாமுனிகள் அவருடைய அழகான வ்யாக்யானத்தில் இந்த ஸம்பாஷணையின் ஸாரத்தை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
  • ஆசார்ய ஹ்ருதயம் 85 – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், தன்னுடைய தமையனாரின் (பிள்ளை லோகாசாரியர்) அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மாறனேரி நம்பியுடைய பெருமையை ஒரு சூர்ணிகையில் இந்த சம்பவத்தின் மூலம் எடுத்துக்காட்டினார்.

இதன் மூலம் நாம் மாறனேரி நம்பியின் சில பெருமைகளில் சில துளிகளை அனுபவித்தோம் .

நாமும் ஆளவந்தார் மீது மிகவும் பற்றோடு இருந்த மாறனேரி நம்பியின் திருவடித் தாமரைகளைப் போற்றி வணங்குவோம்.

குறிப்பு : இவருடைய திருநட்சத்திரம் ஆடி-ஆயில்யம் என்று பெரிய திருமுடி அடைவில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் ஆனி-ஆயில்யம் என்று அவருடைய வாழித் திருநாமத்தில் காட்டப்பட்டுள்ளது.

மாறனேரி நம்பியினுடைய தனியன் :

யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம்
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாசன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/03/02/maraneri-nambi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “மாறனேரி நம்பி”

Comments are closed.