ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:
திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர்
பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்
நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்)
சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்
எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர் சன்யாசம் பெற்றபின் கூர நாராயண ஜீயர், நலம் திகழ் நாராயண ஜீயர், நாராயண முனி, பெரிய ஜீயர், ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.
எம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர்
சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார். இவர் முதலில் ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.
இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் பார்த்தசாரதி ஸந்நிதி, கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார். பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.
இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார். வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது. வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும், ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீசூக்த பாஷ்யத்தையும் நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார். இவர் ஆழ்வான் சிஷ்யராதலால் நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே, நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க, வேதாந்தாசார்யார் இவரை பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார், மேலும் மாமுனிகள் இவரை “ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.
கூரநாராயண ஜீயர் சுதர்சன உபாசகர். ஒருமுறை ஆழ்வான் இவரிடம்,”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம், ஸ்வப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும், இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன், எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.
இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,
- முன்பு நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர, இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார். பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
நம்பெருமாளும் நாச்சியார்களும் தெப்பத்தில்
- ஒருமுறை திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்திப் பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட, ஜீயர் சுதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது சுதர்சன சதக தனியனில் தெளிவு.
திருவரங்கப்பெருமாள் அரையர்
எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது. இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.
இப்படிப்பட்ட சிறந்த பெருமைகள் பெற்ற கூர நாராயண ஜீயர் திருவடிகளில் பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் நமக்கும் கிட்டப் ப்ரார்த்திப்போமாக.
இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குணஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் என்று இதன் பொருள்.
கூர நாராயண ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/12/30/kura-narayana-jiyar-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org