அப்பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

appiLLai

திருநக்ஷத்ரம்: தெரியவில்லை

அவதார ஸ்தலம்: தெரியவில்லை

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

அருளிச்செயல்கள்: இயற்பாவில் உள்ள அனைத்துத் திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானங்கள், திருவிருத்த வ்யாக்யானம் (முதல் 15 பாசுரங்கள்), யதிராஜ விம்சதி வ்யாக்யானம், வாழி திருநாமங்கள்.

ப்ரணதார்த்திஹரன் என்ற திருநாமம்கொண்டு அவதரித்தார், பின்னர் “அப்பிள்ளை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரே பிற்காலத்தில் மாமுனிகளின் நெருங்கிய சீடரும் அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாகத் திகழ்ந்தார்.

பெரிய பெருமாளின் ஆணைப்படி மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து சம்பிரதாய விஷயங்களைப் பரப்பினார். இதைக் கண்ட பல ஆச்சார்யர்கள் மாமுனிகளின் சிஷ்யர்களாயினர்.

எறும்பியப்பா ஸ்ரீரங்கம் வந்தடைந்து மாமுனிகளின் சிஷ்யரானார். அவர் மாமுனிகளோடே சில காலம் தங்கியிருந்து, பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்படத் திருவுள்ளம் கொண்டார். அவர் சிறிது காலம் மாமுனிகளுக்கு கைங்கர்யம் செய்யது விட்டு தமது ஊரான எறும்பிக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டிருந்தார். ஆனால் சில அசுப நிகழ்வுகள் நடப்பதை உணர்ந்து புறப்படவில்லை. பின்னர் மாமுனிகளிடம் வந்தடைந்தபோது, “நீர் பொறுத்திரும், ஒரு நல்ல சந்தர்ப்பம் உமக்காய் காத்திருக்கிறது, அதன் பின்னர்  நீர் புறப்படலாம்” என்றார். அங்கிருந்த மற்றவர்கள் அது கேட்டு மிகவும் அகமகிழ்ந்து, அந்த நல்ல சந்தர்ப்பம் என்னவாயிருக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

அந்த சமயம் அப்பிள்ளையும், அப்பிள்ளாரும் தங்களது குடும்பத்தோடே ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். ஸ்ரீரங்கநாதனை சேவிக்கவே ஆர்வமாய் இருந்தனர். மாமுனிகளைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தாலும் மாமுனிகளிடம் அவ்வளவாய் ப்ரீதியில்லாமல் இருந்தனர். பெரும் பண்டிதர்களாய் இருந்தமையால், தர்க்கத்தில் ஜெயித்த பெரும் செல்வத்துடனே காவிரிக்கரையில் சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்படித் தங்கியிருந்த போது மாமுனிகளின் வைபவங்களைக் கேள்விப் படுகின்றனர். ஆசார்ய ச்ரேஷ்டர்களான கந்தாடை அண்ணன் மற்றும் எறும்பியப்பா ஆகியோர் மாமுனிகளைத் தஞ்சமடைந்திருப்பதையும் கேள்விப்படுகின்றனர். இதனால் மிகவும் ஆச்சர்யமடைகின்றனர். எறும்பியப்பாவின் சாஸ்த்ர ஞானத்தை நன்குணர்ந்த அப்பிள்ளார், அப்படிப்பட்ட ச்ரேஷ்டரான எறும்பியப்பாவே மாமுனிகளிடம் சிஷ்யரானார் என்றால் மாமுனிகளின் வைபவம் சாமான்யமானது இல்லை என உணர்ந்தார். உடனே தனக்கு மிகவும் நெருக்கமானவரும் சிறந்த ஞானம் பெற்றிருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவருடனே ஜீயர் மடத்தை அடைந்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரை உள்ளே அனுப்பி எறும்பியப்பாவைப் பார்த்து “அப்பிள்ளான் வந்திருக்கிறார்” எனத் தெரிவிக்கச் செய்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரும் எறும்பியப்பாவைக் கண்டு அவ்வாறே தெரிவித்தார். இதைக் கேட்ட எறும்பியப்பா அப்பிள்ளாரைக் காணப் போவதை நினைத்து மிகவும் அகமகிழ்ந்தார். உடனே எறும்பியப்பாவும் அப்பிள்ளாரும் சந்தித்தனர். எறும்பியப்பாவின் திருத்தோள்களில் சங்கு-சக்கரப் பொறிகளைக் கண்டு அப்பிள்ளார், எறும்பியப்பா மாமுனிகளின் சிஷ்யரானமையை உணர்ந்தார். உடனே அப்பிள்ளார் எறும்பியப்பாவை தண்டன் சமர்பிக்கிறார். பிறகு இருவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். எறும்பியப்பா தாம் எப்படி எம்பெருமானின் ஆணைப்படி மாமுனிகளை அடைந்தார் என ஒன்று விடாமல் சாதித்தருளினார். மெதுவாக மாமுனிகளின் அருமை அப்பிள்ளாருக்குப் புரிகிறது. பிறகு தம்முடன் அப்பிள்ளையும் மற்றும் பலரும் வந்திருப்பதையும், அவர்கள் காவிரிக்கரையில் தங்கியிருப்பதையும் தெரிவித்தார். எறும்பியப்பா மற்ற அனைவருக்கும் மாமுனிகளின் வைபவத்தை அருளுமாறு பிரார்த்தித்தார். எறும்பியப்பா மிகவும் மகிழ்ச்சியுற்றார். உடனே இதனை எறும்பியப்பா வானமாமலை ஜீயரிடம் தெரிவித்து, அப்பிள்ளாராய் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தித்தார். பிறகு காவிரிக்கரைக்குச் சென்று அனைவரையும் சந்தித்து மாமுனிகளின் வைபத்தை அருளினார்.

இதற்கிடையே வானமாமலை ஜீயர் மாமுனிகளை சந்தித்து அப்பிள்ளை, அப்பிள்ளார் என்று இரு பெரும் பண்டிதர்கள் எழுந்தருளியிருப்பதைத் தெரிவித்தார். மேலும் அவர்கள் மாமுனிகளிடம் சம்பந்தம் பெற ஆர்வத்துடன் உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். ஆசார்ய சம்பந்தம் ஏற்படும் முன் ஆறு விஷயங்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதை இந்த ச்லோகத்தில் காணலாம்

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்தம் யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா விஷ்ணோ: கடாக்ஷம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி

  • முதலில் பகவான் மிகவும் நல்லுள்ளம் கொண்டவன், அவன் எல்லோரின் க்ஷேமத்திற்காவே இருப்பவன்.
  • இரண்டாவதாக நல்ல விஷயத்தை அடைய சந்தர்ப்பமும் அவாவும் இருத்தல் வேண்டும்
  • மூன்றாவதாக, பகவானின் காருண்யமான கடாக்ஷம் அந்த ஜீவாத்மாவிற்குக் கிட்டவேண்டும்
  • நான்காவதாக – அந்த ஜீவாத்மா அத்வேஷத்தை வெளிப்படுத்த வேண்டும்; அதாவது பகவானின் கருணையை தடுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • ஐந்து – அந்த ஜீவாத்மா பரமாத்மாவிடத்தில் ஆபிமுக்யம் பண்ண வேண்டும்; பகவானிடத்தில் ஈடுபாடு கொள்தல்.
  • ஆறு : அந்த ஜீவாத்மா பகவத் விஷயத்தை அறிந்து அதனால் பரிசுத்தமடைந்த பாகவதர்களோடு ஸம்பாஷிக்க வாய்ப்புக் கிட்டி, அதனால் ஆசார்யனை அடைதல் வேண்டும்.

வந்திருப்பவர்கள் எறும்பியப்பாவிடம் பேசும் பாக்கியம் பெற்றுவிட்டதால் அவர்களை நீர் சிஷ்யர்களாக ஏற்றுக் கொள்ளும் தகுதி அடைந்தனர் என்று பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை ஜீயர்) மாமுனிகளிடம் தெரிவித்தார். எப்போதுமே ஜீவாத்மாவின் உய்வைக் கருதும் நீர் எறும்பியப்பாவின் விருப்பத்தினையும் அடியேன் விருப்பத்தினையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மாமுனிகளிடம் பிரார்தித்துக் கொண்டார். மாமுனிகள் இதனை ஏற்றுக் கொண்டு “எம்பெருமான் தன விருப்பத்தினை தெரிவித்து விட்டான், மேலும் வந்திருப்பவர்களில் ஒருவருக்கு எம்பெருமானாரின் திருநாமம் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது) தாஸ்ய நாமமாகக் கொடுக்க உள்ளோம்” என்றும் சாதித்தருளினார். அப்பிள்ளை, அப்பிள்ளார் முதலானோரை அழைத்து வர பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் அனுமதியினை பிரார்தித்துப் பெற்றார். உடனே ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி தாம் அவர்களை சந்திக்க இருப்பதாக செயதி அனுப்பினார்.

பொன்னடிக்கால் ஜீயரும், மாமுனிகளின் சிஷ்யர்களும் வரப்போவதை நினைத்து அப்பிள்ளார் பூரிப்படைந்தார். தன்னுடன் இருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவர்களின் வழியில் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பச்சை சால்வையை விரிக்கச் செய்து, வந்தவர்கள் அதன் மேல் பொன்னடிகளை சாற்றிய பிறகு அந்த ஸ்ரீபாத தூளியினை தன் சென்னியில் சாற்றிக் கொண்டார். பிறகு பழங்கள் மற்றும் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு முதலியன) சமர்ப்பித்து சுவீகரிக்கச் செய்தார். அத்தனை பேர்களையும் ச்ரத்தையுடன் வரவேற்று அனைவரின் ஸ்ரீபாத தூளிகளையும் தன் தலை மேல் ஏற்றார். அனைவரின் நலன்களையும் விசாரித்தபின் பொன்னடிக்கால் ஜீயர் அனைவரையும் கோயில் அண்ணன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். கோயில் அண்ணன் மாமுனிகளை எம்பெருமானாரின் மறு அவதாரம் என்று எடுத்துரைத்தார். இதைக்கேட்ட அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் மாமுனிகளிடம் தஞ்சம் புக எண்ணினர். பிறகு வெற்றிலை, பழம், முதலியவைகளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜீயர் மடத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் திருமலை ஆழ்வார் மண்டபத்தை அடைந்தபோது பேரொளியுடன் மாமுனிகள் எழுந்தருளியிருப்பதைக் கண்டனர். அழகான, அகண்ட தோள்களுடனும், திருமார்பு, அழகான கண்கள் மற்றும்  மிகுந்த தேஜசுடனும் மாமுனிகள் இருப்பதைத்
தரிசித்தனர். தூய்மையான காஷாயத்தையும், த்ரிதண்டத்தையும் தரித்துக்கொண்டு அனைவரையும் அன்பான புன்முறுவலுடன் வரவேற்றார். அவருடைய வடிவழகைக் கண்டு வியந்த அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டன் சமர்பித்தபடியே மாமுனிகள் வார்த்தைக்காக காத்திருந்தனர். மாமுனிகள் அன்புடன் அனைவரது மரியாதையையும் ஏற்று  சம்பிராதாயத்திலுள்ள சில சாரரமான அர்த்தங்களைச் சாதிக்க, பெரும் பண்டிதர்களான அப்பிள்ளையும்  அப்பிள்ளாரும் வியந்தனர். உடனே அவர்கள் தங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாக ஏற்குமாறு தெரிவித்தனர். இதனை மாமுனிகள் ஏற்று அனைவருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாய் ஏற்றார். அடுத்து மாமுனிகள் அனைவரையும் பெரிய பெருமாளிடத்தே முறைப்படி அழைத்துச் சென்றார். (பூர்வ தினச்சார்யா எனும் ஸ்தோத்ர பாடத்தில் காட்டியுள்ளபடி முறைப்படி மாமுனிகள் ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், சேனை முதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார், பரமபதநாதன் என்று சேவை செய்துவைத்தார்). இவ்வாறாக அனைவரையும் எம்பெருமானிடம் சரணாகதி செய்து வித்தார். பிறகு அனைவரும் ஜீயர் மடத்தை அடைந்து,  சாஸ்திரப்படி, மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை சுவீகரித்தனர்.

அப்பிள்ளை திருவந்தாதிகளுக்கு மாமுனிகள் ஆணைப்படி வ்யாக்யானம் அருளி, மாமுனிகள் பல திவ்யப் பிரபந்த கைங்கர்யங்களில் உதவினார்.

அப்பிள்ளையின் வைபவத்தில் ஒரு சிறு பகுதியை அனுபவித்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். நாமும் அவரது திருவடியில் சிறிதேனும் ஈடுபாடு பெற ப்ரார்த்திப்போம்.

அப்பிள்ளையின் தனியின்

காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/10/19/appillai-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org