ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: மாசிப் புனர்ப்பூசம்
அவதாரஸ்தலம்: திருவஞ்சிக்களம்
ஆசார்யன்: விஷ்வக் சேனர்
பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி
பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்
கர்வம் கொள்ள ஸ்வபாவமாகவே நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை. பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கல் இருந்த இவரது இணையிலா ஈடுபாட்டினாலேயே இவர் தாமே குலசேகரப் பெருமாள் எனப்படுகிறார். இவர் தம் பெருமாள் திருமொழியில் முதல் பதிகத்திலே பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்தவுடனே இரண்டாம் பதிகத்திலேயே (தேட்டறும் திறல் தேன்) ஸ்ரீவைஷ்ணவர்களைப் போற்றிப் பாடுகிறார். அவர்களிடத்தில் இவர்க்கிருந்த எல்லையற்ற பக்தி ஈடுபாட்டை நாம் அவர் சரித்திரத்தில் காண்போம்.
ஶேஷத்வமே ஜீவனின் ஸ்வரூபம் என்பதை அவர் பெருமாள் திருமொழியில் இறுதியில் (பத்தாம் பதிகம் ஏழாவது பாசுரம்), “தில்லை நகர்ச் சித்திரகூடம் தன்னுள் அரசமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றரசுதானே” எனத் தெளிவுபடக் கூறுகிறார்.
அசித்வத் பாரதந்த்ர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம், அதாவது எம்பெருமான் கைங்கர்யத்தில் ஒரு ஜீவாத்மா அவன் கைப்பொருளாக அவன் அனுபவத்துக்குறுப்பாக ஸ்வ ஞானமோ போக உணர்வோ அற்றிருக்கவேண்டும் என்பதாம். இதை அவர் நான்காம் பதிகம் ஒன்பதாம் பாசுரத்தில் மிக அழகாகக் கூறுகிறார்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே
என் வலிய தீவினைகளைப் போக்கி என்னை ரக்ஷிக்கவல்ல வேங்கடவனே! அடியேன் உன்னிடம் பலன்களை வேண்டி உன்னைத்தொழ வரும் தேவரும் உன்னைக் கண்டு களிக்கவே வரும் அடியவரும் தம் திருவடிகளால் மிதித்து நிற்கும் படிக்கட்டாய் உன் திருமலையில் நிற்கக் கடவேன் என்கிறார்.
பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுர வ்யாக்யானத்தில் இதை அழகாக விளக்குகிறார். இங்கு படியாய் என்று சந்தனம், மலர் போலத் தாம் அசித்துப் போலிருக்க விரும்புவதையும், பவளவாய் காண்பேனே என்று அவன் முகோல்லாஸத்தைக் கண்டு தன்னுடைய சைதந்யத்தின் வெளிப்பாடான ஆனந்தத்தையும் காட்டியருளினார். இதுவே அசித்வத் பாரதந்தர்யம் எனும் மிக உன்னத ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடாகும்.
http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-kulasekara.html என்கிற பதிவில் மாமுனிகள் குலசேகரப் பெருமாளைக் கொண்டாடியுள்ளதை அனுபவிக்கலாம்.
ஆசார்ய ஹ்ருதயம் 87வது சூர்ணிகையில் அடியார்களிடையே ஜன்மம் அடியாக வேறுபாடுகள் காணலாகாது என விளக்கும்போது, நாயனார், நம்மாழ்வார் பெருமை கூற முற்பட்டு, கைங்கர்ய மேன்மை அடியார் மேன்மை என விளக்குகையில் எவ்வாறு மஹா பக்தர்கள் கீழான பிறப்பையும், அப்பிறப்பு கைங்கர்யத்துக்கு உறுதுணையாகுமேல் அதை விரும்பிப் பற்றி வேண்டினார்கள் என்று காட்டுகிறார். “அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களிலே ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெருமக்களும் பெரியோர்களும் பரிக்ரஹித்துப் ப்ரார்த்திப்பர்கள்” என்பது அவர்தம் அமுத மென்மொழி.
நித்ய ஸூரிகளான அனந்தன், கருடன் போன்றோர் எம்பெருமானின் படுக்கை, வாகனங்களாக இருக்க விரும்பி வேண்டிப் பெற்றனர். நம்மாழ்வார் திருத்துழாய் எம்பெருமானுக்கு மிகப்ரியமாய் இருந்தது அவன்றன் திருமார்விலும் திருமுடியிலும் தோளிணை மீதும் தாளிணை மீதும் கிடக்கின்றது என்பதை உணர்த்துகிறார். பராஶர வியாஸ ஶுகாதிகள் பிருந்தாவனத்தில் அவன் நடந்த பாதையில் தூளியாய்க் கிடக்க விரும்பினார்கள்.
பெருமாள் திருமொழி நாலாம் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் நித்யமாகக் கைங்கர்யம் செய்யும் வகையில் எம்பெருமானுக்கருகில் எதேனுமாக இருப்பைப் ப்ரார்த்திக்கிறார்.
- அம்மலையில் ஒரு பக்ஷியாக
- பக்ஷி பறந்து விடும் என்பதால் அங்குள்ள குளத்திலே ஒரு மீனாக
- மீன் நீந்திச் சென்றுவிடும் என்பதால் எம்பிரான் உமிழும் பொன் எச்சில் வட்டிலாக
- பொன் எனும் கர்வம் வாராதிருக்க ஒரு மலராக
- மலர் வாடுமென்பதால் மரமாக
- மரத்தை வெட்டிவிடலாமமெனவே திருமலைமேல் பெருகும் ஓர் ஆறாக
- ஆறு வற்றிவிடலாமெனவே சந்நிதிக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டாக
- என்றேனும் படிக்கட்டுகளை இடிக்கலாமெனவெ அவன் திருமுன்பே ஒருபடியாக (எனவேதான் குலசேகரன் படி என வழங்குவதாயிற்று)
- திருவேங்கட மலைமேல் ஏதாவதொன்றாக இருக்கவேணும் என்றார். இதைப் பெரியவாச்சான் பிள்ளை விளக்கி, திருவேங்கடவன் ஆகவும் ஆம் என்றார். பட்டர், “நான் உளேன் எனத் திருவேங்கடவனும் அறிய வேண்டா, ஆர்க்கும் தெரிய வேண்டா என்னைப் போற்றவேண்டா நான் அங்கு நித்யவாஸம் செய்யப் பெறில் போதும் காண் ” என்றார். பகவத், பாகவத சம்பந்தத்தில் குலசேகர ஆழ்வாரின் ஊற்றம் இவ்வாறாய் இருந்தது.
ஆழ்வார் சரித்ரம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் கொல்லிநகரில் (திருவஞ்சிக்களம்) ஸ்ரீ கௌஸ்துபாம்ஶராக அரசர் குலத்தில் அவதரித்தார். சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யஸூசூரிகள் என்பர். ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு ஸம்ஸாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். மாற்றலரை, வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன், சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணி) என்பன இவரின் திருநாமங்களாய் இருந்தன. இவர் மாற்று மன்னவர்களைத் தோற்கடித்த சேர குலத் திலகர், பெருவலியர், தேர் வல்லவர். ஶாஸ்த்ர மர்யாதைக்குட்பட்டு அரசாட்சி சிறப்பாகச் செய்தார். ஸ்ரீராமன் போல் எதிரிகட்கு ஸிம்ஹமாயும், நல்லோர்மாட்டு வினயமும் வள்ளண்மையும் பூண்டிருந்தார்.
பேரரசரானபடியால் தனித்துவமும் தைரியமும் மிக்கு விளங்கினார். ஆனால் இவர் தனித்வமும் ஸ்வாதந்த்ர்யமும் ஸ்ரீமன் நாராயணன் திருவருளால் நீங்கி மயர்வற மதிநலம் எய்தி, ராஜஸ தாமஸ குணங்களை எம்பெருமான் நீக்கக் கருதினான். ஆட்சியில் விசேஷப்பற்றின்றி எப்பொருளிலும் விருப்பின்றி விபீஷணாழ்வான் போலே செல்வங்களிலிருந்து விலகியே எம்பெருமானுக்காட்பட்டு இருந்தார். அவர் மனதில் ஸ்ரீரங்கத்தின்பால் பேரவா கிளர்ந்தது. அரங்கநாதன் மீதும் அவனையே எப்போதும் நினைத்திருந்த அடியார்கள் மீதும் பெருங்காதல் எழுந்தது. வைஷ்ணவாக்ரேஶரான சாதுக்களோடும், அணியரங்கன் திருமுற்றத்தடியார்களோடும் வாழ விரும்பினார்.
கங்கை யமுனையினும் மேம்பட்ட ஸ்வாமி புஷ்கரிணியை உடைய திருவேங்கடமும் இவர் மனத்தைக் கொள்ளை கொண்டது. “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்” என ஆண்டாள் பாடினாப்போல் மஹரிஷிகளையும் மஹாத்மாக்களையும்போல் அங்கு நித்யவாஸம் செய்ய விரும்பினார். நாம் முன்பே பார்த்தபடி அங்கே அவர் ஒரு பறவையாகவோ, மீனாகவோ, நதியாகவோ, மரமாகவோ, மலையாகவோ அங்கேயே இருக்க விரும்பினார். மேலும் அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள திவ்யதேஶங்களில் எம்பெருமானுக்கும் அடியார்களுக்கும் கைங்கர்யஞ்செய்திருக்க விரும்பினார்.
எல்லாப் புராணங்களையும் இதிகாஸங்களையும் நன்கு கற்றரிந்தபின் அவர் உலகுக்கு “முகுந்த மாலா” எனும் திவ்ய க்ரந்தத்தை உபகரித்தார்.
“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா”
என்கிற ஶ்லோகம் சொன்னபடி எவ்வாறு வேதத்தல் சொல்லப்படும் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ ராமனாய் அவதரித்தானோ, அது போல வேதமும் வால்மீகியின் ஸ்ரீ ராமாயணமாக அவதரித்தது என்பதால் இவர் ஸ்ரீராம பக்தியில் எப்போதும் ஆழ்ந்து கிடந்தார்.
சில நேரங்களில் இவர் பக்திபாரவஶ்யத்தில் எம்பெருமான் பதினாலாயிரம் ராக்ஷஸர்களைத் தனி ஒருவனாக எதிர் கொண்டான் என்று ஸ்ரீராம கதையைக் கேட்கும்போது கதாஶ்ரவணம் என்பதும் மறந்து, ஆ! எம்பெருமான் தனியே சென்றானா! உடன் ஆரும் இல்லையா! ஐயோ படை திரட்டுவீர்! வாரீர்! பெருமாளுக்குப் பக்கபலமாய் இருப்போம் என்று படைகளை ஏந்திப் புறப்படும் உணர்ச்சி தீட்சிதராய் இருந்தார். அப்போது தாம் யார் என்பதும் மறந்திடுவார். ஸீதா தேவியை விட்டு, ஸ்ரீராமன் கர தூஷணாதியரை அழிக்கப்போரில் தனியே சென்றான் என்று கதை கேட்கும்போது உணர்ச்சிவயப்பட்டு ஸேனாதிபதியை அழைத்துப் படைதிரட்டச் சொல்லவும், பௌராணிகர் ஸமயோசிதமாய், “அரசரேறே! அவ்வளவில் ஸ்ரீராமன் ஒருவனே தன் வில்வலியால் அவ்வளவு அரக்கரையும் முற்றாக ஒழித்தான், பிராட்டி அவனது வீரப் புண்களுக்கு மருந்திட்டுத் தடவி ஒத்தடம் தந்தாள்” என்று கூற ஸமாஹிதரானார்.
அவரது அமைச்சர்களுக்கு அவரது வைஷ்ணவ ஸஹவாசம் வெறுத்துப்போக, அவர்களாலேயே அரசர் இவ்வாறு ராமப் பித்திலுள்ளார் என்பதால் எவ்வாறாயினும் அவர்களை விரட்ட விரும்பி அதற்கொரு திட்டம் தீட்டினர். திருவாராதனத்திலிருந்த ஒரு மாணிக்க மாலையை எடுத்து ஒளித்து வைத்து அதை வைஷ்ணவர்கள் களவாடினார் என்று பழிக்கவும், அடியார் அது செய்யார் என்று மறுத்த அரசர் தாம் ஒரு பாம்பையிட்ட குடத்தில் கையிட்டு இந்தச் ஸபதம் செய்வேன் என்றார். அவ்வளவில் அமைச்சர்கள் நடுங்கியபடி ஒருபாம்பையிட்ட குடம் கொணர இவர் அதில் சூளுரைத்துக் கையிட பாம்பும் கடிக்காமல் சாதுவாய் இருக்க அமைச்சர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு வைஷ்ணவ த்வேஷத்தை விட்டொழித்தனர்.
ஆழ்வார் ஸம்ஸாரிகளோடு வாழ வெறுப்புற்று “ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று அனைத்துப் பொறுப்புகளும் துறந்து இனி செல்வமும் அரசும் போகங்களும் எனக்கு வேண்டா என்று விட்டு, திருவரங்கம் சென்றார். அங்கே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சூழ, திருவரங்கப் பொன்னி நடுவில் அரவணையில் மணிபோல் பள்ளிகொண்ட கண்ணனை அரங்கனைக் கண் குளிரக் கண்டு மங்களாஶாஸனம் செய்து வித்தரானார். இவ்வாறு திவ்ய தேஶ வாஸமும், அர்ச்சாவதார மங்களாஶாஸனமுமே பொழுது போக்காய் இருந்து ஸம்ஸாரம் விட்டு திருநாடேகினார்.
ஆழ்வார் தனியன்:
குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே |
தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||
ஆழ்வார் வாழி திருநாமம்:
அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.
குலசேகர ஆழ்வாரின் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-kulasekara.html .
குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்
அடியேன் ஶடகோப ராமாநுஜ தாஸன்
ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/01/18/kulasekara-azhwar-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
2 thoughts on “குலசேகர ஆழ்வார்”
Comments are closed.