திருப்பாணாழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம்: கார்த்திகை ரோஹிணி

அவதாரஸ்தலம்: உறையூர்

ஆசார்யன்: விஷ்வக் சேனர்

பிரபந்தங்கள்: அமலனாதிபிரான்

பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

thiruppANAzhwar

பூர்வாசார்ய கிரந்தங்களிலே பரமாசார்யரான ஆளவந்தாருக்கு முனிவாஹனர் என்று ப்ரஸித்தி பெற்ற திருப்பாணாழ்வார் மேல் விஶேஷ பக்தியுண்டு என்று காணக்கிடைக்கிறது.

ஆழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் மிக அழகிய வ்யாக்யானம் அருளியுள்ளனர்.

​நாயனார் தம் திவ்யக்ரந்தத்தில் திருப்பாணாழ்வாரின் பெருமையைப் பேசியிருப்பதை இப்போது பார்ப்போம்.

முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்வத்திலே ஊன்றி அவனது அர்ச்சையைத் தொட்டுப் போந்தார்கள்.  குலசேகரப் பெருமாள் ஸ்ரீ வால்மீகி பகவான்போலே ஸ்ரீராமாவதாரத்திலே ஊன்றி அர்ச்சையையும் அநுபவித்தார். நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் வியாஸ பகவானைப்போலே க்ருஷ்ணாவதாரத்திலே  ஊன்றி அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்துப் போந்தார்கள். திருமழிசை ஆழ்வார் தேவதாந்தர பரத்வ நிரஶசனமாக எம்பெருமான் பரத்வத்திலே ஊன்றி அர்ச்சாவதார அநுபவம் பண்ணிப் போந்தார். திருமங்கை ஆழ்வார் ஒவ்வொரு திவ்யதேசமும் சென்று ஸேவித்து, எல்லா அர்ச்சாவதார எம்பெருமான்களிலும் ஊன்றி, விபவாவதாரங்களிலும் மாறி மாறி அனுபவித்துப் போந்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் ஒருவனிலேயே ஊன்றி,  உபதேஶசத்தில் நோக்கு வைத்தார்.

திருப்பாணாழ்வாரோ பெரியபெருமாளின் அர்ச்சையிலேயே ஊன்றி, கடவல்லி போலே அர்ச்சையை ஆதரித்துப் போந்தார்.

அர்ஜுனனுக்கும் அக்ரூர மாலாகாராதிகளுக்கும் கிருஷ்ணன் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி அருளினாப்போலே பெரியபெருமாளும் திருப்பாணர்க்குத் தன்  வடிவழகெல்லாம் காட்டி ​அருளினார்.

ஆழ்வார் பஞ்சமராய்த் திரு அவதரித்ததாலே நிச்சயம்/பணிவு அவர்க்கு ஜன்ம ஸித்தமாய்விட்டது.  அவர் தாமே நான்கு வர்ணத்திலுமில்லாததால் நான்குக்கும் வெளியே, நித்யஸூரி ஆனார்.  ​

திருவடி, தமக்கு ராமானுபவம் ஒன்றே போதும், திருநாடும் வேண்டாவென்றதுபோலே இவரும் பெரிய பெருமாளைக் கண்ட  தம் கண்களுக்கு பிறிதொன்றும் வேண்டாமென்றார்.

விபீஷணனின் மகிமை கருதி அவன் ஶரணாகதி செய்ய வந்தபோது பெருமாள் அவனை அழைத்துவர ஸுக்ரீவனை அனுப்பி விட்டது போல் பெரிய பெருமாளும் இவரைக் கோயிலுக்குள் அழைத்துவர லோகஸாரங்கரை விட்டனுப்பினார்.  ஆழ்வார் நிச்சயமாகக் கோயிலுக்குள் வர மறுத்தார்.  லோகஸாரங்கர் அவரை வற்புறுத்தித்தம் தோள்மேலே ஏற்றிக் கொணர்ந்தார். ஆழ்வார் தம் ஒன்பது பாசுரங்களால் எம்பெருமான் திருவடிவழகை வர்ணித்துப் பாடி,    ஸன்னிதிக்குள்ளேயே இவ்வழகைக் கண்ட கண்கள் மற்றொன்றும் காணா  என்று அருளிப் பெருமான் திருவடியிலே கற்பூரம் போலே மறைந்தார். ​

​இனி  ஆழ்வாரின் திவ்ய சரித்ரம்.​

ஆழ்வார் அவதரித்த உறையூரிலேயே அவதரித்த கமலவல்லி நாச்சியார் சரிதையோடு இவர் சரிதையும் தொடங்குகிறது.​

காவேரி நதிக் காற்றை சுவாசித்தாலே மோக்ஷம் என்பர். சோழ நாட்டிலே காவேரிக்கரையிலேயே இருப்பின் என் குறை?​ அந்நாளில் ரவி குலத்துதித்த தர்மவர்மன் எனும் சோழ பூபதியொருவன், ஸமுத்ரராஜன் திருமகளைப் பெற்றாப்போலே நீளா தேவியைத்தன் மகள் உறையூர் நாச்சியாராகப் பெற்று அவளை வளர்க்க அவளும் நம்பெருமாள் மேல் பெரும் காதலோடு வளர்ந்து அவனையே மணம் புரிவேன் என்றனள். அவனும் நம்பெருமாளை வேண்ட, பெருமாளும் இசைய, ஜனகராஜன்  ஸீதாப் பிராட்டிக்குச் செய்தாப்போலே பெருப்பெருத்த கண்ணாலம் நடந்தது.

அந்த சமயத்தில் ஆழ்வார் ஒருவருக்கும் கடன் படாத பஞ்சம குலத்தில் கார்த்திகை ரோஹிணி நன்னாளில் திருவவதரித்தார். ​கருடவாஹன பண்டிதர் தம் திவ்ய ஸூரி சரிதையில் ஸ்ரீவத்ஸத்தின் அம்ஶமாக இவர் அவதரித்தார் என்று சொல்லியிருந்தாலும் எம்பெருமானின் திருமறு ஸ்தானத்திலுள்ள சேதனர்களில் அவன் திவ்ய கடாக்ஷம் வீழ்ந்து அவர் மயர்வற மதிநலம் அடைவதனால் இவ்வாழ்வார்க்கும் அது கிட்டிற்று.

ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஶ்யேந் மதுஸூதந:
ஸாத்விகஸ்ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:

எம்பெருமான் மதுஸூதனன் கடாக்ஷம் பெற்ற ஜீவாத்மா ஸத்வ குணத்தோடு பிறக்கிறான், மோக்ஷத்திலே மட்டுமே நோக்காய் இருக்கிறான் என்பது இதன் பொருள். ​

இம்மஹாபாரத ஶ்லோகம் சொல்வதுபோல் இவ்வாழ்வாரும் நாராயணனிடம் நாரதர் மற்றும் ப்ரம்ம ராக்ஷஸிடமிருந்து அந்தணனை மீட்டத் திருக்குறுங்குடி நம்பிபால் பக்தி பூண்ட நம்பாடுவான் போல் பிறந்தபோதே பெரியபெருமாளிடம் பக்தியோடு ஸத்வ குண  ஸம்பன்னராய்ப் பிறந்தார். ​ஸ்ரீரங்கத்தினுள் நுழையாமல் தென் திருக்காவேரிக் கரையிலிருந்தே வடிவார்சோதி வலத்துறையும் சுடராழி ஏந்திய எம்பெருமானின் திவ்ய குண ரூப ஸ்வரூப விபவ லீலாதிகளை எப்போதும் த்யாநித்தும் பாடியும் இதுவே காலக்ஷேபமாய் இருந்தார்.

ஒருநாள் லோகஸாரங்கர் எம்பெருமான் திருவாராதனத்துக்குத் தீர்த்தம் கொணரத் திருக்காவேரிக்கு வந்தபோது பெரியபெருமாள் அநுபவ மக்னராய் இவர் திருக்கண்கள் மூடி, யாழ் இசைத்துப் பண் இசைத்துக் கொண்டிருக்க லோகஸாரங்கர் தம் குரலுக்கு இவர் அசையாததால் ஒரு கல்லைப்போட்டு அவ்விடத்தினின்று விலக்கி அவரது தீர்த்தகுடம் நிரப்பி சத்திர சாமரம் டமருகம் வாத்யாதிகளோடு செல்ல, நாச்சியார் பெருமாளிடம் நம் பாணனை ஸந்நிதிக்கு வெளியிலேயே நிறுத்தலாமோ என்ன அரங்கன் திருமுகம் வாடி, அவர் கவாடம் தாழிட்டு லோகஸாரங்கரிடம் என் அன்புக்குரிய அடியானை இப்படிச் செய்தீரே என்று கோபிக்க, அவர் தம் பிழையுணர்ந்து தபித்து பாகவதாபசாரப் பட்டேனே பரிஹாரம் என்னவோ எனக் கலங்க, பெரியபெருமாளும், “நீர் சென்று என் அடியானைத் தோள்மீது இங்கே தூக்கிவாரும்” ​என்றார். லோகஸாரங்கரும் விழித்தெழுந்து அக்ரூரர், “அத்ய மே சபலம் ஜந்ம ஸுப்ரபதா ச மே நிஶா” என்று கண்ணனையும் பலராமனையும் சென்று காண்கிற இன்றே எனக்கு நல்ல நாள் எனக் கொண்டாடினாப்போலே ஆகி, நல்லடியார்களோடு திருக்காவேரிக்குச் சென்று நீராடி நித்யாநுஷ்டானம் செய்தார்.

ஸுதூரமபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ் ஸ்தித: என்று கூறப்பட்டபடி பாகவதர்கள் தொலைவில் இருந்தாலும் சென்று சேர்ந்து பணியவேண்டுமாதலால் அவரிடம் செல்ல, அவர் பொழில்கள் சூழ் அரங்கநகரையே நோக்கி நின்று பாடியவாறிருக்க இவர் அவர்திருவடிகளில் வீழ்ந்து ஊருக்குள் அழைக்க, அவர் அடியேன் அதுசெய்யப்போகேன் என்ன, இவர் இது பெரிய பெருமாள் திருவாணை, தேவரீர் அடியேன் தோளில் ஏற அடியேன் அணியார் அரங்கன் திருமுற்றத்துக்கு தேவரீரை அவர் திருவாணைப்படியே எழுந்தருளப் பண்ணுவேன் என்னவும், திருப்பாணரும் இனி இது யாதும் என் செயலன்று அவன் இட்ட வழக்கு என்று இசைந்து, திவ்ய ஸூரிகளும் திவ்ய மஹிஷிகளும் அவனோடு திகழும் திவ்ய தேஜோமயமான அரங்கனின் திருமாமணி மண்டபம் அடைந்தார்.

இவ்விஷயம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் 85வது சூர்ணிகையில் அழகாகத் தெரிவிக்கப்படுகிறது.​

bhoga-mandapam

ஆழ்வார் எதிரில் பெரியபெருமாள் நித்ய ஸூரிகள் காணும் தம் திருவடிவைக் காட்ட, தாம் கண்டதை ஸந்நிதிக்கு வெளியே நின்று ஒன்பது பாசுரங்களாலே அநுபவித்தார் ஆழ்வார்.  ஸந்நிதியில் நுழைந்ததும் பெரியபெருமாள் எவ்வாறு அவர்க்குத் திகழ்ந்தார் என்பதை ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் கூறுகிறது:

பிரம்மனால் தொழப்பட்ட திருவரங்கநாதன், நீண்முடியும் ஆரமும் தோள்வளையும் கனங்குழைகளும் பீதக ஆடையும் அணிந்து திருமாமகள் திகழும் திருமார்வில் கௌஸ்துபம் இலங்க நீண்ட புஜங்களும் மலரடிகளும் துலங்க திருவடிகளைச் சற்றே உயர்த்தித் திருவுடல் வளைய ஒருதிருக்கரத்தால் திருமுடிதாங்கி ​அரவணையின் மீது அறிதுயிலில் இருந்தான்.

ஆழ்வார் உள்ளே நுழைந்ததுமே முதலாக யாவரும் கண்டுதொழ விரும்பும் ​இவ்வழகினைக் கண்டு, ஸ்தனன்யப்ரஜை (குழந்தை) எப்போதும்  தாய் மார்பிலே வாய் வைக்குமாபோலே இவரும் ஶரணாகதரானபடியால் பிரபன்னனுக்குரிய திருவடிகளிலேயே கண் வைத்து, ​”அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே“​ என்று என் ஸ்வாமியின் திருவடி நீண்டு என்னைத் தேடி வந்து என்னை அடைந்து ரக்ஷித்ததே என்றார்.​ அரங்கத்தம்மான் என்றதால் ஶேஷித்வம், கமலம் என்று தாமரையைச் சொன்னதால் போக்யத்வம், பாதம் என்றதால் உபாயத்வம் சொல்லப்பட்டது. பெரியாழ்வாரும் தம் பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து இரண்டாம் பதிகத்தில் இருபது பாசுரங்களில் எம்பெருமானைத் திருவடிமுதல் திருமுடிவரை அநுபவிக்கிறார், அவ்வாறே அநுபவித்த திருப்பாணாழ்வாரை லோகஸாரங்கர் எழுந்தருளப் பண்ணிவந்ததும் “அமலன் ஆதி பிரான்” திவ்யப்ரபந்தம் காட்டும் திருமந்த்ரார்த்தத்தின் உட்பொருளான எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக்கொண்டான, அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பது   ஸம்ப்ரதாயம்.

திருப்பாணாழ்வார் தனியன்:

ஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்

திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்:

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

திருப்பாணாழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thiruppanazhwar.html

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/01/21/thiruppanazhwar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “திருப்பாணாழ்வார்”

Comments are closed.