பெரியாழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

periazhvar

திருநக்ஷத்ரம்: ஆனி  ஸ்வாதி

அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆசார்யன்: விஷ்வக்சேனர்

பிரபந்தங்கள்: திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

பரமபதம் அடைந்த இடம்: திருமாலிருஞ்சோலை

திருப்பாவை வ்யாக்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை பெரியாழ்வாரை அத்புதமாகப் போற்றுகிறார். ஸம்ஸாரத்தில்  மூழ்கித்தவிக்கும் ஜீவர்களுக்குப் பெரியாழ்வார் ஸஹஜ தாஸ்யம் எனும் எம்பெருமானிடம் ஜீவன் தனக்கு இயல்வான தாஸ்ய பாவத்தோடு கைங்கர்யம் செய்வதைப் பெரியாழ்வார் காட்டியருளினார், கைங்கர்யம் மூலம் எம்பெருமானை அடைய எந்தக் கைங்கர்யம் மேலானது என்றறியவே அவர் ஶாஸ்த்ரார்த்தங்களை  கற்றார். மதுரைக்குச் சென்ற கண்ணன் எம்பெருமான் கம்ஸன்  மாளிகை புகுமுன் தானே உவந்து மாலாகாரர் குடிலில் நுழைந்து விரும்பி அவர் மாலையை ஸ்வீகரித்தான் என்பதால் இவரும் நந்தவனம் அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர ஸாயிக்கு  திருமாலை கட்டிக் கொடுக்கும் கைங்கர்யம் மேற்கொண்டார்.

மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் இவர்க்கும் உள்ள வேறுபாடு, அவர்கள் தம் துயர் மயர்வறுக்க எம்பெருமானை வேண்ட, இவர் ஜீவர்கள் யாவரும் எம்பெருமானைப் பரமபதத்தில் எப்போதும் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி மங்களாஶாஸனம்  செய்வதை வேண்டினார். ஈஶ்வரன் தங்களைக் காப்பதாக அவர்கள் நினைத்தார்கள், இவரோ ஈஶ்வரனுக்கு ரக்ஷையாகக் காப்பும் பல்லாண்டும் பாடினார். இதைப் பிள்ளை லோகாசார்யரும் மாமுனிகளும் எவ்வாறு அழகாக விளக்கியுள்ளனர் என்பதை மேலே காண்போம்.

மற்றப் பிரபந்தங்கள் அரிய கடிய தத்வார்த்தங்களைச் சொல்லி ஈஶ்வரனைப் பாட, திருப்பல்லாண்டு ஈஶ்வரனின் ரக்ஷை ஒன்றிலேயே நோக்குள்ள வாத்ஸல்ய வாசகமாய் பன்னிரண்டே பாசுரங்களில் எல்லாத் தத்வ ஹித புருஷார்த்தங்களும் விளக்குவதாய் அமைந்தது.

ஈஶ்வரனே உபாயம் எனத்துணிந்த ஸித்தோபாய  நிஷ்டர்களுக்கு மங்களாஶாஸநம்  நித்யானுஷ்டானம் என லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷணத்தில் காட்டுகிறார்.  ஸ்ரீவைஷ்ணவர்களின் திநசர்யை  http://ponnadi.blogspot.in/2012/08/srivaishnava-lakshanam-10.html மற்றும் http://ponnadi.blogspot.in/2012/08/srivaishnava-lakshanam-11.html பக்கங்களில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒருவரின் நன்மைக்காகப் ப்ரார்த்திப்பதே மங்களாஶாஸனமாம். ஆழ்வார்கள் பிறரைவிடப் பெரியாழ்வாருக்கு ஈஶ்வரன்பால் அன்பு மிகுதியால் அவனுக்காக அவர் நன்மைவேண்டிப் ப்ரார்த்திக்கிறார். இந்த விஷயத்தை பெரியாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவம் கட்டுரையின் (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-periyazhwar.html) தொடக்கத்தில் காணலாம். ஸ்ரீவசனபூஷணம் சூர்ணிகை 255ல் லோகாசார்யர், பெரியாழ்வார் பாஷ்யகாரர் இருவரின் பெருமையும் பேசுகிறார்.

அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர்களுடையவும், சொல்லுகிறவர்களுடையவும் தனிமையைத் தவிர்க்கையன்றிக்கே ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைக்காகவாயிற்று பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது.

ஆழ்வார்/ஆசார்யர்கள் பிறரைப் போலன்றி பெரியாழ்வாரும் பாஷ்யகாரரும் ஜீவர்களை எம்பெருமானின் தனிமையைத் தவிர்க்கவும், சேதனர் அனைவருமே எம்பெருமானின் உடைமைகளாதலால் மங்களாஶாஸனத்தில்  ஈடுபடுத்தினார்கள். இதில்  உண்மை நோக்கம் உபதேசிப்பவரின் தனிமையைப் போக்கவோ கேட்பவரின் தனிமையைப் போக்கவோ அன்று – எம்பெருமானின் தனிமையைத் தவிர்க்கவும்  ஜீவாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை உணர்த்துவதுமே ஆகும்.

மாமுனிகள் இந்த ஸூத்ரத்துக்கு வ்யாக்யானமிட்டருளுகையில்  ஆழ்வார் எம்பெருமானின் ம்ருதுத் தன்மையை (மார்தவம்) நன்கறிந்தவராகையால் இப்படிப்பட்டவன் தன்னடியார்களைப் பிரிந்திருக்கத் தரியான் என்பதால் அதொன்றிலேயே நோக்குள்ளவராய் இருப்பதைக் காட்டினார். இதில் பிள்ளைலோகாசார்யர், எம்பெருமானார், இராமானுசர் என்னாமல் பாஷ்யகாரர் என்றது வேதாந்த விழுப்பொருளைச் சொன்னவர் ஸ்ரீ பாஷ்யத்தில் எம்பெருமானின் திருவுள்ள உகப்பு எனும் இதையே மேலான வேதாந்த ஸாரமாகக் காட்டினார் என்று நிரூபித்தருளினார்.

மாமுனிகள் உபதேசரத்தினமாலையில் ஐந்து பாசுரங்களில் தொடர்ந்து பெரியாழ்வார் பெருமை பேசுகிறார்.

  • பதினாறாம் பாசுரத்தில் திருப்பல்லாண்டு பாடி நமக்குச் சேமம் விளைவித்த பட்டர்பிரான்(பெரியாழ்வார்) வந்தருளிய ஆனியில் ஸ்வாதியை வாழ்த்தத் தம் நெஞ்சுக்குச் சொல்கிறார்.
  • பதினேழாம் பாட்டில்  பெரியாழ்வார் அவதரித்த திருநாளைப் புகழும் ஞாநியர்க்கு ஒப்பார் எவருமிலர் என்கிறார்.
  • பதினெட்டாம் பாட்டில் ஆழ்வார்கள் பிறரைக்காட்டிலும் எம்பெருமானை மங்களாஶாஸனம் செய்யும் பேரன்பில் விஞ்சியவராதலின் அவரே பெரியாழ்வார் எனப்படுகிறார் என்கிறார்.
  • பத்தொன்பதாம் பாசுரத்தில் திவ்யப்ரபந்தப் பாசுரங்கள் அனைத்தினும் திருப்பல்லாண்டே யாதொரு கோதுமற்றது ஏனெனில் இதில் எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு மங்களாஶாஸனம் தவிர எம்பெருமானை அடைய வழியாக கர்ம ஞான பக்தி போன்ற  வேறு யாதொரு விஷயமும் சொல்லப்படாததால் வேதத்துக்குப் ப்ரணவம் போலே இதுவும் என்கிறார்.
  • இருபதாம் பாசுரத்தில் திருப்பல்லாண்டு போலே ஒரு ப்ரபந்தமுமில்லை, பெரியாழ்வார் போல்வார் ஓர் ஆழ்வாருமிலர் என நெஞ்குக்குச் சொல்கிறார்.

தம் திருமகளாரான ஆண்டாளை எம்பெருமானுக்கு பத்நியாகத் தந்து மாமனாரான தனிப்பெருமை இவர் ஒருவர்க்கே உண்டு.

இதை மனதிற்கொண்டு அவர் சரித்ரம் அனுபவிப்போம்.

வேதம் வல்லார் பலர் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் இவர் அவதரித்தார். ஆனியில் ஸ்வாதியில்  தோன்றியவர்க்குப் பெற்றோர் விஷ்ணுசித்தன் என்று திருநாமமிட்டனர். வேதாத்மா எனப்பட்டு எம்பெருமானை எப்போதும் தம் திருத்தோளில்  தாங்கும் கருடாழ்வர்போலே இவரும் விஷ்ணுபரத்வத்திலேயே ஊன்றி அதையே நிறுவியதால் கருடாம்ஶராகக் கருதப்படுகிறார். ப்ரஹ்லாதாழ்வான் போல் இவரும் கருவிலேயே வடபத்ரஸாயியின் நிர்ஹேதுக க்ருபையடியாக பகவத் பக்தியோடே பிறந்தார். ”ந அகிஞ்சித் குர்வதச் ஶேஷத்வம்” – எம்பெருமானுக்குச் சிறுபணிவிடைகளாகிலும் செய்யாவிடில் ஆத்மாவுக்கு ஶேஷத்வமில்லை என்றபடி. இதை உணர்ந்த ஆழ்வார், தானும் எம்பெருமானுடைய ஆநந்தத்துக்கு கைங்கர்யம் செய்ய விரும்பி, புராண இதிஹாஸங்களில் ஆராய்ந்தார்.

ஸர்வேச்வரனான கண்ணன் மதுராபுரியில் வந்து அவதரித்ததை:

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்

திருப்பாற்கடலில் பைந்நாகணைப்  பள்ளிகொண்டவன் அதைவிட்டு நீங்கி மதுரையில் கண்ணனாக வந்து அவதரித்தான்.  நம்மாழ்வாரும், “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என பூமிப் பிராட்டியின் துயர் துடைக்கவே க்ருஷ்ணாவதாரம் என்றார். தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணவும், ஸாது  ஸம்ரக்ஷணம் செய்யவும், துஷ்ட நிக்ரஹம் பண்ணவும் எம்பெருமான் த்வாரகையில் வீற்றிருந்தான் என்பதை மஹாபாரதத்திலிருந்து அறியலாம். இவ்வெம்பெருமான் அழகிற்சிறந்த தேவகி மகனாய்ப் பிறந்து, அழகியான யஶோதையின் மகனாய் வளர்ந்து, நித்யஸூரிகள் சூட்டும் மாலைகள் கிடக்க, மாலாகாரரிடம் தானே வந்து விரும்பி மாலை கேட்டுவாங்கி அணிந்து கொண்டதால் புஷ்ப கைங்கர்யம் அவன் உகக்குமது எனத்தேறி வடபத்ரஸாயிக்கு இவர் நந்தவனம் அமைத்து மாலைகள் சமர்ப்பித்து வந்தார்.

அப்போது  மேருசிகரத்தில் மீன் கொடி பதித்த பாண்டிய குலத்து ஸ்ரீவல்லப தேவன் எனும் அரசன்  பாண்டிய நாட்டைச் சிறப்பாக ஆண்டு வந்தான். ஓர் இரவு அவன் அரச கடமையில் மாறுவேடமிட்டு நகரசோதனை வர, ஒரு வீட்டு முன்பாக ஓர் அந்தணனைக் கண்டு யார் என வினவ, அவ்வந்தணன் தான் கங்காஸ்நானம் செய்து வந்திருப்பதாகக் கூற, அரசன் அவனிடம் ஒரு ஶ்லோகம் சொல்லுமாறு வேண்டினன். இந்த ஶ்லோகத்தைக் கூறினான்:

வர்ஷார்தமஷ்டௌ ப்ரயதேத மாஸாந் நிசார்த்தமர்த்தம் திவஸம் யதேத
வார்த்தக்யஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோரிஹ ஜந்மநா ச

மக்கள் எட்டுமாதங்கள் கடுமையாக உழைத்து மழை வரும் நாலு மாதங்கள் நிம்மதியாய் உள்ளனர். இரவில் மகிழ்ச்சியாய் இருக்கப் பகலில் உழைக்கின்றனர். முதுமையில் வசதியாய் இருக்க இளமையில் பொருளீட்ட உழைக்கின்றனர் அதேபோல் இறந்த பின்னும் நல்வாழ்வு வாழ உழைக்கவேண்டும் எனும் பொருள்பட ஶ்லோகம் சொல்லினன்.

இதுகேட்ட மன்னவன், சிந்தையில் ஆழ்ந்து தன் குருவை அணுகி யார் பரம்பொருள், இறந்தபின் அவனை எப்படி அடைவது என வினவினான். குருவான செல்வநம்பி சிறந்த ஸ்ரீவைஷ்ணவராதலால், “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம் வேதாச்ச” (வேதம் வல்லார்களின் அனுஷ்டானம் ப்ரமாணம்; வேதமும் ப்ரமாணம்) என்கிறபடி வித்வத்  ஸபை கூட்டி வேதாந்த விசாரம் செய்து இதை அறியலாம் என்று கூறி அரண்மனையில் வேதம் வல்லார்களின் ஸபைக்கு ஏற்பாடு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரஸாயி எம்பெருமான்,வேதாந்தத்தின்படி தன்  பரத்வம் காட்டி,விஷ்ணுசித்தர் மூலம்  ஸம்ஸாரிகளை உத்தரிப்பிக்க எண்ணி, அவர் கனவில் தோன்றி வித்வத் ஸபையில் சென்று பேசிப் பரிசை வெல்ல ஆணையிட்டனன். ஆழ்வார் பணிவுடன் தமக்கு வேதாந்தம் தெரியாததால் தாம் வித்வத் ஸபை செல்ல இயலாதென்ன, எம்பெருமான் “நீர் போம், வேதாந்தம் உமது வாக்கில் வரும்” என்றானாக, விழித்தெழுந்த விஷ்ணுசித்தர் ப்ராஹ்ம முஹுர்த்தத்தில் வந்த கனவு பலிக்கும் என்பதால் “ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய” என்கிறபடி அதிகாலையில் எழுந்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து, மதுரையில் அரசன் அரண்மனை சென்றார்.

ப்ராஹ்மணோத்தமரான ஆழ்வாரை அரசனும் செல்வநம்பியும் தக்க மரியாதைகளோடு வரவேற்றனர். உள்ளூர் அறிஞர்கள் சிலர் இவர் முறைப்படி கற்றவர் அல்லர் என்றனர். செல்வநம்பியும் அரசனும் உண்மை அறிந்தோராதலின் அதைப் பொருட்படுத்தாது,  அவரது கைங்கர்ய மேன்மை, வடபத்ரஸாயியின் பால் ஆழ்ந்த பக்தி, வினயம் முதலான குணாதிஶயங்களை நினைத்து மிக்க மரியாதையோடு பரதத்வ நிரூபணம் செய்யப் ப்ரார்த்தித்தனர்.  அவ்வளவிலே பிரம்மன் காட்டியவளவிலே வால்மீகி மஹரிஷிக்கு எல்லாப் பொருளும் விளங்கினாப்போலே எம்பெருமான் திருவருளால் ஶ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் யாவும் பெருக்கெடுத்து  வேத வேதாந்தக் கருத்துகளை மேற்கோளாக உதாஹரித்து விஷ்ணுசித்தர் பரத்வ  நிர்ணயம் பண்ணப் புக்கு, எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள், அவனை ஶரணாகதி செய்தலே உஜ்ஜீவனத்துக்கு வழி எனக் காட்டினார்.

ஆழ்வார் செய்த பரத்வ நிரூபணத்தை, மேல் வரும் ப்ராமாணங்களில் காணலாம்:

ஸமஸ்த ஶப்த மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபாவத:
ஸமஸ்த வாச்ய மூலத்வாத் ப்ரஹ்மணோபி ஸ்வபாவத:
வாச்யவாசக ஸம்பந்தஸ் தயோர் அர்த்தாத் ப்ரதீயதே

எல்லாச் சொற்களும் அகாரத்திலே தோன்றுகின்றன, எல்லாப் பொருள்களும் எம்பெருமானிடத்திருந்து தோன்றி அவனிடமே லயமாகின்றன, கீதாசார்யன் “அக்ஷராணாம் அகாரோஸ்மி” என்றான். “அகாரோ விஷ்ணு வாசக:” என்கிறது சாஸ்திரம்.

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி, தத் விஜிஜ்ஞாஸஸ்வ, தத் ப்ரஹ்மேதி என்கிற  தைத்திரிய உபநிஷத் ப்ரமாணமும் ஸ்ரீமன் நாராயணனே கல ஸ்ருஷ்டி ஸ்திதி யிலும் உள்ளான்,  ஆக அவன் ஜகத் காரணன், ஜகத் காரணனே பரம்பொருள், உபாஸிக்கத் தக்கவன்  என்று விளக்கினார். மோக்ஷத்தை அளிக்க வல்லவனே முமுக்ஷுவால் உபாஸிக்கத் தக்கவன் என்பது முக்கியப் ப்ரமாணம்.

“விஷ்ணோஸ் ஸகாசாதுத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் ஸ்திதி ஸம்யமகர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:” என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகமும்  எம்பெருமானே  ஜகத் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரலய கர்த்தா என்றும்  எல்லாப் பொருள்களிலும் அவனே உளன் என்று காட்டினார்.

நாராயணாத்பரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதத் ரஹஸ்யம் வேதாநாம் புராணாநாம் ச ஸம்மதம்

என்று  நாராயணனே பர தேவதையாக உள்ளான், வேறு எவரும் இலர், இரார் என்று வராஹ புராண ஶ்லோகத்தைக் கொண்டு அறுதியிட்டார்.

ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்

என்று நாரத புராணம் சொல்வதையும் காட்டி, மும்முறை ஸத்யப்ரமாணம் செய்து எம்பெருமான் பரத்வம் மட்டுமே கூறப்பட்டது என உறுதிப்படுத்தினார்.

இவ்வளவில் அரசன் வைத்த பொற்கிழி அறுந்து விஷ்ணுசித்தரிடம் தானே வீழ்ந்தது. இது கண்ட அந்த வித்வான்கள்  சத்ர சாமரங்களோடு அவரைக் கொண்டாடினர். எங்கும் விஜயகோஷம் எழுந்தது.

வித்வான்கள், அரசன் மற்றும் அனைவரும் மிக மகிழ்ந்து ஆழ்வாரை வணங்கினர். வேதாந்த விழுப்பொருளைத் தெளிவாக எடுத்துரைத்ததால் பெரியாழ்வாரை மிகவும் கொண்டாடி, அவரை ஆனை மேலேற்றி, சத்ர சாமரங்களுடனும் வாத்யங்களுடனும், நகர்வலம் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். வித்வான்கள் “வேதாந்த விழுப்பொருளை உணர்த்தியவர் வருகிறார்” என்று கோஷமிட்டனர். பட்டர்களான வேதாந்திகளுக்கு பேருபகாரம் செய்ததால் அரசன் ஆழ்வாருக்கு பட்டர்பிரான் என்ற பிருதத்தைச் சாற்றினார்.

pallandu

தன் மகன் பெரும் சிறப்பைத் தந்தை பெருமிதத்தோடு காணுமாபோலே, எம்பெருமான் பட்டர்பிரானின் வெற்றியைக் காணத் தம் நாச்சிமாரோடு பரமபதத்தில் இருந்து புள்ளூர்ந்து தோன்றினான். சக்கரமும் ஶங்கமும் ஏந்தி எம்பெருமான் தேஜோமயமாய் அழகு பொழிய வரவும், ஐயோ இந்த அழகுக்கு என்ன ஆபத்து வருமோ என்றஞ்சி, அரச மரியாதையோடு ஆனை மீதிருந்த விஷ்ணுசித்தர், ஆனையின் மணிகளையே தாளமாகக்கொண்டு எம்பெருமானுக்கு மங்களாஶாஸனமாகத் திருப்பல்லாண்டு பாடி, அவன் அழகுக்கு ரக்ஷை சமர்ப்பித்தார்.

எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தபோதே  அர்த்த பஞ்சகமும், மனிதரின் நிலைகளும் அவற்றுக்கேற்ப அவர்தம் லக்ஷ்யங்களும், கைங்கர்யப்ரார்த்தனையே குறிக்கோளாகக் கொண்டோர்க்கு பரமபதத்துள்ளும் எம்பெருமான் கைங்கர்யமும் மங்களாஶாஸனமுமே நிரந்தரமாகும் என்றும் காட்டியருளினார்.

பிரம்ம ருத்ரர்கள் தேவைகள் திரள் நடுவே எம்பெருமான் கருடாரூடனாக பிரகாசித்தான், ஸர்வ ஆபரணமும், திவ்யாயுதங்களும் தாங்கிப் பிராட்டிமாரோடு அவனைக் கண்டுகளித்தவர் மங்களாஶாஸனம் செய்தார்.

ஐஶ்வர்யார்த்தி, கைவல்யார்த்தி, பகவச் சரணார்த்தி என மூவகைப்பட்ட ஸமஸ்த சேதனர்களையும் அன்போடு அழைத்து எல்லாரும் எம்பெருமான் திவ்ய ரூப குண விபவ ஐஶ்வர்ய லீலாதிகளை அனுபவியுங்கோள் அவற்றுக்குக் கேடு வாராமல் அவன் மார்தவம் நோக்கி மங்களாஶாஸனம் செய்யுங்கோள் அதுவே ஸ்வரூபம் என தமக்குப் பரமபதமும் வேண்டாது அவன் வாழ்ச்சியைத் தாய்போல் விரும்பிப் பாடினார். எனவே பொங்கும் பரிவாலே பெரியாழ்வார் எனும் பெயர் பெற்றார்.

ஆழ்வார் அரசனை ஆசீர்வதிக்க அரசனும் ஆழ்வாரை மிகவும் கௌரவித்தான். அங்கிருந்து விடை பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பினார்.

த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸஸ் ததா ஸூத:
யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம்

என்ற மனு ஸ்ம்ருதி வாக்கின்படி ஆழ்வார் “எப்பொருளும் எவன் சம்பாதித்தாலும் பிரானுக்கே உரித்தாமாபோல்“, தாம் பெற்ற பொற்கிழியை வடபத்ரஸாயிக்கே சமர்ப்பித்து  அவர் பழையபடியே வடபெரும்கோயில் உடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யலானார்.

ஆழ்வார் மாலாகாரர் போல் பூமாலை சமர்ப்பித்தார். யஶோதைப் பிராட்டிபோலே எம்பெருமானுக்குத் தாயாகவும் இருந்தார்.  இக்காதல் பெருக்கில் அவர் கண்ணன் எம்பெருமானைப் பலவாறாக அனுபவித்துப் பாடியவை பெரியாழ்வார் திருமொழி என ப்ரஸித்தி பெற்று விளங்குகின்றன

எம்பெருமானான ஶ்ரிய:பதியை எப்பொழுதும் மனத்தில் கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களையும், அபிமானிகளையும் எப்பொழுதும் உஜ்ஜீவித்து வாழ்ந்து வந்தார்.

உலகம் நிறைந்த புகழாளரான இவர் சரித்திரம் ஸ்ரீ ஆண்டாள் சரித்திரத்தொடும் பிணைந்துள்ளது.

பெரியாழ்வார் தனியன்:

குருமுகம் அநதீத்ய ப்ராஹவே தாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம:
ஸ்வஸுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

பெரியாழ்வார் வாழி திருநாமம்:

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

பெரியாழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-periyazhwar.html.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/01/20/periyazhwar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

6 thoughts on “பெரியாழ்வார்”

  1. ஸ்ரீ:
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ஸ்ரீமத் வரவர முநயே நம:
    திருப்பல்லாண்டில் சுவாமி பெரியாழ்வார் ‘கூறுவனே’ ,’கூறுமினே ‘,’கூறுதுமே
    என்பதன் தாத்பர்யம் ?

Comments are closed.