கோயில் கந்தாடை அண்ணன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம:

koilannanகோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை

திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர்

அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு

உயர்ந்ததான யதிராஜ பாதுகை என்று அழைக்கப்பட்ட முதலியாண்டான் திருவம்சத்தில், தேவராஜ தோழப்பர் என்பாருடைய திருமகனாராக அவதரித்தார். இவருடைய திரு அண்ணனார் கோயில் கந்தாடை அண்ணன் என்பார். இவருக்கு பெற்றோர் சாற்றிய பெயர் “வரதநாராயணன்”. இந்த ஸ்வாமியே பிற்காலத்தில் மணவாள மாமுனிகளுடைய ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரும், அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாக விளங்கும்படித் திகழ்ந்தார்.

கோயில் அண்ணன் (ப்ராபல்யமாக விளங்கும் திருநாமம்) தன் சிஷ்யர்களோடு ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மாமுனிகளின் க்ருஹஸ்தாஸ்ரமம்) ஸ்ரீரங்கம் வந்து வந்தடைந்தார். அவரை ஸ்ரீரங்கநாதனும், கைங்கர்யாபரர்களும் விமர்சையாக வரவேற்றனர். சில காலம் கழிந்து நாயனார் சந்யாஸ்ரமம் ஏற்றார். அவருக்கு ஸ்ரீரங்கநாதன் அழகிய மணவாள மாமுனிகள் என்று திருநாமம் சாற்றினார் (தன்னுடைய விசேஷ திருநாமமான அழகிய மணவாளன் என்னும் திருநாமத்தையே சாத்தி அருளுதல்). எம்பெருமான் மணவாளமாமுனிகளை பல்லவராயன் மடத்தை (ராமாநுஜர் தங்கியிருந்த ப்ராசீனமான மடம்) ஏற்கச்செய்து ராமாநுஜரைப்போலே பரமபதம் அடையும் வரை அங்கேயே ஸ்ரீரங்கத்தில் தங்கப் பணித்தார். மாமுனிகள் போன்னடிக்கால் ஜீயர் முதற்கொண்டு தன் சிஷ்யர்களை மடத்தைப் புதுப்பிக்கும் படி ஆணையிட்டு, மண்டபத்தை தன் நித்ய காலக்ஷேபதிற்காக உபயோகித்தார். மடத்தைப் புதுப்பிக்கும் போது பிள்ளைலோகாசார்யரின் திருமாளிகயிலிருந்து ஸ்ரீ பாததூளி (பிள்ளைலோகாசார்யர் திருப்பாதம் பட்ட மண்) சேகரித்து அதனைக்கொண்டு கட்டினார் (பிள்ளைலோகாசார்யர் சம்ப்ரதாயதிற்கான அஷ்டாதச ரஹச்யங்களை அருளிச்செய்தார்). ஸ்ரீரங்கத்தில் படையெடுப்பின்போது பாதிக்கப்பட்டிருந்த சத்சம்ப்ரதாயத்தையும், திருவோலக்கங்கங்களயும், ஸ்ரீகோசங்களயும் மீண்டும் நிர்மாணம் செய்வதற்காகவே தன் திருநக்ஷத்ரங்கள் (வாழ்நாள்) முழுவதையும் சமர்ப்பித்தார். இந்த காருண்யத்தைக் கேள்வியுற்ற மக்கள் பலரும் அவரை அடைந்து சிஷ்யர்களாயினர்.

திருமஞ்சனம் அப்பா என்பாருடைய திருமகளார் ஆய்ச்சியார் ஒருமுறை மாமுனிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆய்ச்சியார் மாமுனிகளிடம் பக்தி மிகுந்தமையால் தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மாமுனிகள் முதலில் மறுத்து பின்னர் ஆய்ச்சியாருடைய பக்தியைக்கண்டு சிஷ்யையாக ஏற்றார். இந்த விஷயத்தை தன் பர்த்தா (கணவன்) கந்தாடை சிற்றண்ணர் முதற்கொண்டு யாரிடமும் ஆய்ச்சியார் தெரிவிக்கவில்லை. அப்போது கோயில் அண்ணனுடைய திருத்தகப்பனாருக்கு ச்ரார்த்தம் நடக்கையில் ஆய்ச்சியார் தளிகை செய்யும் கைங்கர்யமேற்று மிக பக்தி ச்ரத்தையுடன் செய்து முடிக்கிறார். ச்ரார்த்தம் முடிந்தவுடன் அனைவரும் மடத்தின் வாயிலருகே சயனிக்கலாயினர்.

அந்த சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பெரிய ஜீயர் மடத்தை விட்டு வெளியில் வருவதைக் கோயில் அண்ணன் கண்டார். உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவரை அங்கு எழுந்தருளியதன் காரணத்தை வினவினார். அதற்க்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் தன் திருநாமம் சிங்கரைய்யர் என்றும் தான் வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்திலிருந்து வருவதாகவும், பெரிய ஜீயரிடதில் சிஷ்யராக விருப்பம் என்றும் ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார். அண்ணன் அதற்கு ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கிறார்கள், தேவரீர் அவர்களில் யாருக்கும் சிஷ்யராகலாம் என்று தெரிவித்தார். அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் , தாம் மாமுனிகளிடம் சிஷ்யராகவேண்டும் என்பது பகவானின் திருவுள்ளம் என்று சாதித்தார். அண்ணன் ப்ரமித்துப்போய் மேற்கொண்டு விஷயத்தை அறிய வினவினார். ஆனால் அந்த ஸ்ரீவைஷ்ணவர் விஷயம் மிகவும் ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டு கூற இயலாதென்றும் கூறினார். அண்ணன் சிங்கரைய்யரை உள்ளே அழைத்து பிரசாதமும் தாம்பூலமும் அளித்து அன்றிரவு அங்கேயே சயனிக்கும்படி செய்தார். இரவுப்போதில் அண்ணன் மற்றும் அவரது திருத்தம்பியார் வெளியே உறங்க, உள்ளே இருந்த ஆய்ச்சியார் சயனிக்க முற்பட்டு , “ஜீயர் திருவடிகளே சரணம், பிள்ளை திருவடிகளே சரணம், வாழி உலகாசிரியன்” என்று சாதித்தார். அதை அண்ணனும், திருத்தம்பியாரும் கேட்டு ஒருவர் உள்ளே செல்ல முற்பட, அண்ணன் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று தடுத்தார்.

அண்ணன் மாமுனிகள் மீது பயபக்தி மிகுந்து அன்றிரவு உறக்கம் வரவில்லை. ஆகவே இரவுப் போதானாலும் சிங்கரைய்யரை மீண்டும் சந்தித்து வினவினார். சிங்கரைய்யர் ஒரு பெரிய சம்பவத்தை விண்ணப்பித்தார். “அடியேன் வழக்கமாக காய்கறிகள் முதலியவைகளை அடியேன் கிராமத்திலிருந்து சேகரித்தது ஸ்ரீரங்கத்திலுள்ள மடங்களுக்கும் திருமாளிகைகளுக்கும் வழங்கி வருகிறேன். ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அடியேனை பெரிய ஜீயர் மடத்திற்கு வழங்கும் படி சொன்னார். அதனை சிரமேற்கொண்டு பெரிய ஜீயர் மடத்திற்கு காய்கறிகளோடு சென்றேன். ஜீயர் அடியேனை பல கேள்விகள் கேட்டார் – “எங்கே இந்த காய்கறிகள் விளைகின்றன? யார் இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்? “எனப் பல கேள்விகள் கேட்டார். “இவைகள் சுத்தமான பகுதியிலிருந்து விளைகின்றன, இவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தங்கள் சிஷ்யர்கள் தான்” என்று பவ்யமாக சாதித்தேன். பெரிய ஜீயர் அகமகிழ்ந்து காய்கறிகளை ஏற்றார். மேலும் மாமுனிகள் அடியேனை ஊர் திரும்பு முன் பெரியபெருமாளை சேவித்துச்செல்லச் சொன்னார். அர்ச்சகர் என்னை இந்த முறை யாருக்கு வினியோகித்தீர் என வினவினார். அடியேன் இந்த முறை பெரியஜீயர் மடத்திற்கு சமர்பித்ததைச் சொன்னேன். அர்ச்சகர் இதைக்கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போய் இனி உமக்கு ஆசார்ய ஸம்பந்தம் கிட்டிவிடும் என சாதித்தார். அடியேனுக்கு தீர்த்தம் (சரணாம்ருதம்), ஸ்ரீசடகோபம், மாலை, அபயஹஸ்தம் முதலியன சாதித்தார். அதனால் அடியேன் எம்பெருமான் அருளுக்கு மிகவும் பாத்திரமானேன். அடியேன் மீண்டும் ஜீயரிடம் சென்று தங்கள் கிருபையால் பெரியபெருமாள் அனுக்ரஹத்திற்கு பாத்திரமானேன் என்று சொல்லி ஊர் திரும்ப நியமனம் பெற்றேன். மடத்திலிருந்த கைங்கர்யபரர்கள் அடியேனுக்கு பிரசாதம் அழித்து வழியனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அடியேன் பிரசாதத்தை ஸ்வீகரித்தேன். அதனால் அடியேன் ஆத்மா சுத்தி அடைத்தது”. அன்றிரவு ச்வப்னம் ஒன்று கண்டேன். அடியேன் பெரியபெருமாள் சந்நிதியில் இருந்தேன். பெரிய பெருமாள் ஆதிசேஷனை நோக்கிக் காட்டினார் “அழகிய மணவாள ஜீயர் ஆதிசேஷனுக்குச் சமம். நீர் அவருடைய சிஷ்யனாகக் கடவது”. அந்த நேரம் முதல் மாமுனிகளுடய சிஷ்யனாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” – என்று முடித்தார் சிங்கரைய்யர். இதைக்கேட்ட அண்ணன் ஆழ்ந்து சிந்தித்து சயநித்தார்.

அண்ணன் கண்மலர்ந்து ஒரு ச்வப்னம்  கண்டார். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மச்சில் (மாடி) படிகளிலிருந்து இறங்கிவந்து சவுக்கினால் அண்ணனை அடிக்கத் தொடங்கினார். அண்ணனால் அதைத் தடுக்க முடியும் ஆயினும் தான் ஏதோ தவறு செய்ததாக எண்ணித் தடுக்கவில்லை. பிறகு அந்த சவுக்கு உடைந்து விடுகிறது. அந்த ஸ்ரீவைஷ்ணவர் படிகளின் வழியாக அண்ணனை ஒரு சன்யாசியிடம் அழைத்துச் செல்கிறார். அந்த சன்யாசி மிகவும் கோபமாகக் காணப் படுகிறார். மேலும் அவரும் ஒரு சவுக்கைக் கொண்டு அண்ணனை அடிக்கிறார். சவுக்கு உடைந்து விழுகிறது. உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவர் சன்யாசியை நோக்கி “இவர் ஒரு சிறு பிள்ளை. தான் செய்வதறியாது செய்துவிட்டார்” என்று தெரிவிக்கிறார். சன்னியாசியும் சாந்தமடைந்து அண்ணனைத் தன் திருமடியின் மீது அமரச் செய்து “நீயும் உத்தம நம்பியும் தவறு செய்திருக்கிறீர்கள்” என்று சாதித்தார். “மணவாள மாமுனிகளின் பெருமை அறியாது, குழப்பமடைந்து தவறிழைத்து விட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று அண்ணன் தன் கலக்கத்தை தெரிவித்தார். அன்போடு அந்த சன்யாசி “நான் பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமாநுஜர்), இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான். நான் ஆதிசேஷன். இங்கு மாமுனிகளாக அவதாரம் செய்திருக்கிறேன். நீரும் உமது சொந்தங்களும் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்று சொன்னார். உடனே அண்ணனுக்கு ச்வப்னம் கலைந்து திடுக்கிட்டு விழிக்கிறார். மிகுந்த பூரிப்புடன் தன் சகோதரர்களிடம் இதைத் தெரிவிக்கிறார். உறங்கிக் கொண்டிருந்த ஆய்ச்சியாரை எழுப்பி ச்வப்னத்தில் கண்டதைச் சொல்கிறார். ஆய்ச்சியாரும் மாமுனிகள் தன்னை உய்வித்ததாகவும், ஆசீர்வதித்ததாகவும் அருளினார். அண்ணன் அதைக்கேட்டு மிகவும் அகமகிழ்ந்தார். உடனே சிங்கரையரிடமும் சென்று ச்வப்னம் பற்றிக் கூறினார். பிறகு காவிரிக்குச் சென்று தன் நித்ய அனுஷ்டானங்களைச் செய்கிறார்.

அடுத்து அண்ணன் தன திருமாளிகை அடைந்து, உத்தம நம்பி மற்றும் கந்தாடை திருமேனி சம்பந்திகளை அழைக்கிறார். பலர் அண்ணன் திருமாளிகையை அடைந்து இதே போல் தங்களுக்கும் அதே ச்வப்னம் வந்ததைச் சொல்லி ஆச்சர்யமடைந்தனர். எல்லோரும் எம்பா (ஆசார்யர் லக்ஷ்மணாசார் என்பாருடைய திருப்பேரனார்) என்னும் ஆசார்ய ச்ரேஷ்டரை அடைந்து விவரத்தை சொல்ல, எம்பா மிகவும் சீற்றமுற்றார். இன்னொரு ஜீயரிடம் தஞ்சம்புகுதல் நம் குடும்பத்திற்கு எந்த நன்மையும் செய்யது என்றார். இதையே அங்கு பலரும் வழிமொழிந்தனர்.

கந்தாடை திருமேனி சம்பந்திகளோடே அண்ணனும் ஜீயர் மடத்தை அடைந்து ஜீயரோடே தஞ்சம் புகுந்தனர். அண்ணன் தன்னுடைய சிஷ்யரான திருவாழியண்ணன் மற்றும் மாமுனிகளுடைய நெருங்கிய சிஷ்யரான சுத்த சத்வம் அண்ணனையும் மாமுனிகளை அடைய உடன் கூட்டிச்சென்றார். சுத்த சத்வம் அண்ணன் சதா மாமுனிகளுடய வைபவங்களை அண்ணனுக்கு சொல்லி வந்தார். ஆகவே அதுவே அண்ணனுக்கு சுத்த சத்வம் அண்ணாவின் உதவியை நாடக் காரணமாய் அமைந்தது. கோயில் அண்ணன் அடுத்து தன் திருமேனி சம்பந்திகளோடே மாமுனிகள் மடத்தை அடைந்தனர். அந்த சமயம் மாமுனிகள் திருமலை ஆழ்வார் மண்டபத்தில் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார். அண்ணன் குறுக்கிட விரும்பாமல், ஆய்ச்சியாரிடம் விஷயத்தைத் தெரிவிக்க, ஆய்ச்சியார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி மாமுனிகளிடம் சென்று விஷயத்தை தெரிவிக்கச் சொன்னார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு மாமுனிகளிடம் தவறான செய்தியைச் சொன்னார் (அதாவது மாமுனிகளிடம் வாக்குவாதம் செய்வதற்காக வந்துள்ளனர் என்று சொல்லி விட்டார்). மாமுனிகள் குழப்பத்தைத் தவிர்க்க மடத்தின் புழைக்கடைக்கு சென்றார். இந்த சமயம் அண்ணனும், திருமேனி சம்பந்திகளும் வானமாமலை ஜீயரை அடைந்து தண்டன் சமர்ப்பித்தனர். ஆய்ச்சியார் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தேடி விஷயத்தை வினவி பிறகு உண்மையான விஷயத்தை மாமுனிகளிடம் தெரிவித்தார். மாமுனிகள் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் திருத்திப் பணிகொண்டு, அண்ணனையும் அவர் திருமேனி சம்பந்திகளையும் வெகுவாக வரவேற்றார். கோயில் அண்ணனும் திருமேனி சம்பந்திகளும் ஜீயருடைய பாத கமலங்களில் விழுந்து வணங்கி பழங்கள், பூ முதலியவைகளை சமர்ப்பித்தனர். மாமுனிகள் “திருப்பல்லாண்டு” மற்றும் நம்மாழ்வாருடைய “பொலிக! பொலிக! பொலிக!” என்னும் திருவாய்மொழிப் பதிகத்துக்கும் சுருங்க விவரணம் அளித்தார். அண்ணன் பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக தம்மையும் தம் குடும்பத்தினரையும் ஆச்ரயித்து ஜீயரின் சிஷ்யராக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மாமுனிகள் தனித்ததோர் ஒரு இடத்திற்கு சென்று அண்ணனை பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக அழைத்தார். மாமுனிகள் அண்ணனிடம் “நீர் ஏற்கனவே வாதூல குலத்தில் பிறந்திருக்கிறீர் (முதலியாண்டான் திருவம்சத்தார்). இதுவே பெரிய திருவம்சமும், திருமாளிகையும் ஆகும். இப்படியிருக்க ஏன் தம்மிடம் தஞ்சம் புக விரும்புகிறீர்?” என வினவினார். அண்ணன் மிகவும் வற்புறுத்தி, இதற்கு முன்னால் ஜீயருடைய வைபவம் அறியாது தவறிழைத்தமைக்கு வருந்தி, தன ச்வப்ன விஷயங்களையும் தெரிவித்தார். மாமுனிகள் அதனை ஏற்று ஒருசிலரே எம்பெருமான் கிருபையால் ச்வப்னத்தில் கண்டருளி ஆணையிடுவான் என்று சொல்லி, மூன்று நாட்களுக்குப் பின்னே ஸமாச்ரயணம் பெற வரச் சொன்னார். அண்ணன் அகமகிழ்ந்து ஏற்று குடும்பத்தோடு மடத்தை விட்டுக் கிளம்பினார்.

எம்பெருமான் பலர் ச்வப்னத்திலும் தன் அர்ச்சா சமாதியை (தன்னுடைய சங்கல்பமான அர்ச்சா திருமேனியில் யாரோடும் தொடர்பு கொள்வதில்லை என்பதை மீறி) விடுத்துத் தோன்றி, மாமுனிகளுக்கும் எனக்கும் வேறுபாடில்லை, எல்லோரும் உய்வு பெற அவருடைய திருப்பாத கமலங்களில் தஞ்சம் புகுவீர் என்று உரைத்தான்.

mamuni-koilannan-3மாமுனிகளும் கோயில் அண்ணனும் – அண்ணன் திருமாளிகை, ஸ்ரீரங்கம்

மூன்று நாட்களுக்குப் பிறகு எல்லோரும் பெரிய ஜீயர் மடத்தில் ஒன்று கூடினர். தன் குலப்பெருமைகளை நினைத்து செருக்குக் கொள்ளாமல் மாமுனிகளிடம் தஞ்சம் புக நினைத்த அண்ணன் மாமுனிகளை நெருங்கி, தனக்கும் உடனுள்ள மற்றையெல்லோருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து அருளுமாறு பிரார்த்தித்தார். மாமுனிகள் வானமாமலை (பொன்னடிக்கால்) ஜீயரிடம் ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ஆணையிட்டு, பஞ்ச ஸம்ஸ்காரம் (தாபம் – தோள்களில் திருச்சங்கு/திருச்சக்கரம் பொரித்தல், புண்டரம் – ஊர்த்வ புண்டரம், நாம – தாஸ நாமம் தரித்தல், மந்த்ரம் – ரஹஸ்ய த்ரய மந்த்ரங்கள், யாகம் – திருவாரதன க்ரமம்) செய்துவித்தார்.

உடனே மாமுனிகளுக்குப் பொன்னடிக்கால் ஜீயர் நினைவு தோன்றி, அந்த பெரிய சபை முன்பே பொன்னடிக்கால் ஜீயரைக் காட்டி “பொன்னடிக்கால் ஜீயர் அடியேனுடைய பிராண ஸுஹ்ருது மற்றும் நலம் விரும்பி. தமக்கிருக்கும் அத்துணை பெருமைகளும் அவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று அறிவித்தார். அண்ணனுக்கு மாமுனிகளின் உள்ளம் புரிந்து “தாங்கள் எங்களை பொன்னடிக்கால் ஜீயருக்கு சிஷ்யராக்கி இருக்கலாம்” என்று கூறினார். மாமுனிகள் அகமகிழ்ந்து “தான் எப்படி எம்பெருமானின் ஆணையை மீற முடியும்?” என்று கேட்டார். ஆய்ச்சியாருடய திருமகனாரான அப்பாச்சியாரண்ணா உடனே எழுந்து, தன்னை பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யராக ஏற்கச் செய்யுமாறு பிரார்த்தித்தார். மாமுனிகள் மிகவும் அகமகிழ்ந்து அவரை “நம் அப்பாச்சியாரண்ணாவோ?” எனப் புகழ்ந்தார். மாமுனிகள் தன் சிம்மாசனத்தில் வற்புறுத்தலாகப் பொன்னடிக்கால் ஜீயரை எழுந்தருளச் செய்து , சங்க-சக்கரங்களைத் தந்து அப்பாசியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவிக்கச் செய்தார். முதலில் மறுத்த பொன்னடிக்கால் ஜீயர் பிறகு மாமுனிகள் தனக்கு உள்ளம் குளிரும் எனக்கூற ஆணையை ஏற்றார். அப்பாசியாரண்ணாவுடனே அவரது திருச் சகோதரரான தாசரதியும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றார். பொன்னடிக்கால் ஜீயர் சிம்மாசனத்தை விட்டுப் பணிவுடன் எழுந்து, மாமுனிகளுக்கு வெகு மரியாதையுடன் தன் ப்ரணாமங்களைத் தெரிவிக்கிறார். இதற்குப் பிறகு அண்ணனுடைய திருத்தம்பியாரான கந்தாடை அப்பன் என்பாரும், உடனிருந்த பலரும் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றனர். அந்த சமயம், பெரிய பெருமாளின் ப்ரசாதம் வந்து சேருகிறது. மாமுனிகள் பிரசாதத்தை பெருமதிப்புடன் ஸ்வீகரித்தார். பிறகு எல்லோரும் சந்நிதிக்குச் சென்று மங்களாசாசனம் செய்து, மட்டத்திற்குத் திரும்பி, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேஷ ததியாரதனையை ஸ்வீகரிக்கின்றனர்.

ஒரு தினம் மாமுனிகள் சுத்த சத்வம் அண்ணா கோயில் அண்ணனோடு இருக்கும் பற்றுதலைப் புகழ்ந்தார். அதனாலே ஆண்ட பெருமாள் (கொமாண்டூர் இளையவில்லியாச்சானின் வழித்தோன்றலில் இருந்த பேரறிஞர்) என்பாரை அண்ணனுடைய சிஷ்யராகும்படியும், முழுமையாக அண்ணனுடைய சத் சம்ப்ரதாயத்தைப் பரப்பும் கைங்கர்யத்தில் ஈடுபடும்படியும் நியமித்தார்.
கோயில் அண்ணனின் திருமேனி சம்பந்தியான எறும்பி அப்பா அண்ணனின் புருஷகாரத்தில் மாமுனிகளை அடைந்து நெருங்கிய சிஷ்யரானார்.
அண்ணனின் திருக்குமாரரான கந்தாடை நாயன் சிறுவயதிலேயே அறிவில் சிறந்து விளங்கினார். ஒருசமயம் மாமுனிகள் திவ்யப் பிரபந்தத்தில் சில விஷயங்களை விளக்க, நாயன் அதற்கு விசேஷ குறிப்புகளை நல்கினார். இது கண்டு பூரிப்படைந்த மாமுனிகள் கந்தாடை நாயனைத் தன் திருமடியில் அமரச் செய்து, புகழ்ந்து, சம்ப்ரதாயத்திற்குத் தலைவராய் விளங்க ஆசீர்வதித்தார். கந்தாடை நாயன் “பெரிய திருமுடி அடைவு” என்னும் சிறந்த கிரந்தத்தை அருளிச் செய்கிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மாமுனிகளை அடைந்து சிஷ்யராகிறார். அவரும் முதலில் அண்ணனின் திருமாளிகையைத்தான் அடைந்தார், பிறகு இருவருக்கும் இடையே மிகுந்த மரியாதையான தொடர்பு நீடித்தது.

கோயில் அண்ணனை மாமுனிகள் பகவத் விஷயத்தை (நம்மாழ்வாரின் ஸ்ரீசூக்தியான திருவாய்மொழி மற்றும் அதன் வ்யாக்யானங்கள்) கந்தாடை அப்பன், திருக்கோபுரத்து நாயனார் பட்டர், சுத்த சத்வம் அண்ணன், ஆண்ட பெருமாள் நாயனார் மற்றும் அய்யனப்பா ஆகியோருக்கு உபதேசிக்குமாறு பணித்து, அண்ணனுக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றி, அண்ணனை முக்கியமான பகவத் விஷய ஆசார்யனாக நியமிக்கிறார். ஒருமுறை கந்தாடை நாயனும் (அண்ணனின் திருக்குமாரர்) ஜீயர் நாயனாரும் (மாமுனிகளுடைய பூர்வாச்ரமத் திருப்பேரனார்) பகவத் விஷயத்தை விஸ்தரமாக விவாதிப்பதைக் கண்ட மாமுனிகள், இருவரையும் ஸம்ஸ்க்ருதத்தில் ஈடு வ்யாக்யானத்திற்கு அரும்பதம் அருளுமாறு பணித்தார்.

மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதன் முன்னிலையில் பகவத்விஷயத்தை காலக்ஷேபம் செய்ய, மாமுனிகள் முன்பு ஒரு ஆணி-திருமூலத்தன்று ஸ்ரீ ரங்கநாதன் தோன்றி “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற ஆச்சர்ய தனியன் சாதித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்கிறார். உடனே இந்தத் தனியனை எல்லா திவ்ய தேசங்களிலும் நித்யப்படித் தொடக்கமாகவும் சாற்றுமுறையின்போதும் சேவிக்கக் கடவது என்று எம்பெருமானே சாதிக்கிறான். அதே சமயம் அண்ணன் திருமாளிகையில் அண்ணனின் தேவியாரும் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களும் மாமுனிகளின் வைபவத்தை பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு சிறு குழந்தை அங்கு தோன்றி சிறியதான அதே தனியன் குறிக்கப்பட்ட திருவோலையைச் சமர்ப்பித்து மறைந்து போகிறது.

ஒருமுறை மாமுனிகள் அண்ணனிடம் திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாசனம் செய்யும் விருப்பமா என்று கேட்டார். அச்சமயம் அப்பிள்ளை அண்ணனை “காவேரி கடவாத கந்தாடை அண்ணனாரோ” என்று பெருமிதமாய் புகழ்ந்தார். ஆனால் மாமுனிகள் ஸ்ரீரங்கநாதன் திருவேங்கடத்தில் நித்யசூரிகள் சந்திசெய்ய நின்றிருப்பதை சுட்டிக்காட்டினார். அண்ணன் அகமகிழ்ந்து மாமுனிகளிடம் திருவேங்கட யாத்திரைக்கு உத்தரவு பெற்றுக்கொண்டார். மாமுனிகள் அண்ணனை பெரியபெருமாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்று திருவேங்கட யாத்திரைக்கு பெருமானின் அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்று அருளி, உத்தம நம்பியையும் (பெரிய பெருமாளின் அந்தரங்க கைங்கர்ய பரர்) உடன் அனுப்பி அருளினார். அண்ணனுடன் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்ந்து கொண்டனர். அப்போது அண்ணனுக்கு பல்லக்கு அளித்ததை அண்ணன் மறுத்து ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சேர்ந்து வரவே விருப்பம் தெரிவித்தார். இது அண்ணனின் பணிவை விளம்பிற்று. அண்ணன் திருமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் அனந்தாழ்வான் (திருமலை அனந்தாழ்வானின் திருவம்சம்சதில் அப்போதிருந்து திருமலையில் கைங்கர்யம் செய்தவர்), பெரிய கேள்வி ஜீயர், ஆசார்ய புருஷர்கள், மற்றும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆடம்பரமாக வரவேற்றனர்.
அண்ணன் ரதோத்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தார். அண்ணன் ஸ்ரீபதரீகாச்ரமத்தில் கைங்கர்யம் செய்யும் அயோத்யா ராமானுஜ ஐய்யங்காரை தண்டன் சமர்ப்பித்தார். அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார் மாமுனிகளை தஞ்சம்புக எண்ணினார், ஆனால் அனந்தாழ்வான் அண்ணனை ஆச்ரயித்தால் மாமுனிகள் மிகவும் அகமகிழ்வார் எனக் கூறினார். ஐய்யங்கார் மிகுந்த பூரிப்புடன் தன்னை ஆசிர்வதிக்குமாறு அண்ணனை வேண்ட, அவ்வாறே அண்ணன் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார். திருவேங்கடமுடையானும் ஐயங்காரின் அண்ணன் சம்பந்தத்தை ஆமோதித்து “கந்தாடை ராமானுஜ ஐயங்கார்” என்று ஐயங்காருக்கு பட்டம் சாற்றியருளினார். கந்தாடை ராமானுஜ ஐயங்கார் குறிப்படத்தக்க பல கைங்கர்யங்களைச் செய்கிறார்.

அண்ணன் திருவரங்கம் திரும்ப முடிவுசெய்து திருவேங்கடமுடையானின் ஆணையைப் பெற்றார். அப்போது எம்பெருமான் தன்னுடைய வஸ்த்ரத்தை அண்ணனுக்கு அருளினார், அண்ணன் மிகவும் மகிழ்ந்து அதையேற்றார். எம்பெருமான், ஐயங்கார் அண்ணனுக்குப் பல்லக்கு சமர்ப்பித்ததை ஏற்கச்செய்து, அதிலேயே அண்ணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். வரும் வழியில் பல திவ்யதேசத்தில் மங்களாசாசனம் செய்து, எறும்பியப்பாவையும் அவரது மூத்தோரையும் எறும்பி என்னும் இடத்தில் சந்தித்தார். காஞ்சிபுரத்தில் அண்ணன் சாலைக் கிணற்றிலிருந்து (எம்பெருமானார் தேவப்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்ய உபயோகித்த கிணறு) தீர்த்தம் பூரிக்க விரும்பினார். அண்ணன் மகிழ்ச்சியுடன் இந்த கைங்கர்யத்தைச் செய்து, அப்பாசியாரண்ணாவை இந்த கைங்கர்யத்தைத் தொடருமாறு நியமித்தார்.

அண்ணன் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனருகே உள்ள திவ்யதேசங்களுக்கு சென்றுவர உத்தேசமானார். தேவப்பெருமாளின் நியமனதைக் கேட்டறிந்தார். அந்த சமயம் தேவப்பெருமாள் திருவாராதனம் கண்டருளிக் கொண்டிருந்தான். தளிகை (போகம்) சமர்ப்பித்த பிறகு தேவப் பெருமாள் அண்ணனை முன்னேயழைத்து தான் சாற்றியிருந்த வஸ்த்ரம், புஷ்பமாலை, சந்தனம், மற்றும் பூண் (வாசனை த்ரவ்யம்) முதலியவற்றை அண்ணனிடம் தந்தருளி மாமுனிகளிடம் சமர்ப்பிக்குமாறு அருளினான். அண்ணனுக்கு விசேஷமாக வழியனுப்பி வைக்கப்பட்டது. அண்ணன் விடைபெற்று கச்சிக்கு வைத்தான் மண்டபத்தில் எழுந்தருளி மாமுனிகள் வைபவத்தை காலக்ஷேபம் செய்தார். அங்கிருந்த பெரியோர்கள் தேவப் பெருமாள் மாமுனிகளை “அண்ணன் ஜீயர்” (கோயில் அண்ணனின் ஆசார்யன் மாமுனிகள்) என்று பிரமிப்புடன் அருளுவதைக் கூறினர். அதேபோல் பெரிபெருமாளும் “ஜீயர் அண்ணன்” (பெரிய ஜீயரின் சிஷ்யர் கோயில் அண்ணன்) என்று அருளுவதையும் அச்சமயம் மாமுனிகள் காலம் கடந்ததால் ஸ்ரீரங்கம் திரும்புமாறு அண்ணனுக்கு செய்தி அனுப்பினார். அண்ணன் ஆணையை சிரமேற்கொண்டு, ஸ்ரீபெரும்பூதூரையும், மற்ற திவ்யதேசங்களயும் நோக்கி வணங்கி, ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
பெரிய ஜீயர் அண்ணனின் திருமாளிகை வந்து சேர்கிறார், அப்போது திருமாலை தந்த பெருமாள் பட்டர் மற்றும் கோயில் கைங்கர்யபரர்கள் பெரிய பெருமாளின் ப்ரசாதமும் மாலையும் கொண்டு வருகின்றனர். எல்லோரும் அண்ணனை வெகுவாக வரவேற்கின்றனர். மாமுனிகள் அண்ணனை ஆசீர்வதித்தார். அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவப்பெருமாள் அண்ணனை “அண்ணன் ஜீயர்” என்று அருளியதைக் கூறினர். மாமுனிகள் இதனைக்கேட்டு பூரிப்படைந்து தனக்கு அண்ணன் சிஷ்யராக வாய்த்ததை நினைத்து அகமகிழ்ந்தார். ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் “அண்ணன் ஜீயர்’ என்பது “ஸ்ரீய:பத்தி” (எம்பெருமான் பிராட்டி போன்று) சப்தத்திற்கு நிகராய் இருப்பதைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமான் பிராட்டி போன்று ஜீயரும் அண்ணனும் அவரவர் ப்ரபாவங்களை புகழுமாறு உள்ளனர்.

மாமுனிகள் அந்திம காலத்தில் ஆசார்ய ஹ்ருதயத்திற்குத் தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் வியாக்யானம் அருளிக் கொண்டிருந்தார். ஏன் இவ்வளவு ச்ரமதோடு இதைச் செய்ய வேண்டும் என்று அண்ணன் வினவ, “இதை உமது புத்ர பௌத்ரர்களுக்காக எழுதுகிறேன்” என்று பெரும் கருணையுடன் கூறினார்.

படையெடுப்பின் போது கோயில் அண்ணன் இழந்த முறைகள் மற்றும் பஹுமானங்களயும் மீட்டுக் கொடுத்து மாமுனிகள் பேருபகாரம் செய்தார்.

எறும்பியப்பா (மாமுனிகளின் சிஷ்யர்) தனது பூர்வ தினசர்யாவில் (மாமுனிகளின் நித்ய கைங்கர்யங்களை கூறும் க்ரந்தம்) அழகான ஒரு விஷயத்தை எடுத்துரைக்கிறார்.

ஸ்லோகம் 4:

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ |
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே ||

விளக்கம்:
எறும்பியப்பா மாமுனிகளிடம் “தேவரீர் உம்முடைய இரண்டு  பிரியமான சிஷ்யர்களான கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ஆகியோரை அருகில் வைத்து, அவர்களை தேவரீரின் ம்ருதுவான கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு, ம்ருதுவான திருவடிகளால் இந்த பூமியில் நடக்கிறீரே”.

mAmunigaL-aNNan-appan(இதனை கோயில் அப்பன் திருமாளிகையில் சித்திரமாய்க் காணலாம்)

திருமழிசை அண்ணாவப்பங்கார் தமது தினசர்யா வ்யாக்யானத்தில் இரு பிரியமான சிஷ்யர்கள் என்பது கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும் குறிக்கும் என குறிப்பிடுகின்றார். இங்கு ஒரு ஐயம் எழும்; பாஞ்சராத்ர தத்வ ஸம்ஹிதையில் கூறியபடி ஸந்யாஸியான மாமுனிகள் எப்பொழுதும் கையில் திரிதண்டத்தை ஏந்திக் கொண்டிருக்க வேண்டமோ?

அண்ணாவப்பங்கார் இதை மிக அழகாக விளக்குகிறார் :

  • முற்றும் உணர்ந்த ஸந்யாஸி  ஒரு ஸந்யாஸி சில காரணங்களினால் த்ரிதண்டத்தை ஏந்தவில்லையெனில் குறையாகாது;
  • ஒரு ஸந்யாஸி பகவானையே த்யானித்து, ஒழுக்கத்துடனும், சாஸ்த்ர விஷயங்களை முறையாகத் தனது ஆசார்யனிடம் பயின்று, பகவத் விஷய ஞானம் பெற்று, புலன்களை ஒடுக்கி இருக்குமளவில் த்ரிதண்டமாவது அவசியமில்லை;
  • எம்பெருமானை ஸாஷ்டாங்கமாக சேவிக்கும்போது த்ரிதண்டமானது இடைஞ்சலாக இருக்கக்கூடும்; அந்நேரத்தில் த்ரிதண்டமாவது அவசியமில்லை

மாமுனிகளே அண்ணனை தமது பாசுரத்தில் அழகாய் விவரிக்கிறார்:

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் ஆயிடினும்
அக்கணத்தே நம்மிறைவராவரே
மிக்கபுகழ்க் காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணனென்னும்
பேராளனை அடைந்த பேர்

விளக்கம்:

கோயில் அண்ணனிடம் சரண் புகுந்தோர் எந்த குணம், குலம், பண்பு  உடையோராயினும் அப்பொழுதே என் தலைவர் ஆவார்.

இவ்வாறாக கோயில் அண்ணனுடைய ப்ரபாவங்கள் சிலவற்றை அனுசந்தித்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதனையும் பார்த்தோம். நாமும் அவரது கமலபாதங்களில் நமக்கும் அவ்வாறே ஆசார்யாபிமானம் சிறிதளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

கோயில் கந்தாடை அண்ணன் தனியன்:

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/10/16/koil-kandhadai-annan-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

8 thoughts on “கோயில் கந்தாடை அண்ணன்”

  1. adiyEn – excellent. Can you pls also add the incident why,how Varadha narayanan swamin becomes ‘Kovil Annan’? Also the ThirumAligai address& contact #, any social network (site, id etc).

  2. “Hare Rame Hare Krishna” started using this Mantra since my undergraduate days. Since then, I’ve been blessed to have many acquaintances with Krsna Bhakta’s as if they’re inserted into life by Perumal Himself…. I sincerely believe, He elevates in gradual progression from one acquaintances to another….. religiously speaking, they’re all Krsna Bhakta’s….. In Mumbai, in Chennai, in any other serious relationship…. all coincidentally…. most of them….. are Krsna Bhaktas….. Just mere chanting “Hare Rama Hare Krishna” soothes me beyond comprehension on difficult situations…… Truly speaking, I’ve no other credentials other than chanting this Mantra to boast of being a Krsna Bhakta…… “Hare Rama Hare Krishna”

  3. Excellent work magizhmaran!!! it wud be great if u append this post about the story about how he got the name KOVIL annan.

  4. ஆழ்வார் திருவடிகளே சரணம்
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்
    ஜீயர் திருவடிகளே சரணம்
    அண்ணன் திருவடிகளே சரணம்

Comments are closed.