வடுக நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

vaduganambi-avatharasthalam

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி

அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா

ஆசார்யன்: எம்பெருமானார்

பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது. எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார். அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையேகூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக  மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு, முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார். ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

vaduganambi-emperumanar

எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுளம் பற்றினார். ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில் திருக்குறுங்குடி சேர்ப்பித்துவிட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க இன்னும் திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க, திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார். பின்னர் எம்பெருமானார் திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து எம்பெருமானார் க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும், எப்பொழுதும் எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல் ஆசார்ய நிஷ்டையோடே எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

  • பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம். இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல். வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம். ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை, பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.
  • பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு  எய்தினார் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று கூற வேண்டும் என்று அருளாளப்  பெருமாள் எம்பெருமானார் திருத்தியருளினாராம்.
  • வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார். அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.

தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி  தனிச் சிறப்புள்ளது, அது எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில், மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார், ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த வடுக நம்பிகளைப்  போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார். வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை. ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும். ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை. இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப்  புகல்.

வடுக நம்பியின் தனியன்:-

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/01/vaduga-nambi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org