வங்கிபுரத்து நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

sriramanuja-vangi-purathu-nambi-artஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும்

திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை

அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின்  சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்)

ஆசார்யன்: எம்பெருமானார்

சிஷ்யர்: சிறியாத்தான்

வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம்

வங்கிபுரத்து ஆச்சி என்பவர் மணக்கால் நம்பியின் சிஷ்யராவார். இவருடைய மகனாகிய வங்கிபுரத்து நம்பி எம்பெருமானரிடம் சிஷ்யராக சென்று சேர்ந்தார்.

வங்கிபுரத்து நம்பி விரோதி பரிஹாரம் என்ற கிரந்தத்தை நம்முடைய  சம்ப்ரதாயம் பெறுவதற்கு காரணமானவர். வங்கிபுரத்து நம்பி எம்பெருமானாரிடம் சென்று, ப்ரபன்னர் ஒருவர் தனது சம்சார வாழ்க்கையில் இருக்கும் பொழுது எதிர்நோக்கும் தடைகள் யாவை என்று வினவ எம்பெருமானாரும் எண்பத்தி மூன்று தடைகளை விவரித்தார். வங்கிபுரத்து நம்பியும் எம்பெருமானரிடமிருந்து தான் செவியுற்றபடி  அந்த எண்பத்தி மூன்று தடைகள் ஒவ்வொன்றிற்கும் மிகவும் விளக்கமான  உரையை அருளிச்செய்தார். இந்த கிரந்தத்தில் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நன்கு ஆராய்ந்து, அந்த சூழ்நிலைகைளில் எவ்வாறு நடக்க வேண்டும் என்கிற முறையையும் காட்டியுள்ளார்.

வங்கிபுரத்து நம்பி தன்  மகனிற்கு வங்கிபுரத்து ஆச்சி என்ற திருநாமம் சூட்டினார். இவரைப் பற்றி சில ஐதிஹ்யங்களில் காட்டப் பட்டுள்ளன.

நமது வ்யாக்யானங்களில், வங்கிபுரத்து நம்பியின் சிறப்பை சில ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

  • நாச்சியார் திருமொழி 9.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய மகத்துவத்தை “மஹாலக்ஷ்மி என்கிற பெரும் செல்வத்தை எம்பெருமானே பெற்றிருக்கின்றார்” என்று விளக்குகின்றாள். இது தொடர்பாக வங்கிபுரத்து நம்பி தனது சிஷ்யரான சிறியாத்தானிடம் “பல மதங்கள், உயர்வான சக்தி ஒன்று இருப்பதை ஒப்புக்கொண்டாலும் , நாம் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி – ஸ்ரீமந்நாராயணனே ஒப்பற்ற இறைவன் என்றும் அவனே எல்லோருக்கும் அடைக்கலமாக இருப்பவன் என்றும் ஒப்புக்கொள்கிறோம்” என்று உபதேசித்தார்.
  • பெரிய திருமொழி 6.7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில், திருமங்கை ஆழ்வார் “கண்ணன் எம்பெருமான் (பரம்பொருளான தானே) ஒரு முறை வெண்ணை திருடும்போது யசோதையிடம் பிடிபட்டு அவளுக்கு பயந்து அழத்தொடங்கினான்” என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அழகான நிகழ்ச்சி ஒன்று விளக்கப்பட்டுள்ளது. வங்கிபுரத்து நம்பி ஒரு முறை எம்பெருமானரிடம் தனக்கு திருவாராதன க்ரமத்தை (இல்லங்களில் தினசரி கடவுள் ஆராதனை செய்வது) கற்பிக்கும்படி  வேண்டிக் கொண்டார். எம்பெருமானார் தன்னுடைய நேரமின்மை காரணத்தால் வங்கிபுரத்து நம்பிக்கு இதைக் கற்பிக்க இயலவில்லை. ஆனால் ஒரு முறை நம்பி இல்லாத பொழுது எம்பெருமானார் ஆழ்வானுக்கும் மாருதி சிறியாண்டானுக்கும் (ஹனுமத் தாசர்) திருவாராதன க்ரமத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். அச்சமயம் வங்கிபுரத்து நம்பி அவ்வறைக்குள் நுழைந்த போது எம்பெருமானார் அவரை பார்த்ததும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அப்பொழுது எம்பெருமானார் “அடியேன் மனதில் நெடு நாளாக இந்த சந்தேகம் இருந்தது. எதனால் எம்பெருமான் (பரம்பொருளாக இருப்பினும்) வெண்ணை திருடியபொழுது பயந்தார் என்பது தெளிவாகிறது.  அடியேனும் தற்பொழுது அதே உணர்ச்சியில் உள்ளேன். ஏனென்றால் நீர் திருவாராதன க்ரமத்தை கற்பிக்க வேண்டும் என்று கேட்ட போது அடியேனால் அதை உமக்கு உபதேசிக்காமல் ஏனோ இவர்கள் இரண்டு பேருக்கும்  உபதேசிக்கத் தொடங்கிவிட்டேன். அடியேன் ஆசார்யனாகவும் நீர் சிஷ்யராக இருக்கும் பட்சத்தில் உம்மிடம் பயப்பட வேண்டாம் என்றாலும், அடியேன் செய்த காரியத்தால் உம்மைப் பார்த்தவுடன் ஒரு முறை நடுங்கி விட்டேன்” என்று கூறினார். எம்பெருமானார் தான் செய்த தவறை  வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு வ்யாக்யானத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார் என்பது அவருடைய பெருந்தன்மையை குறிப்பதாகும்.
  • திருவிருத்தம் – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் ப்ரவேசம் – நம்பிள்ளை தனது வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் முதலில்  ஒரு சம்சாரியாக இருந்து பின்  எம்பெருமானின் நிர்ஹேதுக (காரணமில்லாத) கருணையினால் ஆழ்வாரானார் என்கிறார். ஆனால் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராதலால் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வேறுபடுகிறது. சிலர் அவரை முக்தர் என்று (சம்சாரத்தை துறந்தவர்) கூறுகின்றனர். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் சிஷ்யர்  ஒருவர் நம்மாழ்வாரை முக்தர் அல்லர்  ஆனால் முக்தரைப் போன்றவர் என்றார். சிலர் அவரை நித்யஸூரி என்றனர். வங்கிபுரத்து நம்பி, எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்திருக்கிறார் என்றார்.
  • திருவாய்மொழி 7.2.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – கங்குலும் பகலும் என்ற  பதிகத்தில் ஆழ்வார் தன்னைத் தாயாக பாவித்து இந்தப் பாடலில் அவருடைய மகளின் நிலைமையை எடுத்துரைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு பாசுரத்திலும் திருவரங்கத்தாய் என்று அழைக்கிறார், ஆனால் இந்தப் பாசுரத்தில்  மட்டும் அவ்வாறு அழைக்கவில்லை. இதற்கு வங்கிபுரத்து நம்பி ” ஒரு நோயாளியின் உடல் நலம் மிகவும் மோசமடைந்தால் மருத்துவர் நோயாளியின் உறவினர்களின் கண்களை நேரே பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டு நோயாளியின் நிலைமையை எடுத்துரைப்பார். அதுபோல  எம்பெருமானை பிரிந்த துக்கத்தால் தாயும் (ஆழ்வார்),  இந்தப் பாசுரத்தில் திருவரங்கத்தாய் என்று அழைக்கவில்லை”, மேலும் இது அவளுடைய வேதனையை வெளிப்படுத்தும் நிலை என்று விவரிக்கிறார்.
  • திருவாய்மொழி 9.2.8 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஜயந்தி புறப்பாடு நடக்கும் வேளையில் வங்கிபுரத்து நம்பி இடைப் பெண்கள்  கூட்டத்தில் சேர்ந்து  எம்பெருமானை வழிபட்டார். அந்த கூட்டத்தில் இருக்கும்போது என்ன சொன்னார் என்று முதலியாண்டான் கேட்க  நம்பியும் நான் “விஜயஸ்வ” என்று கூறினேன் என்றார். அதற்கு ஆண்டான் நீங்கள் அந்தப் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது கடினமான ஸமஸ்க்ருத  மொழியில் சொல்லாமல் அவர்கள் சொந்த மொழியில் பெருமாளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.

வங்கிபுரத்து நம்பி மற்றும் அவருடைய  திருக்குமாரரின் பெருமைகள் வார்த்தா மாலையின் சில ஐதிஹ்யங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவைகளை இப்பொழுது நாம் காண்போம்.

  • 71 – வங்கிபுரத்து நம்பி யதிவர சூடாமணி தாஸருக்கு உபதேசிக்கிறார் – மிக நுண்ணியதும், திறனற்றதாகவும் உள்ள ஒரு ஜீவாத்மா, உயர்ந்த மற்றும் எங்கும் வ்யாபித்துள்ள எம்பெருமானை அடைய எந்த ஒரு முயற்சியும் மற்றோருடைய உதவியும் தேவைப்படாது. ஜீவாத்மாவிற்கு இரண்டு வழிகள் உள்ளது – ஒன்று ஆசார்யனின் கிருபையால் த்வய மஹா மந்திரத்தைத் தியானித்து உஜ்ஜீவனம் அடைவது, மற்றொன்று சம்சாரத்திலே உழன்று கொண்டு நித்ய சம்சாரியாக வாழ்வது.
  • 110 – வங்கிபுரத்து நம்பி கிடாம்பி ஆச்சானுக்கு உபதேசிக்கிறார் – அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த ஜீவாத்மா, எம்பெருமானை அடைவதற்கு பெரிய பிராட்டியார் உதவுவாள் என்று எப்பொழுதும் நம்பியிருக்க வேண்டும் .
  • 212 – த்ரைலோகியாள் என்பவள் வங்கிபுரத்து ஆச்சியின் சிஷ்யை. அனந்தாழ்வான் ஸ்ரீரங்கம் வருகை வந்த சமயம் ஆறு மாதம் அவருக்குப் பணிவிடை செய்யச் சென்றாள். அனந்தாழ்வார் சென்ற பின், அவள் திரும்பி ஆச்சியிடம் வந்தாள். ஆச்சி அவள் ஆறு மாதம் வராததற்குக் காரணம் கேட்க   அதற்கு த்ரைலோகியாள் அனந்தாழ்வானுக்குப் பணிவிடை செய்யச் சென்றேன் என்றாள். ஆச்சி அவளிடம் அனந்தாழ்வார் அரிய கொள்கைகள் ஏதாவது கற்றுக் கொடுத்தாரா என்று வினவ, அவளும் ” நான் இத்தனை காலம் தங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் “எம்பெருமானின் திருவடித் தாமரைகளையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்” என்று நான் தங்களிடம் கற்றுக்கொண்டேன். அனந்தாழ்வானிடம் பணி செய்த ஆறு மாதத்தில் நான் தங்களையுடைய திருவடித் தாமரைகளையே சார்ந்து இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் கற்றுக் கொடுத்தார். “நாம் அனைவரும் ஆசார்யனின் திருவடித் தாமரைகளையே முழுவதுமாக நம்பி இருக்க வேண்டும்” என்று இந்த அற்புதமான நிகழ்ச்சி எடுத்துக்காண்பிக்கிறது.

பிள்ளை லோகாசார்யர் சரம ச்லோகத்தின் வங்கிபுரத்து நம்பியின்  விளக்கத்தை முமுக்ஷுப்படியில் சுட்டிக் காட்டியுள்ளார். சரம ச்லோக ப்ரகாரணத்தின் கடைசிப் பிரிவில் சரம ச்லோகத்தின் மகிமை முழுமையாக வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. “கண்ணன் எம்பெருமான் தனது மகத்துவத்தையும் பெருமைகளையும் வெவ்வேறு நிகழ்ச்சியில் விவரித்த பின்னரே  சரம ச்லோகத்தை  அர்ஜுனனுக்கு அருளினார், அப்பொழுது தான் சுலபமாக அர்ஜுனனால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் ” என வங்கிபுரத்து நம்பி கூறியுள்ளார் என்று தனது முமுக்ஷுபடியின் இருநூற்று அறுபத்து ஐந்தாவது சூத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், வங்கிபுரத்து நம்பியை ” ஆப்த தமர்” (நம்முடைய ஆன்மீக நலத்தில் முக்கிய இடம் வகிப்பவர்) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது வரை நாம், வங்கிபுரத்து நம்பியின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் முழுமையாய்  பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொண்டவர் மற்றும் எம்பெருமானாரின் அன்புக்கு   மிகவும் பாத்திரமானவர் ஆவார். நாமும் சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள வங்கிபுரத்து நம்பியின் திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

வங்கிபுரத்து நம்பியின் தனியன்

பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம்
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம்

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/10/vangi-purathu-nambi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

3 thoughts on “வங்கிபுரத்து நம்பி”

Comments are closed.