திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

ay-jananyacharyar

திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம்

அவதார ஸ்தலம்: திருநாராயணபுரம்

ஆசார்யன்: அவர் திருத்தகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் (பஞ்ச சம்ஸ்காரம்) , நாலூராச்சான் பிள்ளை (கிரந்த காலக்ஷேபம்)

பரமபதம் அடைந்த இடம்: திருநாராயணபுரம்

நூல்கள்: திருப்பாவை வ்யாக்யானங்கள் ஈராயிரப்படி, மற்றும் நாலாயிரப்படி, திருமாலை வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம், ஸ்ரீவசனபூஷண வ்யாக்யானம், மாமுனிகள் துதியாகப் பாசுரம்.

அவதரித்தபோது திருநாமம் தேவராஜன்.  பின் தேவப் பெருமாள், ஆஸூரி தேவராயர், திருத்தாழ்வரை தாஸர், ஸ்ரீ ஸானு தாஸர், மாத்ரு குரு, தேவராஜா முநீந்த்ரர் மற்றும் ஜநந்யாசார்யர் என்பன.

ஆய் எனில் தாய் எனப் பொருள். இவர் திருநாராயணனுக்குப் பால் அமுது ஸமர்ப்பிக்கும் கைங்கர்யத்தைத் தாயன்போடு செய்ததார். ஒருநாள் பாலமுது ஸமார்ப்பனை சிறிது காலம் தாழ்க்க, எம்பெருமான் “எங்கே என் தாய்?” என்றானாம். அன்றுமுதல் இவர் திருநாமம் ஆய் என்றாயிற்று. இதுவே ஜநந்யாசார்யர் என்பதும். நடாதூர் அம்மாளுக்கும் தேவப் பெருமாளுக்கும் உள்ள ஸம்பந்தம் போன்றே ஆய் ஜநந்யாசார்யருக்கும் திருநாராயணனுக்கும் உள்ள ஸம்பந்தம்

அவர் தமிழும் வட மொழியையும் நன்கு கற்றிருந்தார். திராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதாந்தமும் கரை கண்டார். திருவாய்மொழிப் பிள்ளை, திருவாய்மொழி ஆச்சான் (இளம் பிளிச்சைப் பிள்ளை) இருவரோடும் நாலூராச்சான் பிள்ளையிடம் நம்பிள்ளை ஈடு காலக்ஷேபம் கேட்டறிந்தார். இப்பாசுரத்தில் முதல் “பெற்றார்” ஆய் ஜநந்யாசார்யரையும், இரண்டாம் “பெற்றார்” மாமுனிகளையும் குறிக்கும்.

மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் சாதிக்கத் தொடங்கிய போது 22வது சூர்ணிகைக்கு அவருக்குச் சில விளக்கங்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் திருவாய்மொழிப் பிள்ளையின் சஹாத்யாயியான ஆய் ஸ்வாமியிடம் கேட்டறிய விரும்பி மேல் நாட்டுக்குக் கிளம்பினார். அதேநேரம், மாமுனிகள் புகழைக் கேள்வியுற்று அவரிடம் சில விஷயங்கள் கேட்கத் திருவுள்ளம் பற்றி ஆய் ஸ்வாமி ஆழ்வார் திருநகரிக்குக் கிளம்பினார், இருவரும் ஆழ்வார் திருநகரி ஊர் எல்லையில் சந்தித்துக் கொள்ள, மாமுனிகள் சிஷ்யர்கள் இந்த சந்திப்பு எம்பெருமானாரும் பெரிய நம்பிகளும் சந்தித்தது போலே என நெகிழ்ந்தனர். இருவரும் ஆழ்வார் திருநகரிக்கே திரும்பினர். மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயம் ஓர் ஒரு முழுதாக ஆய் ஸ்வாமியிடம் காலக்ஷேபம் கேட்டார். கேட்டு முடிந்ததும் மாமுனிகள் ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் ஸமர்ப்பித்தார். தமக்கு அதற்குத் தகுதி இல்லை என மறுத்த ஆய் ஸ்வாமி மாமுனிகள் பற்றி சமர்ப்பித்த பாசுரம் இன்சுவையே  வடிவெடுத்தது. மாமுனிகள் விஷயமான அந்தப் பாசுரம்:

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாருமகிழ்மார்பன் தானிவனோ?
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

மாமுனிகள் பூதிரில் அவதரித்த யதிராசரா , மகிழ மாலை அணிந்த மாறன் நம்மாழ்வாரா? அல்லது தூது சென்ற நெடியோன் கண்ணனே தானா? என்னிடம் தந்தை போன்று பாசம் வைத்துள்ள இம்மூவரில் மாமுனிகள் யார்?

ஆய் ஸ்வாமி ஆழ்வார் திருநகரியில்  சிறிது காலம் இருந்து, பின் திருநாராயணபுரம் திரும்பினார். அசூயை கொண்ட சிலர் அவர் பரமபதித்ததாகச் சொல்லி அவரது சொத்து முழுமையையும் கோயிலுக்கு ஆக்கிவிட்டனர், இஃதறிந்த ஆய் ஸ்வாமி, “எம்பெருமான் தனக்கு வேண்டியவர்களுக்குப் பொருள் வேண்டியதில்லை என்கிறான். ஆகவே இது ஒரு நல்லதாயிற்று” என அமைதியாக அவரது ஆசார்யன் தந்திருந்த ஞானப் பிரான் விக்ரஹத்துக்குத் திருவாராதனம் ஸமர்ப்பித்து எளிய வாழ்வு நடத்தி, ஸந்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம் செய்து, பின்பு எம்பெருமான் திருவடி சேர்ந்தார்.

இப்படிப்பட்ட திருநாராயணபுரத்து ஆய் ஜநந்யாசார்யரின் வைபவத்தை நாம் சிறிது அனுபவித்தோம். இவர் ஒரு சிறந்த வித்வானாகவும், தன்னுடைய ஆசார்யனாலும் மாமுனிகளாலும் மிகவும் அபிமானக்கப்பட்டிருந்தார். இத்தகு பாகவத நிஷ்டையை ஆய் ஸ்வாமி நமக்கும் அருளவேணும்.

இவர் தனியன்:

ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/04/24/thirunarayanapurathu-ay-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org