ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – திருப்பாடகம்
திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி
அவதார ஸ்தலம்: விஞ்சிமூர்
ஆசார்யன்: எம்பெருமானார்
சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம்
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் யஞ்ய மூர்த்தி என்பதாகும். அத்வைதியான இவர் ஒரு முறை கங்கையில் ஸ்னானம் செய்யச் சென்றபோது அங்குள்ள வேத பண்டிதர்களை வாதிட்டு அவர்களை வென்று பின்பு மாயாவாத ஸந்யாஸி ஆனார். இவரது பரந்த சாஸ்திர ஞானத்தினால் சிறந்த பேரும் புகழும் பெற்று அதனால் இவரிடம் நிறைய சிஷ்யர்கள் சேர்ந்தனர். எம்பெருமானாரின் பெரும் புகழை அறிந்த யஞ்ய மூர்த்தி அவருடன் வாதம் செய்ய விரும்பினார். இவர் நிறைய கிரந்தங்களைத் தயார் செய்து, அவைகளை தன் சிஷ்யர்கள் மூலம் தூக்கிக் கொண்டு எம்பெருமானாரைச் சந்திக்க ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
எம்பெருமானார் யஞ்ய மூர்த்தியை வரவேற்று அவர்கள் இருவரும் பதினெட்டு நாட்கள் வாதம் செய்ய ஒப்பு கொண்டு ஏற்பாடு செய்தனர். வாதத்தில் யஞ்ய மூர்த்தி தோற்றால் தன் பெயரை எம்பெருமானாரின் பெயருடன் சேர்த்து கொள்வதாகவும், எம்பெருமானாரின் பாதுகையை தன் சிரசில் வைத்துக்கொள்வதாகவும், எம்பெருமானாரின் சிஷ்யராக ஆவேன் என்று அறிவித்தார். எம்பெருமானாரும் வாதத்தில் தோற்றால் எந்த கிரந்தங்களையும் தொட மாட்டேன் என்று அறிவித்தார்.
விவாதம் ஆரம்பித்து பதினாறு நாட்கள் சென்றன. அவர்களின் வாதத் திறமை இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டை போடுவது போல இருந்தது. பதினேழாம் நாள் அன்று வெற்றி யஞ்ய மூர்த்தியின் பக்கம் இருந்தது போல் தெரிந்தது. எம்பெருமானார் சிறிது வருத்தத்துடன் தன் மடத்திற்குச் சென்றார். இரவில் த்யானம் செய்து தனது திருவாராதனப் பெருமாள் பேரருளாளனிடம் நான் இந்த வாதத்தில் யஞ்ய மூர்த்தியிடம் தோற்றால் நம்மாழ்வார், ஆளவந்தார் போன்றோர்களால் வளர்க்கப்பட்ட பெரும் சம்ப்ரதாயம் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என்று கேட்டார். மேலும் வீழ்ச்சிக்கு தானே காரணம் ஆவேனோ என்று வருத்தமும் கொண்டார். பேரருளாளன் கனவில் தோன்றி வருத்தப்பட வேண்டாம் என்றும், தகுந்த புத்திசாலியான சிஷ்யனை உம்மிடம் கொண்டு வருவதன் நோக்கத்திலேயே இந்த தெய்வீக லீலை என்றார். பேரருளாளன் மேலும் அவரை ஆளவந்தாரின் மாயாவாதத்தின் மறுப்புகளை வாதத்தில் உபயோகப்படுத்தி வாதத்தில் யஞ்ய மூர்த்தியை தோற்கடிக்கும்படி அறிவுறுத்தினார். எம்பெருமானின் கீர்த்தியை உணர்ந்த எம்பெருமானார் அதிகாலை வரை தொடர்ந்து அவரின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். பிறகு நித்யானுஷ்டங்களையும் திருவாராதனத்தையும் முடித்துக்கொண்டு கம்பீரமாக பதினெட்டாம் நாள் வாதத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமானார் அவைக்கு வந்த உடனேயே அவரின் கம்பீரமான தேஜஸ்ஸை தன்னுடைய அறிவாற்றலினால் உணர்ந்தார் யஞ்ய மூர்த்தி. எம்பெருமாரின் தாமரை பாதங்களை சிரம் தாழ்த்தி வணங்கி அவருடைய பாதுகைகளை தன்னுடைய சிரஸில் வைத்துக்கொண்டு தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். எம்பெருமானார் வாதத்தை தொடரலாமா என்று கேட்டதற்கு, யஞ்ய மூர்த்தி “பெரிய பெருமாளுக்கும் தேவரீருக்கும் வேறுபாடு எதுவுமில்லை, வாதத்திற்கு இனி அவசியமில்லை” என்று கூறினார். ஆனால் எம்பெருமானார் க்ருபையுடன், எம்பெருமானின் ஸகுணத்வத்தைத் தக்க பிரமாணத்தை கொண்டு விவரித்தார். யஞ்ய மூர்த்தி அவரிடம் தனக்கு முறையான ஸந்யாஸாச்ரமம் கொடுத்து அருள வேண்டினார். முதலில் யஞ்ய மூர்த்தியை முன்பு மாயாவாத ஸந்யாஸியாக இருக்கும் போது சிகையையும் யக்ஞயோபவீதத்தையும் துறந்ததால் அதற்குப் பிராயச்சித்தம் பண்ணுமாறு எம்பெருமானார் அறிவுறுத்தினார். அதற்கு யஞ்ய மூர்த்தியும் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு த்ரிதண்டம், காஷாயம் முதலானவற்றைக் கொடுத்து பேரருளாளப் பெருமாளின் தயையின் ஞாபகார்த்தமாக அருளாளப் பெருமாள் என்ற பெயரையும் மற்றும் யஞ்ய மூர்த்தியின் வேண்டுகோளின்படி எம்பெருமானார் என்ற பெயரையும் இணைத்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமம் சூட்டினார். மேலும் எம்பெருமானார் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை நம்பெருமாளிடமும் அவருடைய திருவாராதனப் பெருமாளையும் சேவிக்கச் செய்து, இந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் ஏற்பட்டது தெய்வ லீலை என்று உணர்த்தினார்.
எம்பெருமானாரே அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு அருளிச்செயலையும் அதன் அர்த்தத்தையும், காலப்போக்கில் கற்பித்தார். அநந்தாழ்வான், எச்சான் முதலானோர் எம்பெருமானாரின் சிஷ்யர்களாவதற்கு ஸ்ரீரங்கம் வந்த போது , எம்பெருமானார் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கீழ் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அவரது சிஷ்யர்களிடம் எம்பெருமானாரே உபாயம் என்று எப்பொழுதும் நினைக்கும்படி அறிவுறுத்தினார் .
பேரருளாளப் பெருமானுக்கு நித்ய திருவாராதனம் செய்வதே எம்பெருமானாருக்கு , .அருளாளப் பெருமாள் எம்பெருமானார் செய்யும் முக்கிய கைங்கர்யம் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்த பொழுது தெருவில் உள்ள ஒரு ஸ்ரீரங்காவாசியை எம்பெருமானாரின் மடம் எங்கே உள்ளது என்று கேட்க அதற்கு அவர் எந்த எம்பெருமானார் என்று வினவினார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதற்கு நம் சம்பிரதாயத்தில் இரண்டு எம்பெருமானார் உள்ளனரா என்று அதிசயித்து நாங்கள் உடையவர் மடத்திற்கு செல்ல விரும்புகிறோம் என்றவுடன் அந்த ஸ்ரீரங்கவாசி உடையவர் மடத்தை காண்பித்தார். அச்சமயத்தில் அங்கு வந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நடந்ததை அறிந்து இரண்டு மடங்கள் ஒரே பெயரில் இருந்ததால்தான் இந்த குழப்பம் என்று உணர்ந்து தனி மடத்தில் வசிப்பதை விரும்பாமல் தன் மடத்தை இடித்துவிட்டார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நடந்தவற்றை எம்பெருமானாருக்கு எடுத்துரைத்து இனிமேல் தனக்கு தனியான மடம் வேண்டாம் என்றார். எம்பெருமானார் அதற்கு சம்மதித்து அவருடைய மடத்திலேயே வந்து வசிக்கச் சொன்னார் , மேலும் அவருக்கு எல்லா ரஹஸ்யார்த்தங்களையும் விளக்கினார்.
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிக்க க்ருபையுடன் தமிழில் ஞான சாரம், ப்ரமேய சாரம் என்று இரண்டு பிரபந்தங்களை எழுதினார். அவை நமது சம்பிரதாயத்தின் அழகான அர்த்தங்களை வெளியிடுவதாக உள்ளன. இவை ஆசார்யனின் சிறப்பை வெகு அழகாக விவரிக்கிறது. இந்த பிரபந்தங்களின் கருத்துக்களை பின்பற்றி பிள்ளை லோகாசார்யர் தனது ஸ்ரீவசன பூஷணத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த ப்ரபந்தங்களுக்கு மாமுனிகளும் அழகாக வியாக்யானம் செய்துள்ளார்.
பட்டர் அவரது இளம் வயதில் ஆழ்வானிடம் சிறுமாமனிசர் என்ற பாடலுக்கு பொருள் அறியும் வேளையில் முரண்பாடு உள்ளது என்று சொல்ல ஆழ்வான் அதற்கு முதலியாண்டான், எம்பார் மற்றும் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போன்றோர் உருவத்தில் சிறியவராயினும் பகவத் பக்தியில் நித்யஸூரிகளைப்போல் பெரியவர்கள் என்று விளக்கினார். இந்தச் சரித்திரத்தை நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானத்தில் கண்டு கொள்ளலாம்.
எப்பொழுதும் எம்பெருமானாரையே நினைந்திருக்கும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை நாம் நினைவில் கொள்வோம்.
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாச்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே
அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி
ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2012/11/28/arulala-perumal-emperumanar-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Sir,
Thaniyan il ‘devaraja munim bhaje” endrulladhu. Adhan villakkam thevai. Dayavudan arula vendugiren.
Adiyen dasan,
Kapisthalm Chetlur Devarajan.
Here is the meaning for the thaniyan taken from https://acharyas.koyil.org/index.php/thanians/ .
I take refuge of dhEvarAja muni (aruLALa perumAL emperumAnAr) who is a dear sishya of emperumAnAr, who has the great wealth of having understood the in-depth meanings of vEdham and who is situated in sannyAsAsramam.