ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம்
அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆசார்யன்: பெரியாழ்வார்
பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி
பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்
திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார்.
- ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது.
- தாமே முயன்று விவேகம்பெற்று வீழவும்செய்யும் ரிஷிகளுக்கும் ஆழ்வார்களுக்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு.
- எப்போதும் ஸ்வாநுபவமும் சிலநேரங்களில் மங்களாஶாஸனமும் செய்யும் ஆழ்வார்களுக்கும் எப்போதும் மங்களாஶாஸனத்திலேயே ஊன்றியுள்ள பெரியாழ்வாருக்கும் சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு.
- ஆண்டாளுக்கும் பெரியாழ்வாருக்குமுள்ள வேறுபாடு ஒரு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு. இதற்குக் காரணம்:
- ஆழ்வார்கள் யாவரும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, ஸம்ஸாரி சேதனர்களை அவர் தம் உறக்கத்துநின்று எழுப்பினார்கள்; ஆண்டாளோ தானே பூமிப்பிராட்டியானதால் தானே சென்று எம்பெருமானை எழுப்பிச் சேதனர் பால் அவனுக்குள்ள ரக்ஷண பாத்யதையை அறிவுறுத்தினாள். இதை நம்பிள்ளை திருவாய்மொழி, திருவிருத்த வ்யாக்யானங்களில் காட்டியுள்ளார்.ஆழ்வார்கள் ஸம்ஸாரிகளாய்ப் போந்து, எம்பெருமானால் மதிநலம் அருளப் பெற்றவர்கள்.ஆண்டாளோ பூமிப்பிராட்டியானபடியால் தானே நித்யஸூரி, திவ்ய மகிஷிகளில் ஒருத்தி எனப் பெரியவாச்சான்பிள்ளை காட்டியருளினார்.
- ஆண்டாள் பெண்பிள்ளை ஆதலால் எம்பெருமானோடு புருஷர்களான ஆழ்வார்கள் போலன்றி எம்பெருமான் பக்கலில் தன காதலை ஸ்வாபாவிகமாகக் காட்டவல்லவள்.
பிள்ளை லோகாசார்யர் இதை ஸ்ரீவசன பூஷணத்தில் அத்புதமாகக் காட்டியருளும் ஸ்ரீ ஸூக்திகள் காணீர்:
- ஸூத்திரம் 238 – ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாரும் திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தாநம் பண்ணினார்கள் – பிள்ளை லோகாசார்யர் ஜாதி வர்ணம் பிறப்பு இவைகளைமீறிய பாகவதர்களின் பெருமையை விளக்குமுகமாக பகவத் கைங்கர்யம், அனுபவம் ஏற்பட வழிகளாக ஆண்டாளும் பெரியாழ்வாரும் கோகுலத்தில் ஆய்ப்பிறவியும் விரும்பினார்கள் என்கிறார். இக்கைங்கர்யம் எவ்வடிவிலும் இருக்கலாம் எங்கும் இருக்கலாம் அதன் சிறப்பு குறையாது.
- ஸூத்திரம் 285 – கொடுத்துக் கொள்ளாதே கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்கவேணும் – எம்பெருமான் உகக்கும் கைங்கர்யமே மேலானது என 238ல் காட்டினார். லோகாசார்யர் சூ.284ல் கைங்கர்யம் எந்தப்ரதி பலனையும் எதிர்பாராது இருத்தல் வேண்டும் என்கிறார். நம் கைங்கர்யம் ஒரு பலனை அடைய உத்தேசித்ததாய் இருக்கலாகாது. நம் கைங்கர்யம் எம்பெருமான் ஏற்றுக்கொண்டதற்காக நாம் மேலும் செய்யவேண்டும்.இதை வ்யாக்யாநிக்கும் மாமுனிகள், ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரம் 9.7, “இன்று வந்து இத்தனையும் செய்திடப் பேரில் ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்” என்பதை உதாஹரிக்கிறார். மாமுனிகள் இதை உதாஹரிக்கக் காரணம், இதற்கு முன் பாட்டில் ஆண்டாள் எம்பெருமானுக்கு நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்கார அடிசிலும் சமர்ப்பிப்பதாகக் கூறுகிறாள். அதை சமர்ப்பித்ததற்கு ப்ரதியாக அவள் எதிர்பார்ப்பது மேலும் 100 கைங்கர்யம் செய்யவேணும் என்பதே ஆகும்.
ஆயி ஜனந்யாசார்யர் தம் ஈராயிரப்படி, நாலாயிரப்படி திருப்பாவை வ்யாக்யானங்கள் இரண்டிலும் திருப்பாவையின் உயர்வை விளக்க ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். எம்பெருமானாரிடம் ஶிஷ்யர்கள் தேவரீர் திருப்பாவை வ்யாக்யாநித்தருள வேணுமென்னா நிற்க, அவர், “திருப்பல்லாண்டு எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்யும் ப்ரதம பர்வம் ஆரும் சொல்லலாம், திருப்பாவையோ பாகவத கைங்கர்யஞ்சொல்லும் சரம பர்வம் ஆராலும் சொல்லுப்போகாது” என்றாராம். எம்பெருமானார், மேலும், எம்பெருமானோடேயே எப்போதுமுள்ள நாய்ச்சிமாராலும் அவனோட்டை ஸம்பந்தத்தை ஆண்டாள் போலச் சொல்லவொண்ணாது, ஆழ்வார்கள் எல்லாரும் கூடினாலும் ஆண்டாள் போலச் சொல்லவோண்ணாது என்றாராம்.
மாமுனிகள் உபதேச ரத்தின மாலை பாசுரங்கள் 22, 23.24 என மூன்று பாசுரங்களில் ஆண்டாள் பெருமையைப் பேசுகிறார்.
- 22ல் மாமுனிகள் பெரும் உணர்ச்சிவசராய் பிராட்டி பரமபதத்து இன்பம் அனைத்தும் துறந்து நமக்காக இங்கு ஆண்டாளாய் ஸம்ஸார துக்கத்தில் வந்தாள் ஆற்றில் வீழ்ந்த குழந்தையைத் தூக்கத் தானும் நீரில் குதிக்கும் தாய் போல.
- 23ல் ஆண்டாளுக்கு ஒப்பு இல்லாததுபோல் அவள் பிறந்த திரு ஆடிப் பூரத்துக்கும் ஒப்பில்லை என்கிறார்.
- 24ல் அவள் ஆழ்வார்கள் எல்லாரையும் விஞ்சிய செயல் உடையவள், அஞ்சு குடிக்கு ஒரு ஸந்ததி என்றார். பிள்ளை லோகம் ஜீயர் அஞ்சு குடியை விவரிக்கிறார்:
- பரீக்ஷித் பஞ்ச பாண்டவர்களுக்குப்போல்
- இவள் பிரபன்னகுலமான ஆழ்வார்களின் வழித்தோன்றல்
- எப்போதும் எம்பெருமான் நலத்துக்க்கே அஞ்சும்=பயப்படும் பெரியாழ்வாரின் ஸந்ததி
ஆண்டாளின் ஆசார்ய நிஷ்டை பரிசுத்தமானது. பெரியாழ்வாரிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகவே ஆழ்வாருக்குப் ப்ரியமான எம்பெருமானிடம் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டு எம்பெருமானைக் கொண்டாடினாள்.
- நாச்சியார் திருமொழி 10.10ல் ஆண்டாள் தானே இதைத் தெரிவிக்கிறாள் – “வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே” என.
- மாமுனிகள் 10 ஆழ்வார்களையும் பேசியபின் ஆண்டாள் மதுரகவிகள் எம்பெருமானார் மூவரையும் பேசுகிறார். ஏனெனில் இம்மூவரும் ஆசார்ய நிஷ்டர்கள் என்பதால்.
இனி ஆண்டாள் சரித்திரம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போது நாச்சியார் ஸந்நிதி உள்ள இடத்தில் பூமிப்பிராட்டி ஆண்டாளாகப் பெரியாழ்வார் திருமாளிகையில் அவதரித்தாள். குழந்தை எம்பெருமானின் திவ்யகுணானுபவங்களோடே பெரியாழ்வாரால் வளர்க்கப் பட்டாள். பெரியாழ்வார் தினமும் வடபத்ரஸாயீ எம்பெருமானுக்குப் பூமாலைகள் தொடுத்து சமர்ப்பிப்பார். ஆண்டாள் பெருமாளை மணம் செய்துகொள்ள விரும்புமளவு பக்தி வயப்பட்டாள். ஒருநாள் ஆண்டாள் ஆழ்வார் இல்லாதபோது பெருமாள் மாலையைத் தான் சூடி வைத்தாள். லீலா விநோதனான எம்பெருமான் இவள் தான் சூடிக் களைந்து, தான் அவனுக்குப் பொருத்தமா எனப் பார்த்த மாலைகளை விரும்பினான். ஒருநாள் பெரியாழ்வார் இவள் மாலையைத் தான் சூடிக் களைந்து வைத்தது கண்டு திடுக்கிட்டு அதை அவனுக்குச் சாத்தாதுபோக அவன் அவர் கனவிலே வந்து ஏன் மாலை சாத்தவில்லை என வினவ, ஆழ்வார் நடந்தது கூற எம்பெருமான் தனக்குக் கோதை சூடிய மாலையே உகப்பு என்றனன். இது கேட்டுப் பேருகப்படைந்த ஆழ்வார் முன்பிலும் கோதைபால் அன்பு பூண்டவரானார். அவள் சூடிக்கொடுத்த மாலையையே தினமும் எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கலானார்.
அவள் பூமிப் பிராட்டியானதால் இயல்வாகவே எம்பெருமானிடம் காதல் கொண்டனள். எம்பெருமானிடம் ஆண்டாள் கொண்ட காதல் மற்றைய ஆழ்வார்களின் அன்பைவிட மிக உயர்ந்தது. எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாத ஆண்டாள் அவனை மணம் புரிய வழிகளை விசாரித்தாள். ராஸக்ரீடையின் போது கண்ணன் சடக்கென மறைந்ததைக் கண்டு தரிக்க முடியாத கோபிகைகள் கண்ணனின் லீலைகளை அனுகரித்தனர் (நடித்துப் பார்த்தனர்). அதே போல ஆண்டாளும் வடபத்ரஸாயீ எம்பெருமானைக் கண்ணனாகவும் அவன் திருக்கோயிலையே நந்தகோபன் திருமாளிகையாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரைத் திருவாய்ப்பாடியாகவும் அங்கிருக்கும் பெண்களை கோபிமார்களாகவும் எண்ணித் திருப்பாவையைப் பாடினாள்.
திருப்பாவையில் ஆண்டாள் பல முக்கியமான விஷயங்களை விளக்குகிறாள்:
- ப்ராப்யம் (இலக்கு), ப்ராபகம்(வழி) இரண்டுமே எம்பெருமான் எனக் காட்டினாள்
- பூர்வாசார்ய அனுஷ்டானக்ரமத்தில் செயத்தக்கன, செய்யத்தகாதன என க்ருத்யாக்ருத்ய விவேகம் சொன்னாள்
- பகவதநுபவம் ஸ்வார்த்தமாகத் தனியேயன்று, குழாங்களாய் ஆயிற்றுச் செய்யவேண்டுவது எனக் காட்டினாள் – பத்து பாசுரங்களில் பத்து கோபிகைகளை எழுப்பி அழைத்துச் செல்கிறாள்
- எம்பெருமானை அணுகுமுன் த்வாரபாலகர், பலராமன்,யஶோதைப்பிராட்டி போன்றோரைப் பற்ற வேண்டும்
- எம்பெருமானை அணுகுமுன் எப்போதும் பிராட்டி புருஷகாரம் வேணும்
- அவனுக்கு எப்பொழுதும் மங்களாஶாஸனம் செய்யவேணும்
- கைங்கர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம். ஆதலால் அவனிடம் கைங்கர்ய ப்ரார்த்தனை தேவை
- அவன் கைங்கர்யம் அவனை அடைய உபாயமென்று ஒரு துளியும் நினைவு கூடாது
- கைங்கர்யம் அவன் முகோல்லாஸத்துக்காகச் செய்யவேணும், பிரதி பலனுக்காக அன்று
ஆனபின்பும் எம்பெருமான் வந்து கோதையை ஏற்றானல்லன். ஆண்டாள் ஆற்ற ஒண்ணாக் காதலால் நைந்து தன் ஆர்த்தி வெளிப்பட மேலான ஸாம்ப்ரதாயிக அர்த்தங்கள் பொதிந்த நாச்சியார் திருமொழியைப் பாடினள். இப்பாசுரங்களின் வ்யாக்யானங்களைப் புரிந்துகொள்ள மேலான மனப் பக்குவம் வேணும் என்பர்.
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” எனத் தனக்கு ஸரீர ஸம்பந்தம் வேண்டாவென அறுதியிட்டாள். எம்பெருமானோடு தன திருமணத்தை அவள் “வாரணம் ஆயிரம்” பதிகத்தில் கனவுரையாகக் கூறுகிறாள். பின்னையும் பெரியாழ்வார் அவளுக்கு அர்ச்சாவதார மேன்மையை உணர்த்தி அர்ச்சாவதார எம்பெருமான்களைப் பற்றி விளக்க, அவள் திருவரங்கத்தான் மீது தீராக் காதல் வயப்பட்டனள். ஓரிரவு அவன் பெரியாழ்வார் கனவில் வந்து ஆண்டாளைத் திருவரங்கம் கொணர்ந்து தனக்குத் திருமணம் முடிக்கக் கோரினன். ஆழ்வார் மிக்க மகிழ்ச்சி அடைந்தவேளையில், எம்பெருமான் அவளைத் திருவரங்கம் அழைத்துவரப் பல்லக்கும் சத்திர சாமராதிகளும் கைங்கர்யபரர்களும் அனுப்பினன். வடபத்ரஸாயீ அனுமதி பெற்று ஆழ்வார் அவளோடு திருவரங்கம் புறப்பட மூடு பல்லக்கில் மேளதாளத்தோடு ஆண்டாள் கிளம்பினாள்.
திருவரங்கத்தில் நுழைந்ததும் அழகினுக்கு அலங்கரித்தாப்போலிருந்த ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி, பெரியபெருமாள் திருமுன்பே சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தனள்.
இது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப் பெரிய பெருமாளின் ஶ்வஶுரர் (மாமனார்) – ஸமுத்ரராஜன் போலே எனப் போற்றினர். அவரோ முன்புபோன்றே ஸ்ரீவில்லிபுத்தூரிலே வடபத்ரஸாயீக்குக் கைங்கர்யம் செய்வாராயினர்.
ஆண்டாளின் அளப்பரிய பெருமைகளை நாம் எப்போதும் சிந்திக்கிறோம், அவசியம் மார்கழி மாத முழுதும் அவள் பாட்டு, வியாக்யான அநுபவமாகிறது. பட்டர் பணித்தபடி முப்பது பாசுரங்களும் அநுஸந்திக்கில் நன்றாம்…அன்றேல் ஒரே பாட்டை அநுஸந்திக்கிலும் நன்றாம், அன்றேல் கடைசிப்பாட்டை பட்டரநுபவித்தபடியை அநுஸந்திக்கிலும் நன்றாம். எம்பெருமானார்போலே பட்டரும் திருப்பாவையில் போர உகந்து ஈடுபட்டிருப்பர். தோல் கன்றைக் கண்டு பால் சுரக்கும் தாய்ப்பசு போலே, திருப்பாவையுடன் ஏதேனும் ஒரு ஸம்பந்தம் இருந்தாலேயே, பூமிப் பிராட்டி வராஹப் பெருமானிடம் ப்ரார்த்தித்தபடி, நம்மை அவனும் உஜ்ஜீவிப்பான்.
தன் அகாத கருணையால் இந்த ஸம்ஸாரத்தில் நமக்காகப் பிறப்பெடுத்த ஆண்டாள் நம் உய்வுக்காகத் தன் ஈடற்ற கருணையால் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி அளித்தாள். இவை இரண்டும் நமக்குப் பிறப்பிறப்புத் துயரறுத்துத் தொன்நெறிக்கண் நிறுத்தி பகவதனுபவ, கைங்கர்ய அந்தமில் பேரின்பம் அருளும்,
ஆண்டாள் தனியன்:
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி சத ஶிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:
ஆண்டாள் வாழி திருநாமம்:
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே
ஆண்டாள் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-andal-anubhavam.html.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்
ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2012/12/16/andal-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org/index.php
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
அருமை பதிவுகள்,,,வைணவம் தழைக்க ஒன்று கூடி பாடுபடுவோம்
அருமை பதிவுகள்,,,வைணவம் தழைக்க ஒன்று கூடி பாடுபடுவோம்…..நாச்சியார் திருவடிகளே சரணம்