சோமாசியாண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

ramanujar-sriperumbudhurஎம்பெருமானார்

திருநக்ஷத்ரம்: சித்திரைத் திருவாதிரை

அவதார ஸ்தலம்: காராஞ்சி

ஆசார்யன்: எம்பெருமானார்

கிரந்தங்கள்: ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம்

சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர் எம்பெருமானார் தாமே நியமித்தருளிய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் இவரே. ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பஞ்சாங்கம் தொகுக்கும் கைங்கர்யம்  இவர் பரம்பரையே இன்றும் செய்து வருகிறது. ச்ருத பிரகாசிகா பட்டர், நாயனாராச்சான் பிள்ளை, வேதாந்தாசார்யர் போன்றோர் தம் வ்யாக்யானங்களில் இவரை உதாஹரிக்கின்றனர். க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் நாயனாராச்சான் பிள்ளை இவரது குரு குணாவளி  ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான்  – அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து, திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க, தம் வழிபாட்டுக்கு ஒரு எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக, சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார். அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து, ”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே. நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில் இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ, விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார். எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார். உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம். நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால் உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் – இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.

சோமாசியாண்டானின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

  • திருநெடுந்தாண்டகம் 27 –  பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வார் பரகால நாயகியாக ஒரு பக்ஷியைத் திருக்கண்ணபுரத்துக்குத் தூது விடுகிறார். ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்னும் போதுள்ள பாவம் (உணர்வு/ஆநந்தம்) பிறர்க்கு வாராது எனும் பெரியவாச்சான் பிள்ளை, “அநந்தாழ்வான் திருவேங்கடமுடையான் என்று கூறுவது விசேஷம். பட்டர் அழகிய மணவாளப் பெருமாள் என்று கூறுவது விசேஷம். சோமாசியாண்டான் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று கூறுவது விசேஷம்” என அதே பெயர்களைப் பிறர் சொன்னால் அந்த பாவ விசேஷம் வாராது என்று காட்டுகிறார்.
  • திருவாய்மொழி 6.5.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இதே விஷயம் வேறு மாதிரி வருகிறது. ஆழ்வார் ஆகிய பராங்குச நாயகி திருத்தொலைவில்லி மங்கலம் எம்பெருமான் மீது விசேஷப் பற்றுக் கொண்டுள்ளாள். அவள் அவ்வெம்பெருமான் திருநாமம் சொல்வது, அநந்தாழ்வான், பட்டர், சோமாசியாண்டான் போன்றோர் திருவேங்கடமுடையான், அழகிய மணவாளப் பெருமாள், எம்பெருமானார் என்று சொல்வதுபோல் விசேஷமாய் இருக்கும் என்கிறார்.

வார்த்தாமாலையிலும் சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

  • 126 – சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார். பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும். பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால், அவனே உண்மையான உபாயம்.
  • 279 – சோமாசியாண்டானைவிட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர், ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி; இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,  பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
  • 304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
    • ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
    • நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
    • எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
    • எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
  • 375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்! கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த சோமாசியாண்டான் திருவடிகளே நமக்குப்  புகல்.

சோமாசியாண்டான் தனியன்:

நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/09/somasiyandan-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “சோமாசியாண்டான்”

Comments are closed.