ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/23/embar-tamil/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை பற்றி அனுபவிப்போம் .
பராஶர பட்டர் (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம்
திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம்
திரு அவதாரத்தலம்: திருவரங்கம்
ஆசார்யன்: எம்பார்
ஶிஷ்யர்கள்: நஞ்சீயர்
திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்
அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஶம் , பகவத் குண தர்ப்பணம் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வியாக்யானம் ), ஸ்ரீரங்கராஜ ஸ்தோத்ரம் .
திருவரங்கநாதனின் பிரசாதத்தை ஆண்டாள் அம்மங்கார் உண்டதால் , கூரத்தாழ்வானுக்கும் ஆண்டாள் அம்மங்காருக்கும் திருவவதாரம் செய்த மன்னுபுகழ் மைந்தர்கள் ஸ்ரீ பராஶர பட்டர் மற்றும் இவரது திருத்தம்பியாரான வேத வியாஶ பட்டர் ஆவர். ஒரு நாள் ஆழ்வான் உஞ்ச வ்ருத்திக்கு சென்ற போது மழை பெய்து அவரால் அன்று எந்த தான்யங்களையும் எடுத்துவர முடியாததால் , ஆழ்வானும் ஆண்டாள் அம்மங்காரும் உணவருந்தாமலேயே அன்றிரவு உறங்கச் சென்றுவிட்டனர். அந்த வேளையில் பெரிய பெருமாளுக்கு, அந்த நாளின் இறுதி தளிகை கண்டருளப்பண்ணும் மணி ஓசையை அவர்கள் கேட்கின்றனர் . அப்போது ஆண்டாள் எம்பெருமானை நோக்கி “இதோ உமது பக்தரான ஆழ்வான் பிரஸாதம் இன்றி இருக்க தேவரீர் அங்கு கூடிக்குலாவி போகம் கண்டருள்கிறீர் ” என்று நினைத்தார். இதை உணர்ந்த பெரிய பெருமாள் உத்தம நம்பி மூலம் தமது பிரஸாதங்களை வாத்யம், சத்ரம் (குடை), சாமரம் உள்ளிட்ட ஸகல விருதுகளோடு ஆழ்வானுக்கும் அவர் தேவிகளுக்கும் அனுப்புகிறார். பிரஸாதம் ஆழ்வான் திருமாளிகையை நோக்கி வர , “இதென் ? இன்றைக்கு என்ன விசேஷம்” என்று பதறி எழுந்தார் . பிறகு ஆண்டாளை நோக்கி “நீ பெருமாளிடம் ஏதேனும் நினைத்தாயோ ? ” என்று கேட்க ஆண்டாளும் நினைத்தவற்றை சொல்ல, ஆழ்வான் ஆண்டாள் பெருமாளிடம் இவ்வாறு ப்ரார்த்தித்ததை நினைத்து மிகவும் வருந்தினார். பின் பிரஸாதத்திலிருந்து இரண்டு திரளைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தாம் அமுது செய்து ஆண்டாளுக்கும் கொடுத்தார். இந்த இரண்டு திரளைகளே அவர்களுக்கு பராஶர பட்டர் வேதவ்யாஸ பட்டர் என்கிற இரண்டு அழகான திருக்குமாரர்களை அருளுகின்றன. இவ்விருவரும் திருவவதரித்த பத்துநாளும் கடந்த இரண்டாம் நாள், எம்பார் த்வய மஹா மந்த்ரோபதேஶத்தை செய்தருள , எம்பெருமானார் எம்பாரையே இவ்விருவருக்கும் ஆசார்யனாய் இருக்க நியமித்தார். எம்பெருமானார் ஆழ்வானை, பராஶர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது ஸந்நிதியில் வைத்துப் பார்த்துக்கொண்டார். ஒருமுறை , பால ப்ராயத்திலே பட்டர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து வருகையில், எம்பெருமானார் அநந்தாழ்வான் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களிடம் பட்டரைத் தம்மைப் போலவே கொள்ளும் படிக் கூறினார். பட்டர் தமது சிறு பிராயம் முதலாகவே மிகவும் விலக்ஷணராய்த் திகழ்ந்தார். இதை நமக்குப் பல வைபவங்கள் உணர்த்துகின்றன:
- ஒரு முறை பட்டர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு வித்வான் “ஸர்வஞ்ய பட்டன் “ என்று விருது ஊதி வர, “இதார்? எம்பெருமானார் கூரத்தாழ்வான் முதலியாண்டான் எம்பார் உள்ளிட்ட பெரியர்வர்கள் இங்கே திருவரங்கத்திலே எழுந்தருளி இருக்க ஸர்வஞ்யன் என்ற விருதூதி வருவது ? ” என்று திடுக்கிட்டு , அந்த வித்வானிடம் சென்று அவரை வாதத்திற்கு அழைத்தார் . அந்த வித்வானும் பட்டர் சிறுபிள்ளை ஆதலால் , பட்டர் என்ன கேள்வி எழுப்பினாலும் அதற்கு தாம் விடையளிப்பதாகக் கூறினார். பட்டர் தன் திருக்கரத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து, இதில் எவ்வளவு மண் இருக்கிறது என்று கேட்க பதிலின்றி திகைத்தார் அந்த வித்வான். பிறகு பட்டர் “ஒரு பிடி மண் என்று பதிலளிக்க முடியாத நீர் ஏன் இவ்விருதை ஊதுகிறீர் ? ” என்று கேட்க, பட்டரின் பேரறிவைக் கண்டு வியப்புற்ற அந்த வித்வானும் பல்லக்கிலிருந்து இறங்கி பட்டரை பல்லக்கிலே எழுந்தருளப்பண்ணி ஆழ்வான் திருமாளிகையிலே கொண்டு சேர்த்து பலவகையால் பட்டரைப் புகழ்ந்தார் .
- பட்டரின் குருகுல வாசத்தில் ஒரு நாள், பட்டர் தெருவில் விளையாடுவதைக் கண்டு, பாடசாலைக்குச் செல்லாமல் விளையாடுவது ஏன் என்று கூரத்தாழ்வான் கேட்கிறார். ஒரே சந்தையில் பாடத்தை க்ரஹிக்கக் கூடியவரான பட்டர் அதற்கு “நேற்று சொன்ன பாடத்தையே இன்றும் சொல்லுகிறார்கள் ” என்று கூறினார். இதைக் கேட்டு ஆழ்வான் பட்டரை பரீக்ஷிக்க பட்டர் மிக எளிதாகப் பாசுரங்களைச் ஸாதித்துவிடுகிறார்.
- ஒரு முறை கூரத்தாழ்வான் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை பதிகத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது “சிறுமா மனிசர் “ என்று வருவதைக் கேட்டு பட்டர் , “எவ்வாறு ஒரே மனிதர் சிறியவராகவும் பெரியவராகவும் இருத்தல் ஸாத்தியம் ?” என்று கேட்க ஆழ்வான் தானும் மிகவுகந்து “நல்லாய் ! முதலியாண்டான் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்றோரைப் பார், உடல் மெலிந்து சிறுமையுடயராயிருந்தும் ஞானம் அனுட்டானம் பெருத்துப் பெருமை உடையவர்களாகவும் எழுந்தருளி உள்ளனர் அல்லவா ? ” என்று ஸமாதானம் ஸாதிக்க, பட்டர் தானும் தெளிவடைந்தார் .
பட்டர் வளர்ந்த பின் எம்பெருமானார் தரிசனத்தின் ப்ரவர்த்தகர் ஆனார் . பணிவு, பெருந்தன்மை, அருளிசெயலில் பெருத்த மங்களாஶாஸனம் ரஸனை உள்ளிட்ட அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்றவராய் எழுந்தருளி இருந்தார். நம்பிள்ளை உள்ளிட்ட பூர்வாசார்யர்கள் பல வியாக்யானங்களில் பட்டரின் கருத்தையே மிகவும் சிறந்ததாய் உகந்தனர். ஆழ்வானைப் போலவே பட்டரும் திருவாய்மொழியிலும் திருவாய்மொழி அர்த்தங்களிலும் ஆழ்ந்து விடுவார். பட்டர் திருவாய்மொழியில் ஆழ்ந்த பல தருணங்களை வியாக்யானங்களில் காணலாம். ஆழ்வார் நாயிகா பாவத்தில் பராங்குஶ நாயகியாய்ப் பாடும் போது, “ஆழ்வார் திருவுள்ளத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிவார் ஆரும் இல்லை ” என்று பட்டர் சாதிப்பார். பட்டரின் பணிவு , ஞானம் , பெருந்தன்மை உள்ளிட்ட கல்யாணகுணங்களை விளக்கும் பல வைபவங்கள் இருக்கின்றன. பட்டரின் பணிவை மணவாளமாமுநிகள் யதிராஜ விம்ஶதியில் ஆழ்வான் மற்றும் ஆளவந்தாருடைய பணிவோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகிறார். வ்யாக்யானங்கள் பட்டரின் நிர்வாகங்கள் மற்றும் ஐதிக்யங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன .
- தனது ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர் ஓர் நிகழ்வைக் காட்டுகிறார் . ஒருமுறை எவ்வாறோ ஒரு நாய் பெரிய கோயிலுக்குள் நுழைந்துவிட அர்ச்சகர்கள் லகு ஸம்ப்ரோக்ஷணம் செய்ய முடிவெடுத்து விடுகிறார்கள். இதை அறிந்த பட்டர் பெரிய பெருமாளிடம் விரைந்து சென்று நாள்தோறும் தாம் கோவிலுக்கு வருவதற்காக ஸம்ப்ரோக்ஷணம் செய்யாத அர்ச்சக சுவாமிகள் நாய் நுழைந்ததற்கு செய்கிறாரேன்? என்று விண்ணப்பிக்கிறார். மிகப்பெரிய வித்வானாய் இருந்தும் பட்டர் தன்னை ஒரு நாயை விடத் தாழ்மையானவர் என்று கருதினார்.
- தேவலோகத்தில் தேவனாய்ப் பிறப்பதைக் காட்டிலும் திருவரங்கத்தில் ஒரு நாயாய் பிறப்பதையே தாம் பெரிதும் உகப்பதாக தனது ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர் ஸாதிக்கிறார்.
- ஒரு முறை நம்பெருமாள் திருமுன்பே சில கைங்கர்யபரர்கள் பொறாமையால் பட்டரை வைதார்கள் . அதற்கு பட்டர் “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இரண்டு காரியங்களை தவறாது செய்யவேண்டும் . ஒன்று பெருமாளின் கல்யாண குணங்களை வாயினால் பாடுதல் மற்றொன்று தனது தோஷங்களை நினைத்து வருந்துதல்” என்றும் “பெருமாளின் கல்யாண குணங்களைப் பாடுவதில் ஈடுபட்டிருந்த அடியேன், அடியேனது தோஷங்களை எண்ணி வருந்த மறந்து விட்டேன். தாங்கள் அவற்றைக்கூறி அடியேனது கடமையை முடிப்பதில் பெருத்த உபாகாரிகளாய் இருந்துள்ளீர்கள். இதற்கு அடியேன் உங்களுக்கு ஸன்மானங்களை ஸமர்பிக்கவேண்டும் ” என்று சாதித்து அந்த கைங்கர்யபரர்களுக்கு அவரது திருவாபரணங்களையும் சால்வையையும் தந்தார். பட்டரின் பெருந்தன்மயாகப்பட்டது அவ்வாறாக இருந்தது.
- பட்டரின் காலக்ஷேப கோஷ்டியில் பலர் எழுந்தருளியிருந்தது உண்டு. ஒருமுறை பட்டர் ஶாஸ்திரங்களைப் பெரிதும் கற்காத ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்காக காத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட படித்த பல வித்வான்கள் காரணம் கேட்க பட்டர் “அந்த ஸ்ரீவைஷ்ணவரே வித்வானாய் இல்லாமல் இருந்தும் ,உண்மை நிலையை அறிந்தவர்” என்று ஸாதித்தார். இதை மேலும் உணர்த்த திருவுள்ளம் கொண்ட பட்டர் கோஷ்டியில் ஒரு வித்வானை அழைத்து “உபாயம் எது? ” என்று கேட்டார் . அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் “ஶாஸ்திரத்தில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் உள்ளிட்ட பல உபாயங்கள் இடம் பெற்றுள்ளன “ என்று விடையளித்தார். பின் பட்டர் “உபேயம் எது ?” என்று கேட்க அந்த வித்வானும் “ஶாஸ்திரத்தில் ஐஶ்வர்யம், கைவல்யம், கைங்கர்யம் போன்ற பல உபேயங்கள் இடம் பெற்றுள்ளன ” என்று ஸாதித்தார். பட்டர் வித்வான்களாய் எழுந்தருளியிருந்தும் தெளிவு இல்லையே என்று ஸாதித்து பின் அவர் காத்துக்கொண்டிருந்த அந்த ஸ்ரீவைஷ்ணவர் வந்ததும் இதே கேள்விகளை கேட்க , அந்த ஸ்ரீவைஷ்ணவர் “எம்பெருமானே உபாயம் எம்பெருமானே உபேயம் ” என்று ஸாதித்தார். பட்டர் இதுவே ஸ்ரீவைஷ்ணவ நிட்டை என்றும் இதற்காகவே தான் காத்திருந்ததாகவும் ஸாதித்தார்.
- ஒரு முறை சோமாசியாண்டான் பட்டரிடம் தனக்கு திருவாராதன க்ரமம் கற்றுத்தர வேண்டும் என்று பிரார்த்திக்க பட்டர் தானும் மிக விஸ்தரமாகச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் ஒரு நாள் சோமாசியாண்டான் பட்டர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது பட்டர் ப்ரஸாதம் உண்ண எழுந்தருளியிருக்கும் வேளையில் தான் திருவாராதனம் செய்ய மறந்தது நினைவுக்கு வர உடனே பெருமாளை அங்கே எழுந்தருளப்பண்ணி தளிகை அமுதுசெய்வித்து பின் உடனே உண்டார். இதனைக்கண்ட சோமாசியாண்டான் ஏன் தனக்கு மிக விஸ்தரமான திருவாராதனம் என்று கேட்க பட்டர், நீர் சோமயாகம் உள்ளிட்ட பெரிய காரியங்களைச் செய்யக் கூடியவர், ஆதலால் இலகுவாக இருப்பதொன்று உமக்கு நிறைவளிக்காது , நாமோ சிறிய திருவாராதனதுக்கே உணர்ச்சிவசப்பட்டு மயக்கமுறுகிறோம், ஆதலால் தான் உமக்கு பெரிதாகச் சொல்லிக் கொடுத்தோம் என்று ஸாதித்தார்.
- ஒரு முறை திருவரங்கத்தில் உறியடி உத்சவத்தில் பட்டர் வேத பாராயண கோஷ்டியை விட்டு இடையர்களோடு சென்று நின்றார் . இதை பற்றி விசாரித்ததற்கு அந்நாள் இடையர்களுக்காக ஏற்பட்ட உத்சவ நாள் ஆன படியால் பெருமாளின் கடாக்ஷம் அவர்கள் மீதிருக்கும் என்றும் பெருமாள் கடாக்ஷம் இருக்கும் இடத்திலே நாம் இருத்தல் வேண்டும் என்றும் ஸாதித்தார் .
- ஒரு முறை திருமலை அனந்தாழ்வான் பட்டரிடம் பரமபதநாதனுக்கு இரண்டு திருத்தோள்களா அல்லது நான்கு திருத்தோள்களா என்று கேட்டார். அதற்கு பட்டர் எவ்வாறாகவும் இருக்கலாம் , இரண்டாக இருந்தால் பெரிய பெருமாளைப் போல் இருப்பார் நான்காக இருந்தால் நம்பெருமாளைப் போல் இருப்பார் என்று பதில் ஸாதித்தார் .
- அம்மணியாழ்வான் வெகுதூரத்திலிருந்து வந்து பட்டரிடம் தனக்கு இதத்தை உபதேசிக்கும்படி பிரார்த்திக்க பட்டர் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை பதிகத்தை விளக்கி, பெருமாளை அறிதல் குறைவாக அருந்துதல் என்றும் அடியார்களை அறிதல் முழுவயிற்றுப் பசிக்கு உண்ணுதல் என்றும் ஸாதித்தார் .
- பட்டரின் பெருமைகளைக் கேட்டறிந்த அரசன் ஒருவன் பட்டரிடம் வந்து பொருளாதார உதவிக்காகத் தம்மிடம் வருமாறு விண்ணபிக்க, பட்டர், நம்பெருமாளின் அபய ஹஸ்தம் (அஞ்சேல் என்றுணர்த்தும் திருக்கை) திரும்பிக்கொன்டாலும் தாம் மற்றோரிடத்தில் உதவி நாடி செல்லுவதாக இல்லை என்று ஸாதித்தார்.
- தனக்கும் ஆழ்வானுக்கும் ஆசார்யன் – ஶிஷ்யன் என்ற உறவுமுறை உள்ளதால் திருவரங்கத்தமுதனார் தன்னை பட்டரை விட உயர்ந்தவர் என்று கருத, ஒக்குமே ஆனாலும் தானே இதை சொல்லிகொள்ளுதல் கூடாது என்று ஸாதித்தார் .
- யாரோ ஒருவர் பட்டரிடம் “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திரங்களை எவ்வாறாக நடத்த வேண்டும்” என்று கேட்க பட்டர் “அக்கேள்வியே தவறானது மாற்றாக ஸ்ரீவைஷ்ணவர்களை தேவதாந்திரங்கள் எவ்வாறு நடத்தவேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கவேண்டும். ரஜோ அல்லது தமோ குணத்தால் தாங்கள் நிரம்பபெற்றிருப்பதாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாத்வீக குணம் நிரம்பப்பெற்றிருப்பதாலும் தேவதாந்திரங்களே ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கலிலே அடிமைத்தனம் பூண்டிருக்க வேண்டும்” என்று ஸாதித்தார் . இதே ஐதிஹ்யம் ஆழ்வான் விஷயத்திலும் விளக்க பட்டுள்ளது .
- பட்டரின் பெருமைகள் எல்லைகளற்றவை . பெருத்த விதுஷியாய் இருந்தும் பட்டரின் தாயாரே பட்டரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை விரும்புவார். சிலர் அவரிடம் இவ்வாறு செய்யலாமா என்று வினவ “சிற்பி சிற்பத்தை செதுக்குவதால் அது ப்ராணப்ரதிஷ்டை ஆகி இறைவன் ஆன பின் அவன் அதை வணங்கக்கூடாது என்றில்லையே? அதேபோல பட்டரும் தன் திருக்குமாரராய் இருந்தாலும் வணங்கத்தக்கவர்” என்று பதில் ஸாதிப்பார் .
- ஒரு முறை ஒரு தேவதாந்த்ரபரரின் (எம்பெருமானை தவிர வேறொருவனை பூசிப்பவன்) வஸ்திரம் பட்டர் மீது பட்டுவிட்டது. பெருத்த விஷய அறிவுடையவராய் எழுந்தருளியிருந்தும் பட்டர் தனது தாயாரிடத்தே ஓடி வந்து “என் செய்ய?” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள் அம்மங்கார் ப்ராம்ஹணர் அல்லாத ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஏற்பதே ஒரே வழி என்று ஸாதித்தார் . அப்படியாகப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரை பட்டர் கண்டறிந்து அவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ப்ரார்த்தித்தார் . முதலில் பட்டரின் பெருமையைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர் மறுத்தும் பட்டர் மிகவும் ப்ரார்த்தித்ததால் குடுத்தலானார் .
- ஒரு முறை காவேரி அருகில் ஒரு மண்டபத்தில் பட்டர் திருவாலவட்ட கைங்கர்யத்தில் இருந்தார். அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரிடம் ஸந்தியாவந்தனத்திற்கான பொழுது வந்தது என்று கூற பட்டர் தான் பெருமாளின் அந்தரங்க கைங்கர்யத்திலே இருப்பதால் சித்திரகுப்தன் இதைப் பாவக்கணக்கோடு சேர்க்கமாட்டான் என்று ஸாதித்தார் . இதே கோட்பாட்டை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் “அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்” என்று விளக்குகிறார். ஆனால் கைங்கர்யம் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக நித்யகர்மாவை விடுத்தல் ஆகாது என்று அறிதல் வேண்டும்.
- ஒரு முறை அத்யயநோத்சவத்தில் ஆண்டாள் அம்மங்கார் பட்டரிடம் த்வாதஶி பாரணை செய்ய நினைவூட்டினார். அதற்க்கு பட்டரோ “பெரிய உத்ஸவ வேளையிலே ஆரேனும் ஏகாதஶி/த்வாதஶியை நினைவு கொள்வார்களோ?” என்று கேட்டார். கருத்து யாதெனில், பகவதனுபவத்தில் இருக்கும் வேளையிலே உண்டி உள்ளிட்டவைகளை நினைவு கொள்ளுதல் ஆகாது என்பதேயாம் (மாறாக கர்த்தவ்யமான ஏகாதஶி விரதத்தை அனுட்டித்தல் அவசியமில்லை என்பதல்ல).
- பட்டர் தனது ஶிஷ்யர்களிடம் சரீரத்திலும் சரீர அலங்காரத்திலும் பற்றை விட வேண்டும் என்று ஸாதித்தார். அதற்கு அடுத்தநாளே பட்டர் பட்டு வஸ்த்ரங்கள் திருவாபரணங்கள் உள்ளிட்டவைகளை சாற்றிக்கொண்டார் . இதனை கண்ட ஶிஷ்யர்கள் பட்டரின் உபதேசமும் செயல்களும் முன்னிற்குப்பின் முரணாய் அமைந்ததை பட்டரிடம் கேட்க, பட்டர் தான் தமது திருமேனியைப் பெருமாளின் நித்யவாஸ ஸ்தலமாய் காண்பதாகவும், எவ்வாறு பெருமாள் சிறிய காலத்துக்கே எழுந்தருளும் மண்டபத்திற்கும் அலங்காரம் உண்டோ அதே போலத்தான் இதுவும் என்றும் இப்படியாகப்பட்ட அத்யவஸாயம் ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர் தனது சரீரத்தைப் பலவகையிலும் அலங்கரித்தல் ஒக்கும் என்றும் ஸாதித்தார்.
- ஆழ்வானின் ஶிஷ்யனான வீரஸுந்தர ப்ரம்மராயன் என்னும் சிற்றரசன் திருவரங்கத்தில் மதிள் எழுப்ப ஆசைப்பட்டான். அவ்வாறு செய்கையில் பிள்ளைப் பிள்ளை ஆழ்வானின் திருமாளிகைக்கு இடையூறு செய்ய தீர்மானித்தான். பட்டர் அறிவுறுத்தியும் மன்னன் கேட்காததையடுத்து பட்டர் திருவரங்கத்தை விடுத்துத் திருக்கோட்டியூருக்குச் சென்று விட்டார். அரங்கனின் பிரிவைத் தாள முடியாததால் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார். பின் மன்னன் இறந்துவிடுகிறான். இதனையடுத்து பட்டர் திருவரங்கத்திற்குத் திரும்பிவிட்டார். திரும்பும் வழியிலே பட்டர் ஸாதித்ததே ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் ஆகும் .
- ஒருமுறை சில வித்வான்களை பட்டர் வாதத்தில் தோற்கடித்தார். பட்டரை ஏமாற்ற நினைத்த அவர்கள் குடத்தில் ஓர் பாம்பை வைத்து மூடிவிட்டு இதில் என்ன இருக்கிறது என்று பட்டரிடம் கேட்டனர். அதில் பாம்பிருப்பதை அறிந்த பட்டர் “திருவெண்கொற்ற குடை இருக்கிறது ” என்று பதில் ஸாதித்தார். இதைக் கேட்டு அவ்வித்வான்கள் குழப்பம் அடைய, பொய்கை ஆழ்வார் “சென்றால் குடையாம்” பாசுரத்தில் சாதிப்பதற்கு ஒக்கும் வண்ணம் பாம்பைக் குடை என்று கூறலாம் என்று ஸமாதானம் ஸாதித்தார்.
இவற்றைப் போலவே எத்தனை முறை அனுபவித்தாலும் ஆராவமுதமாய் விளங்கும் பட்டரின் வைபவங்கள் பல உள்ளன.
ஸ்ரீரங்கநாயகியார் மீது பெரும் பற்றுடையவராய் பட்டர் எழுந்தருளியிருந்தார். நம்பெருமாளைக் காட்டிலும் நாச்சியாரிடத்திலேயே பெரும் அன்புடையவராய் பட்டர் எழுந்தருளி இருந்தார். ஒரு முறை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தைச் சாற்றிக்கொண்டு பட்டரிடம் தான் ரங்கநாயகியைப் போல் இருக்கிறாரா என்று கேட்க பட்டர் எல்லாம் பொருத்தமாக உள்ளன ஆயினும் திருக்கண்களில் தாயார் வெளிப்படுத்தும் கருணையை நும்மிடத்தே காண இயலவில்லை என்று ஸாதித்தார். ஸீதா பிராட்டியையும் சக்ரவர்த்தி திருமகனாரையும் கண்டு அனுமன், ஸீதையையே அஸிதேக்ஷணை (அதாவது அழகிய கண்கள் உடையவள்), ராமனைக்காட்டிலும் கண்களில் அழகு பெற்றவள், என்று கொண்டாடியதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஸ்ரீரங்கநாயகி மீது பட்டர் கொண்டுள்ள பக்தியின் பெருக்கே ஸ்ரீகுணரத்ன கோஶம் ஆகும் .
பட்டர் புரிதலுக்குக் கடினமாய் இருந்த பல பாசுரங்களுக்கு மிக ஆச்சர்யமான விளக்கங்களை அருளக்கூடியவர் . அவற்றில் இரண்டை நாம் இப்போது காண்போம் .
- பெரிய திருமொழியில் 7.1.1 கறவா மடநாகு பாசுரத்திற்கு விளக்கம் ஸாதிக்கையில் பிள்ளை அமுதனார் ஆழ்வார் பசுமாடு என்றும் எம்பெருமான் கன்று என்றும் ஸாதித்தார். அதாவது தாய்ப்பசு கன்றுக்கு ஏங்குவது போலவே ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் என்பதே இதன் பொருள். பட்டர் இதைச் சற்றே மாற்றி விளக்கினார். “கறவா மட நாகு தன் கன்று “ என்று சேர்த்தே கொள்ள வேண்டும் என்று பட்டர் ஸாதித்தார் . அதாவது “எப்படி கன்றாகப்பட்டது தாய் பசுவிற்கு ஏங்குமோ அதே போல ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் ” என்பதேயாம். பூர்வர்களும் பட்டரின் இந்த விளக்கத்தையே மிகவும் உகந்துள்ளனர் .
- பெரிய திருமொழியில் 4.6.6 பாசுரத்தின் வ்யாக்யானத்தில், ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மற்றுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்பாசுரத்தின் அர்த்தத்தை விளக்குமாறு பட்டரிடம் ப்ரார்த்தித்ததாக வருகிறது . பட்டரும் அவர்களை பாசுரத்தை அனுசந்திக்கச்செய்து சடக்கென்று ஆழ்வார் இராவணனின் தோரணையில் ஆழ்வார் இந்த பாசுரத்தைச் ஸாதிப்பதாக ஸாதித்தார். இராவணன் மிகவும் செருக்கோடே “மூன்று உலகங்களையும் வென்ற என்னிடம் ஒரு ஸாதாரண மானுடன் தன்னைப் பெரும் வீரனென எண்ணி போர் இடுகிறான் ” என்று நினைத்து இறுதியில் தோல்வியுற்று மாண்டதாக, பட்டர் விளக்கமருளினார் .
திருநாராயனபுரத்திற்குச் சென்று வேதாந்தியிடம் (நஞ்சீயர்) வாதம் செய்து அவரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் தரிசனத்திற்கு கொண்டு சேர்த்தது பட்டரின் பெருமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். நஞ்சீயரை திருத்திப்பணி கொள்ளவேண்டும் என்பது எம்பெருமானாரின் திவ்ய ஆணை ஆகும் . மாதவாசார்யரிடம் (நஞ்சீயரின் பூர்வாஶ்ரமப் பெயர்) சித்தாந்த வாதம் நடத்த பட்டர் வாத்ய கோஷங்கள் முழங்க, பெரிய ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியுடன் திருநாராயணபுரம் வரை பல்லக்கில் எழுந்தருளினார். செல்லும் வழியில், இவ்வாறாகப் பெருத்த விருதுகளோடே சென்றால், மாதவாசாரியாரின் ஶிஷ்யர்கள் வழியிலே தடுத்து வாதத்திற்கு அழைத்து, மாதவாசாரியாருடனான சந்திப்பை தாமதிப்பர் , என்று அறிந்த பட்டர் , மிக எளிமையான ஆடைகளை தரித்துக்கொண்டு மாதவாச்சாரியாரின் ததியாராதனக் கூடத்திற்குச் சென்றார். அங்கே பட்டர் உணவருந்தாமலேயே உட்கார்ந்திருப்பதைக் கண்ட மாதவாசாரியார் பட்டரிடம் வந்து உணவருந்தாமைக்கு காரணமும், பட்டர்க்கு வேண்டியது யாதென்றும் கேட்டார். அதற்கு பட்டர் , தான் மாதவாசாரியாரோடே வாதம் செய்ய விரும்புவதாகக் கூறினார். பட்டரைப் பற்றி முன்பே கேட்டிருந்த மாதவாசாரியார், பட்டரை விடுத்தால் தம்மை வாதத்திற்கு அழைக்கும் தைர்யம் வேறொருவருக்கு வராது என்பதால், வந்தவர் பட்டர் என்று உணர்ந்து , பட்டரோடு வாதத்தில் ஈடு பட்டார். எம்பெருமானின் பரத்துவத்தை திருநெடுந்தாண்டகத்தை வைத்து ஸ்தாபித்த பட்டர், பின் ஶாஸ்திரங்களை கொண்டு அனைத்து அர்த்தங்களையும் அளித்தார். தனது தோல்வியை ஒத்துக்கொண்ட மாதவாசாரியார் பட்டரின் திருவடித் தாமரைகளில் தஞ்சம் அடைந்து தன்னை ஶிஷ்யனாய் ஏற்கவேண்டும் என்று பிரார்த்தித்தார். பட்டர் தானும் மாதவாசாரியாரை திருத்திப்பணிகொண்டு அவருக்கு அருளிச்செயல்களையும் ஸம்பிரதாய அர்த்தங்களையும் உபதேசித்து வந்தார். பின்னர், பட்டர் மாதவாசாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு அத்யயனோத்ஸவம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னர் திருவரங்கம் சென்று சேர்ந்தார். பட்டரை வரவேற்கத் திருவரங்கத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டர் பெரியபெருமாளிடத்தே நடந்த வ்ருதாந்தங்களையும் தாம் வாதப்போரில் வென்றதையும் ஸாதித்தார். பெரியபெருமாள் திருவுள்ளம் குளிர்ந்து பட்டரிடம் திருநெடுந்தாண்டகம் ஸேவிக்க உத்தரவிட்டார். இதை முன்னிட்டு, அன்று தொட்டு இது நாள் வரை வேறெங்கும் இல்லாது திருவரங்கத்தில் மட்டும் அத்யயனோத்ஸவம் திருநெடுந்தாண்டக அனுஸந்தானத்தோடே தொடங்குகிறது.
பட்டரே ரஹஸ்ய த்ரயத்தை முதலில் க்ரந்தப்படுத்தியவர். பட்டர் ஸாதித்ததான அஷ்டஶ்லோகி திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களை, எட்டே ஶ்லோகங்களுக்குள் விளக்கும் ஒரு அறிய அருளிச்செயல் ஆகும். ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் மிகவும் கடினமான ஶாஸ்த்ரார்த்தங்களை மிக எளிமையான ஶ்லோகங்களைக்கொண்டு விளக்கியுள்ளார். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கான தனது வ்யாக்யானத்தில், ஒவ்வொரு திருநாமமும் பகவானின் ஒவ்வொரு குணத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று பட்டர் காட்டுகிறார். ஸ்ரீரங்கநாயகியார் மீது பட்டர் ஸாதித்ததான ஸ்ரீ குணரத்ன கோஶம் மற்றோரொப்பில்லாதது.
சுமார் நூறாண்டுகள் அல்லது அதற்கு மேலாக எழுந்தருளியிருந்த பூர்வாசார்யர்களைக் காட்டிலும் பட்டர் மிக குறுகியகாலமே எழுந்தருளி இருந்தார். பட்டர் இன்னும் சில காலங்கள் எழுந்தருளி இருந்திருந்தால் இங்கிருந்து பரமபதத்திற்குப் படிக்கட்டுகளைக் கட்டி இருப்பார் என்றே கூறுவர் நல்லோர். பட்டர் நஞ்சீயரை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப்பணித்தார் . மேலும் நஞ்சீயரை தர்ஶன ப்ரவர்த்தகராகவும் நியமித்தார்.
ஒரு முறை பட்டர் பெரியபெருமாள் திருமுன்பே சில பாசுரங்களையும் அதன் அர்த்தங்களையும் ஸாதிக்க , பெரிய பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு மோக்ஷம் அளித்தோம் ” என்று ஸாதிக்க பட்டரும் பேரானந்தத்தோடே “மகா பிரஸாதம்! ஆயினும் அங்கு நமக்கு நம்பெருமாளை காண இயலவில்லை எனில் , பரமபதத்திலிருந்து ஓட்டை போட்டு குதித்து திருவரங்கத்திற்கு வந்து விடுவோம்” என்று ஸாதித்தார். பட்டர் இதனை தனது தாயாரிடம் சென்று கூற, அவர் மிகவும் ஆனந்தம் அடைந்தார் . (இதுவே பூர்வர்களின் நிஷ்டையாகும். அவர்கள் வந்த காரியத்தை நன்கு அறிந்திருந்தனர்). இச்செய்தியை செவியுற்ற சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரின் பிரிவை எண்ணித் தாளாது பட்டரிடம் சென்று , “பெரியபெருமாள் ஆனந்தத்தில் அளித்தாராகில் நீர் ஏன் அதைப் பெற்றுக்கொண்டீர்? உம்மைப் பிரிந்த நாங்கள் எவ்வாறு இங்கு இருப்போம்? உம்மால் திருத்திப்பணி கொள்ளவேண்டியவர் பலரிருக்க இவ்வாறு செய்தருளியதே?” என்று கேட்டனர். அதற்கு பட்டர் , “எவ்வாறாக உயர்வகை நெய்யாகப்பட்டது நாயின் வயிற்றில் இருப்புக்கொள்ளாதோ நாமும் அவ்வாறே இருள்தருமாஞாலத்தில் இருப்புக்கொள்ளோம்” என்று ஸாதித்தார்.
அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் அழைத்து மிகச் சிறந்த விதத்தில் பட்டர் தனது திருமாளிகையில் ததியாராதனம் செய்தார். பிறகு பத்மாஸனத்திலிருந்து திருநெடுந்தாண்டகத்தை ஸாதித்துக்கொண்டே புன்முறுவல் தரித்துக்கொண்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார். அனைவரும் பட்டரின் பிரிவை தாங்கமாளாது கண்ணீர் வடித்தாலும் சரம கைங்கர்யத்தை செவ்வனே செய்துக்கொண்டிருந்தனர். ஆண்டாள் அம்மங்காரும் பட்டரின் திருமேனியை ஆரத்தழுவி விடையளித்தார்.
கல்லையும் உருக்கும் பிரபாவம் கொண்டது பட்டரின் வைபவம். எம்பெருமானாரிடத்திலும் ஆசார்யனிடத்திலும் மாறாத பற்று ஏற்பட நாமும் பட்டரின் திருவடித்தாமரைகளை சரணடைவோம் .
பட்டர் திருவடிகளே சரணம்
பட்டரின் தனியன்:
ஸ்ரீ பராஶர பட்டார்ய: ஸ்ரீரங்கேஶ புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே ||
பட்டரின் வாழி திருநாமம்:
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே
அடியேன் ராமானுஜ தாஸன்
எச்சூர் ஸ்ரீநிவாஸன்
ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2012/09/11/parasara-bhattar-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Mun Piravip Payanai Ippiravil Anubavikkaum Paggia Sali – Thangal Sriman Narayananin Poorna Anugraham Pettravargal yenbathu Unglathu Bhagavath Thonde Sakshi. Namm Kula Aacharyangal Varalaru Migavum Nandraga Irundadu mattumallathu Aacharyankalai Namakku neril Asirvatham Seivathu Pondru Ullathu. Thandam Panindu Adiyen Dasan Sathyakootathan Srinivasan, Srirangam.