எம்பெருமானார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://acharyas.koyil.org/index.php/2015/07/14/periya-nambi-tamil/) பெரிய நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

தானான திருமேனி (ஸ்ரீரங்கம்) தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்) தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)

திருநக்ஷத்ரம்: சித்திரை, திருவாதிரை

அவதார ஸ்தலம்: ஸ்ரீபெரும்பூதூர்

ஆசார்யன்: பெரிய நம்பி

ஶிஷ்யர்கள்: கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 ஸிம்ஹாஶனாதிபதிகள், 700 ஸந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் ஶிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கு ஶிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

எம்பெருமானார் அருளிச்செய்தவை: நவரத்தினங்களாகக் கருதப்பட்ட ஒன்பது (9) க்ரந்தங்களை அருளிச்செய்தார். அவை ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், ஶரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம்.

இளையாழ்வார் கேஶவ தீக்ஷிதர் மற்றும் காந்திமதி அம்மங்காருக்கு, ஆதிஶேஷனுடைய அபராவதாரமாக ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தார். இவருக்குப் பல திருநாமங்கள் உண்டு. மேலே அவருடைய திருநாமத்தையும், யார் அதைக் கொடுத்தார்கள் என்றும் பார்ப்போம்.

  • இளையாழ்வார் என்ற திருநாமத்தை அவருடைய பெற்றோர்கள் சார்பில் பெரிய திருமலை நம்பி சூட்டினார்.
  • ஸ்ரீராமானுஜ என்ற திருநாமத்தை பஞ்ச  ஸம்ஸ்காரத்தின் போது பெரிய நம்பி சூட்டினார்.
  • யதிராஜ மற்றும் ராமானுஜ முனி என்ற திருநாமத்தை ஸன்யாஸாஶ்ரம ஸ்வீகாரத்தின் போது தேவப்பெருமாள் சூட்டினார்.
  • உடையவர் என்ற திருநாமத்தை நம்பெருமாள் சூட்டினார்.
  • லக்ஷ்மண முனி என்ற திருநாமத்தை திருவரங்கப் பெருமாள் அரையர் சூட்டினார்.
  • திருக்கோஷ்டியூரில் எம்பெருமானார் சரமஶ்லோக அர்த்தத்தை ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியபொழுது, திருக்கோஷ்டியூர் நம்பி “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை சூட்டினார்.
  • ஶடகோபன் பொன்னடி என்ற திருநாமத்தை திருமாலை ஆண்டான் சூட்டினார்.
  • எம்பெருமானார் 100 தடா வெண்ணை மற்றும் 100 தடா அக்கார அடிசில் திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்பித்தவுடன், “கோயில் அண்ணன்” என்ற திருநாமத்தை ஆண்டாள் சூட்டினாள்.
  • ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற திருநாமத்தை ஸரஸ்வதி காஷ்மீரில் சூட்டினாள்.
  • பூதபுரீஶர் என்ற திருநாமத்தை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியிருக்கும் ஆதி கேஶவ பெருமாள் சூட்டினார்.
  • தேஶிகேந்த்திரர் என்ற திருநாமத்தை திருவேங்கடமுடையான் சூட்டினார்.

சுருக்கமான வாழ்க்கை வரலாறு

  • திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி எம்பெருமான் பேரருளினால், அவருடைய அம்ஶாவதாரமாக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

உபய நாச்சிமர்களுடன் பார்த்தசாரதி மற்றும் உடையவர் – திருவல்லிக்கேணி

  • தஞ்சம்மாள் (ரக்ஷகாம்பாள்) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
  • ஸாமான்ய ஶாஸ்திரம் மற்றும் பூர்வ பக்ஷம் காஞ்சிபுரத்திற்குச் சென்று யாதவ ப்ரகாஶரிடம் கற்றுக்கொண்டார்.
  • யாதவ ப்ரகாஶர் தவறாக ஶாஸ்திர வ்யாக்யனங்களை கூறும்பொழுது அதை இளையாழ்வார் திருத்துவார்.
  • வாரணாஸிக்கு யாத்திரை செல்லும்பொழுது, யாதவ ப்ரகாஶருடைய சீடர்கள் சிலர் இளையாழ்வரை கொல்லவேண்டும் என்று திட்டம் செய்தனர். கோவிந்தர் (எதிர்காலத்தில் எம்பார்), இளையாழ்வருடைய திருத்தம்பியார், இந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று இளையாழ்வரை காஞ்சிபுரம் வழியில் அனுப்பிவைத்தார். இளையாழ்வர் காட்டில் வழி தெரியாமல் இருக்கும்பொழுது, தேவப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் வேடன் வேடுவச்சி உருவத்தில் வந்து அவரைக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
  • அவர் காஞ்சிபுரம் வந்தவுடன், திருக்கச்சி நம்பியின் வழிகாட்டலின் படி தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார்.
  • ஆளவந்தாரை  ஸேவிப்பதற்காக இளையாழ்வார் பெரிய நம்பியுடன் ஸ்ரீரங்கம் வந்தார். ஆனால் ஆளவந்தாருடைய சரம திருமேனியை மட்டுமே அவரால் பார்க்கமுடிந்தது. அவர் ஆளவந்தாருடைய 3 ஆசைகளை நிறைவேற்றுவதாக ஶபதம் பூண்டார்.
  • இளையாழ்வார் திருக்கச்சி நம்பியை தனது ஆசார்யனாகக் கருதி அவரை பஞ்சஸம்ஸ்காரம் செய்யச் சொன்னார், ஆனால் திருக்கச்சி நம்பி ஶாஸ்திரத்தை ப்ரமாணமாக காட்டி மறுத்துவிட்டார். இளையாழ்வார் திருக்கச்சி நம்பியினுடைய ஶேஷ ப்ரஸாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.
  • தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தைகளை இளையாழ்வாருக்குக் கொடுத்தார்.
  • இளையாழ்வாரும் பெரிய நம்பியும் மதுராந்தகத்தில் சந்தித்தார்கள். பெரிய நம்பி அவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து, ராமானுஜன் என்ற தாஸ்ய நாமத்தையும் கொடுத்தார்.
  • பெரிய நம்பி ராமானுஜருடைய திருமாளிகையிலையே இருந்து அவருக்கு ஸம்ப்ரதாய அர்த்தங்களை கற்றுக்கொடுத்தார். ஒரு ஸமயத்தில் பெரிய நம்பி ஸ்ரீரங்கதிற்குத் திரும்பி விடுகிறார்.
  • ராமானுஜர் தேவப்பெருமாளிடமிருந்து ஸன்யாஸாஶ்ரமத்தை ஏற்றுக்கொண்டார்.
  • ஆழ்வானும், ஆண்டானும் ராமானுஜருக்கு ஶிஷ்யர்களானார்கள்.
  • யாதவ ப்ரகாஶர் ராமானுஜருக்கு ஶிஷ்யரானார். அவருக்கு கோவிந்த ஜீயர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அவர் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற க்ரந்தத்தை இயற்றினார். அந்த க்ரந்தம் தான் ஸ்ரீவைஷ்ணவ யதிகளுக்கு வழிகாட்டுதலாக உள்ளது.
  • பெரிய பெருமாள், திருவரங்கப் பெருமாள் அரையரை தேவப்பெருமாளிடம் அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வரச்சொன்னார். தேவப்பெருமாளும் அதற்கு இசைந்து ராமானுஜரை அனுப்பினார். பிறகு ராமானுஜரும் ஸ்ரீரங்கவாஸியானார்.
  • ராமானுஜர் பெரிய திருமலை நம்பி மூலம் கோவிந்த பட்டரை (எம்பார்) திருத்திப்பணிகொண்டு மீண்டும் ஸ்ரீவைஷ்ணவ தர்மத்திற்கு அழைத்து வந்தார்.
  • ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தை கற்றுக் கொள்வதற்காக திருக்கோஷ்டியுருக்குச் சென்றார். ஆசையுடையோர்க்கெல்லாம் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்தார். அதனால் திருக்கோஷ்டியூர் நம்பி அவருக்கு எம்பெருமானார் என்ற திருநாமத்தை சூட்டினார்.
  • எம்பெருமானார் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டார்.
  • எம்பெருமானார் பஞ்சமோபாய (ஆசார்ய) நிஷ்டையை திருவரங்க பெருமாள் அரையரிடம் கற்றுக்கொண்டார்.
  • எம்பெருமானார் தன்னுடைய பரம க்ருபையினால் தன்னை பின்பற்றுபவர்கள் உஜ்ஜீவனத்திற்காக, பங்குனி உத்திர நன்னாளன்று நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்க நாச்சியார் திருமுன்பு ஶரணாகதி அனுஷ்டித்தார்.
  • எம்பெருமானாருக்கு விஷம் கலந்த உணவை சிலர் கொடுத்தார்கள். இதைக் கேட்டவுடன் திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்து கிடாம்பி ஆச்சானை எம்பெருமானாருடைய பிக்ஷைக்காக நியமித்தார்.
  • யஞ்ய மூர்த்தியை எம்பெருமானார் வாதத்தில் வென்றார். யஞ்ய மூர்த்தி அருளாளப் பெருமாள் எம்பெருமானாராக மாறினார். அவருக்குத் தன் திருவாராதன எம்பெருமானுக்கு திருவாராதனம் பண்ணும் கைங்கர்யத்தை எம்பெருமானார் நியமித்தார்.
  • எம்பெருமானார் அனந்தாழ்வன் மற்றும் பலரை அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஶ்ரயிக்குமாறு கட்டளையிட்டார்.
  • எம்பெருமானார் அனந்தாழ்வனைத் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவதற்காகத் திருமலைக்கு அனுப்பினார்.
  • இறுதியில் புனித யாத்திரையாக எம்பெருமானார் திருமலைக்குச் சென்றார்.
  • திருவேங்கடமுடயான் விஷ்ணு மூர்த்தி (விக்ரஹம்) என்று எம்பெருமானார் நிரூபித்து, இல்லை என்று கூறிய சில குத்ருஷ்டிகளை வென்றார். திருவேங்கடமுடயானுக்கு ஆசார்யன் என்ற புகழையும் பெற்றார். அதனால் இன்றும் திருமலையில் ஞான முத்திரையில் ஸேவை சாதிக்கிறார்.

எம்பெருமானார் – திருமலை

  • திருமலையில் பெரிய திருமலை நம்பியிடம் ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார்.
  • கோவிந்த பட்டருக்கு எம்பெருமானார் ஸன்யாஸாஶ்ரமத்தைக் கொடுத்து எம்பார் என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
  • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை கொண்டு வருவதற்காக எம்பெருமானார் காஷ்மீருக்கு கூரத்தாழ்வானுடன் சென்றார். அந்த க்ரந்தம் கிடைத்தது – ஆனால் துஷ்ட பண்டிதர்கள் அவர்களுடைய வீரர்களை அனுப்பி அதை எம்பெருமானாரிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர். அதை இழந்தபொழுது, அனைத்தையும் மனப்பாடம் செய்து விட்டதாக ஆழ்வான் கூறினார்.
  • ஆழ்வானுடைய உதவியினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்து ஆளவந்தாருடைய முதல் ஆசையை நிறைவேற்றினார்.
  • திருக்குறுங்குடிக்கு எம்பெருமானார் எழுந்தருளினார். திருக்குறுங்குடி எம்பெருமான், எம்பெருமானாருக்கு ஶிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தையும் பெற்றார்.

  • நம்பெருமாள் ப்ரஸாதத்தின் மூலம் ஆழ்வானும் ஆண்டாளும் 2 குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். எம்பெருமானார் அந்த குழந்தைகளுக்கு பராஶர மற்றும் வேத வ்யாஶ என்ற திருநாமத்தைச் சூட்டி ஆளவந்தாருடைய இரண்டாவது ஆசையை நிறைவேற்றினார்.
  • எம்பாருடைய திருத்தம்பியார் சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எம்பெருமானார் அந்த குழந்தைக்குப் “பராங்குஶ நம்பி” என்ற திருநாமத்தை இட்டு ஆளவந்தாருடைய மூன்றாவது ஆசையையும் நிறைவேற்றினார். எம்பெருமானார் திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழி வ்யாக்யானம் இயற்றச்சொல்லி நியமித்து ஆளவந்தாருடைய மூன்றாவது ஆசையையும் நிறைவேற்றினார் என்றும் சிலர் சொல்வர்.
  • எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் சென்று, ஒரு கோயிலை ஏற்படுத்தி பலரை நமது ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்தினார்.
  • எம்பெருமானார் 1000 முகம் கொண்ட ஆதிஶேஷன் உருவத்தை எடுத்துக்கொண்டு, ஒரே ஸமயத்தில் 1000 சமண மதத்து அறிஞர்களை வென்றார்.
  • செல்வப்பிள்ளை உத்ஸவ மூர்த்தியை துலுக்க ராஜாவினுடைய பெண்ணிடமிருந்து எம்பெருமானார் மீட்டு, அந்த பெண்ணுடன் செல்வப்பிள்ளைக்கு திருமணம் செய்துவைத்தார்.
  • ஶைவ ராஜா இறந்தவுடன் எம்பெருமானார் ஸ்ரீரங்கத்திற்க்கு மீண்டும் எழுந்தருளினார். தேவப் பெருமாளை புகழ்ந்து கண்களை பெற்றுக்கொள்ளுமாறு ஆழ்வானுக்கு எம்பெருமானார் கட்டளையிட்டார்.
  • ஆண்டாளின் ஆசைக்கிணங்க எம்பெருமானார் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அழகருக்கு 100 தடா அக்கார அடிசில் மற்றும் 100 தடா வெண்ணை சமர்ப்பித்தார்.
  • பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மேன்மையை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானார் காட்டினார்.
  • இறுதியில் எம்பெருமானார் தன்னுடைய ஶிஷ்யர்களுக்குப் பல உபதேஶங்களைக் கூறினார். பராஶர பட்டரைத் தாமாகவே நினைத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார். நஞ்ஜீயரைத் திருத்திப்பணிகொண்டு நமது ஸம்ப்ரதாயத்திற்கு அழைத்துவருமாறு பராஶர பட்டருக்குக் கட்டளையிட்டார்.
  • பின்பு ஆளவந்தாருடைய திருமேனியை த்யாநித்துக் கொண்டே, எம்பெருமானார் இந்த லீலா விபூதியில் தன்னுடைய லீலையை முடித்துக்கோண்டு பரமதத்திற்கு எழுந்தருளித் தன்னுடைய லீலையை நித்ய விபூதியில் நடத்திக் கொண்டு போனார்.
  • எப்படி ஆழ்வாருடைய சரம திருமேனியை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதன் கோயிலில் பாதுகாக்கபட்டு வருகிறதோ, அதே போல் எம்பெருமானாருடைய சரம திருமேனியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதன் கோயிலில் (எம்பெருமானார் சன்னிதியில் மூலவர் திருமேனிக்குக் கீழ்) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • அவருடைய அனைத்துச் சரம கைங்கர்யங்களும் திருவரங்கநாதனுடைய ப்ரஹ்மோத்ஸவம் போல் மிக நன்றாக நடந்தது.

நமது ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருடைய தனித்துவம்

நமது ஆசார்ய ரத்ன ஹாரத்தில் எம்பெருமானார் நாயக மணியாக (நடு நாயகமாக) கருதப்படுகிறார். சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் நாயனார் ஆச்சான் பிள்ளை (பெரியவாச்சான் பிள்ளையுடைய திருக்குமாரர்) எம்பெருமானாருடைய அனைத்து பெருமைகளையும் கூறியுள்ளார். மிகச் சிறப்பு வாய்ந்த இந்த க்ரந்தத்தில் உள்ள சில துளிகளை இப்பொழுது அனுபவிப்போம்.

  • பல ஆசார்யர்கள் (எம்பெருமானாருக்கு முன்னும் பின்னும்) இருந்தாலும், எம்பெருமானார் மட்டுமே அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் சரமோபாயம் என்பது நிரூபிக்கப்பட்டது.
  • நமது பூர்வாசார்யர்கள் தங்கள் தங்கள் ஆசார்யர்களைச் சார்ந்திருந்தாலும், அனைவருடைய ஆசார்யர்களும் “நாம் அனைவரும் எம்பெருமானாரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்” என்று காட்டினார்கள் –  இங்கே எம்பெருமானாருடைய உத்தாரகத்வமும் நிறுவப்பட்டது.
  • பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்ய ஸ்தானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, எம்பெருமானார் மட்டுமே அந்த ஸ்தானத்திற்குத் தகுதியானவர்” என்று மாணிக்க மாலையில் கூறினார்.
  • எம்பெருமானாருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் அனைவரும் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர்கள், அதாவது ஒருவன் தொடர்ந்து கைங்கர்யம் செய்துகொண்டே வரவேண்டும், அதில் ஆசார்யர்கள் மகிழ்ந்து மதிப்பு வாய்ந்த அறிவுரைகளை அவனுக்குக் கூறி ஶிஷ்யனாக ஏற்பார்கள். ஆனால் எம்பெருமானார், இந்த கலியுகத்தில் உள்ள கஷ்டங்களைப் பார்த்து, ஆசார்யர்கள் அனைவரும் க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யர்களாக இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டினார், அதாவது ஆசார்யர்கள் க்ருபையினால் நிறைந்திருக்கவேண்டும், அதோடு ஶிஷ்யனுடைய இதயத்தில் இருக்கும் ஆசையை வைத்தே ஶிஷ்யனை ஏற்கவேண்டும் என்று காட்டினார்.
  • எப்படி பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்கள் தங்களுடைய குடும்பத்தில் இருக்கும் ஸத்ஸந்தானத்தினால் (நல்ல குழந்தையினால்) பயனடைவார்களோ அதே போல் அவனுக்கு பின் உள்ள ஸந்ததியினரும் பயனடைவார்கள். ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் எம்பெருமானார் அவதரித்ததால் எம்பெருமானாருக்கு முன்னும் பின்னும் உள்ள ஆசார்யர்யர்கள் பயனடைவார்கள். எப்படி வஸுதேவன்/தேவகி, நந்தகோபன்/யஶோதா மற்றும் தஶரதன்/கௌஸல்யா கண்ணன் எம்பெருமான் மற்றும் பெருமாளைப் பெற்றெடுத்து, பேற்றைப் பெற்றார்களோ அதே போல் எம்பெருமானார் ப்ரபன்ன குலத்தில் அவதரித்ததால் எம்பெருமானாருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் பேற்றைப் பெற்றார்கள்.
  • எம்பெருமானாருடைய பெருமையை/அவதாரத்தை “பொலிக பொலிக பொலிக” பதிகத்தில் நம்மாழ்வார் காட்டியுள்ளார். அதோடு பவிஷ்யதாசார்யன் (எம்பெருமானார்) விக்ரஹத்தையும் எம்பெருமானார் அவதரிப்பதற்கு முன்பே நாதமுனிகளுக்குக் கொடுத்தார் (முன்னதாக நம்மாழ்வாரின் அருளால் மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி ஆற்றின் நீரைக் காய்ச்சி அதிலிருந்து ஒரு பவிஷ்யதாசார்ய விக்ரஹம் வரப் பெற்றார்).

பவிஷ்யதாசார்யன் – ஆழ்வார்திருநகரி

  • இந்தத் திருமேனியை  நாதமுனிகள் முதல் திருக்கோட்டியூர் நம்பி வரை பாதுகாத்துத் திருவாராதனம் செய்து போனார்கள். (தாமிரபரணி நீரைக் காய்ச்சிப் பெற்ற திருமேனியை திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பவிஷ்யதாசார்யன் சன்னிதியில் திருவாரதனம் செய்தார்கள்).
  • எப்படிப் பெருமாள் ரகு குலத்தில் அவதரித்து அந்தக் குலத்தைப் பெருமை மிக்கதாக மாற்றினாரோ, எம்பெருமானாரும் ப்ரபன்ன குலத்தில் அவதரித்து இந்த குலத்தை பெருமை மிக்கதாக மாற்றினார் என்று பெரிய நம்பி கூறினார்.
  • “எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று நினைக்கவேண்டும் அதோடு எம்பெருமானாரை எனக்கும் மேலான ஆசார்யனாக நினைக்கவேண்டும்” என்று பெரிய திருமலை நம்பி எம்பாரிடம் கூறினார்.
  • “எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தினால், தான் பாக்யசாலி” என்று திருக்கோஷ்டியூர் நம்பி தனது கடைசி காலத்தில் கூறினார். மேலும் திருமாலை ஆண்டான் எம்பெருமானாரைப்பற்றித் தவறாகப் புரிந்துகொண்டபோது, “எம்பெருமானாருக்கு நாம் எதுவும் புதிதாக கற்றுக்கொடுக்கப் போவதில்லை, ஏற்கனவே அவர் ஸர்வஜ்ஞர். எப்படி கண்ணன் எம்பெருமான் ஸாந்தீபனியிடம் கற்றுக்கொண்டரோ, பெருமாள் வஸிஷ்டரிடம் கற்றுக்கொண்டரோ, எம்பெருமானார் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்” என்று திருக்கோஷ்டியூர் நம்பி கூறினார்.
  • பேரருளாளன், பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், திருமாலிருஞ்சோலை அழகர், திருக்குறுங்குடி நம்பி மற்றும் பலர் எம்பெருமானாருடைய முக்கியத்துவத்தையும் / பெருமையையும் காட்டி, அனைவரையும் எம்பெருமானாரையே சார்ந்திருக்குமாறு கட்டளையிட்டார்கள்.
  • அருளாளப் பெருமாள் எம்பெருமானார், ஆழ்வான், ஆண்டான், எம்பார், வடுக நம்பி, வங்கிப் புரத்து நம்பி, பட்டர், நடாதூர் அம்மாள், நஞ்ஜீயர், நம்பிள்ளை மற்றும் பல ஆசார்யர்கள் “நாம் அனைவரும் எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கவேண்டும்” என்று தமது சிஷ்யர்களுக்குக் காட்டினார்கள்.
  • எம்பெருமானாரையே நாம் உபாயமாகவும் உபேயமாகவும் நினைக்க வேண்டும் என்று நமது பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளார்கள். இது தான் சரமோபாய நிஷ்டை அல்லது அந்திமோபாய நிஷ்டை.
  • கூரத்தாழ்வானால் திருத்திப் கொள்ளப்பட்ட பிறகு திருவரங்கத்தமுதனாருக்கு எம்பெருமானார் மீது மிகுந்த பற்றுதல் உண்டானது. அந்த உணர்வைத் தன்னுடைய ப்ரபந்தத்தில் “இராமானுச நூற்றந்தாதியில்” காட்டியுள்ளார். எம்பெருமானாருக்குப் பொருத்தமான பெருமையை கூறும் இந்த ப்ரபந்தத்தை, அவர் திருவரங்கத்தில் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே, நம்பெருமாளின் ஆணைக்கிணங்க அவர் புறப்பாட்டில் வாத்யங்கள் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸேவித்தார்கள். நமது பூர்வாசார்யர்கள் எம்பெருமானாருடைய பெருமை மற்றும் நமது ஸம்ப்ரதாயதிற்காக அவர் செய்ததையும் கருதி இந்த ப்ரபந்தத்தை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் ஒரு பகுதியாகச் சேர்த்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ப்ரபந்தம் ப்ரபன்ன காயத்ரி என்று அழைக்கப்பட்டது, இதை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் ஒருநாளில் ஒருமுறையாவது கூறவேண்டும்.

எம்பெருமானார் தரிஶனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்” என்று மணவாள மாமுனிகள் உபதேஶ ரத்தின மாலையில் காட்டியுள்ளார். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அனைவரும் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர்கள். ஒருவன் உண்மையாக நீண்ட காலம் தனக்குக் கைங்கர்யம் செய்து வந்தால் மட்டுமே அவனுக்கு சம்ப்ரதாய விஷயங்களைக் கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் எம்பெருமானார் அந்தப் பழக்கத்தை மாற்றி, இந்த கலியுகத்தில் உள்ள ஆசார்யர்கள் அனைவருக்கும் கருணையே நிறைந்திருக்க வேண்டும் என்று காட்டினார். இந்த ஸம்ஸாரத்தில் உள்ள கஷ்டங்களைப் பார்த்து, எவன் ஒருவனுக்கு இந்த ஸம்ஸாரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளதோ, அவனுக்கு ஸம்ஸாரத்தை விட்டுச்செல்லும் வழியை கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறினார். எம்பெருமானார் மட்டுமல்லாமல், அவர் 74 ஸிம்ஹாஶனாதிபதிகளை நியமித்து ஸநாதன தர்மத்தை உலகெங்கும் பரப்பிக் கருணையைக் காட்டச்சொன்னார்.

எம்பெருமான் வைபவத்தைச் சொல்லி முடித்து விடலாம் ஆனால் எம்பெருமானார் வைபவத்தைச் சொல்லி முடிக்கவே முடியாது. ஏன் எம்பெருமானார் தன்னுடைய 1000 நாவினால் (ஆதிஶேஷனாக) கூடத் தன் பெருமையைக் கூறி முடிக்க முடியாது. பிறகு எப்படி நமது முழுமையான திருப்திக்கு இதைக் கூறி முடிக்க முடியும்? நாம் இன்று அவருடைய வைபவத்தைப் பற்றி “வாசித்தும், கேட்டும், வணங்கி வழிபட்டோம்” என்று நினைத்து நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்ள வேண்டியது தான்.

எம்பெருமானாரின் தனியன்:

யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

எம்பார் அருளிய எம்பெருமானார் வடிவழகு பாசுரம்:

பற்பம் எனத் திகழ் பைங்கழலுந்தண் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!

மேலே, அடுத்த ஆசார்யரான எம்பார் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2012/09/06/emperumanar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org