திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி     

அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர்

ஆசார்யன் : ஆளவந்தார்

சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்)

பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.

ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுள் 5 பிரதானமான ஶிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு ஸம்பிரதாயத்தில் உள்ள ஸகல அர்த்த விஶேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரமஶ்லோகம்) அர்த்த விஶேஷங்களைக் கற்றுகொடுக்குமாறு திருக்கோஷ்டியூர் நம்பியை நியமித்தார். 

ஸ்ரீ ராமானுஜர் தன் நலம் கருதாமல், சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியதால் திருக்கோஷ்டியூர் நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். நம்பி தன் ஆசார்யரான ஆளவந்தாரிடம் கற்றுகொண்ட ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகம்) அர்த்த விஶேஷங்களையே எப்பொழுதும் த்யானித்துக்கொண்டே இருப்பதால் யாரிடமும் இவர் பேசாமல் இருந்தார். திருக்கோஷ்டியூரில் வசிக்கும் ஒருவருக்கும் இவருடைய பெருமைகள் தெரியாது. ஸ்ரீ ராமானுஜருக்கு இவருடைய பெருமைகள் தெரிந்ததால், அவர் மிகவும் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே சென்றார். கடைசியில் 18வது முறை நம்பி அவருக்கு சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இந்த அர்த்த விஶேஷத்தைக் கூறக்கூடாது என்று ஸத்தியம் செய்யுமாறு நம்பி ராமானுஜரிடம் கேட்டார். ராமானுஜரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஸத்தியம் செய்தார்.  நம்பி மிகவும் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரம ஶ்லோகம் என்னவென்றால், கீதாசர்யன்  ஸாதித்த “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” ஶ்லோகம் (கீதை 18.66). இந்த ஶ்லோகத்தில் முக்கியமான அர்த்த விஶேஷத்தைக் கூறும் வார்த்தை “ஏகம்” – பகவான் மட்டுமே உபாயம் என்பதே இந்த வார்த்தைக்கு அர்த்தம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் மற்றும் நாம் செய்யும் ப்ரபத்தி (சரணாகதி), மற்றும் பல – இவை அனைத்துமே உண்மையான உபாயம் அல்ல. இந்த ரஹஸ்யார்த்தத்தை தகுதி இல்லாதவர்களிடம் கூறினால், தான் செய்யவேண்டிய கர்மத்தை  அல்லது கடமைகளைக் கூடச் செய்யாமல் இருக்கலாம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் ராமானுஜருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் இந்த அர்த்த விஶேஷத்தை மிகவும் அக்கறை கொண்டு பாதுகாத்து வந்தார்கள். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொண்ட பிறகு, இந்த ரஹஸ்யார்த்தத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடைவர்களை உடனே அழைத்து, அந்த அர்த்தத்தை மிகவும் விளக்கமாகக் கூறினார். ராமானுஜர் அர்த்த விஶேஷத்தை வெளியிட்டதை நம்பி கேள்விப்பட்டவுடன், தன்னைச் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார். ராமானுஜரும் நம்பி திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜர் செய்ததை கேட்டறிந்தார், ராமானுஜரும் அதற்கு நம்பியினுடைய நியமனத்தை தான் மீறினதாக ஒப்புக்கொண்டார். நம்பி “ஏன் இப்படி செய்தீர்?” என்று கேட்டபோது, ராமானுஜர் “தேவரீருடைய ஆணையை மீறியதால் அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு (சரம் ஶ்லோகார்த்தத்தைக் கற்றவர்களுக்கு) மிக உயர்ந்த மோக்ஷம் (பரமபதம்) கிடைக்குமல்லவா” என்று கூறினார். மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று க்ருபையோடு இருக்கும் ராமானுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்து நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற விஶேஷமான திருநாமத்தை சூடினார். எம்பெருமான் என்றால் பகவான் என்று பொருள், எம்பெருமானார் என்றால் அந்த பகவானைக் காட்டிலும் மிக அதிகமாகக்  கருணை உடையவர் என்று பொருள். இப்படி சரம ஶ்லோகத்தினுடைய முக்கியமான அர்த்த விஶேஷங்களைத் திருக்கோஷ்டியூரில் கூறியதால் ராமானுஜர் எம்பெருமானாராக ஆனார். இந்த சரித்திரம் மணவாள மாமுனிகளுடைய முமூக்ஷுப்படி வ்யாக்யானத்தில் உள்ள சரம ஶ்லோக ப்ரகரணத்தின் அவதாரிகையில் மிகவும் தெளிவாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பு : 6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், ராமானுஜர் திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொண்டதாகவும், அதை அவர் வெளியிட்டதால் அவருக்கு நம்பி “எம்பெருமானார்” என்று திருநாமத்தைச் சூட்டியதாகவும் உள்ளது. ஆனால் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தை தான் ராமானுஜர் வெளியிட்டார் என்று மாமுனிகள் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் சரம ஶ்லோகத்தில் உள்ள “ஏகம்” என்ற ஶப்தமே மிகவும் ரஹஸ்யமான அர்த்த விஶேஷம் என்று வ்யாக்யானத்தில் பல இடத்தில் கூறியிருள்ளதும், இந்தச் சம்பவமும் பொருந்துகிறபடியால் நாம் மாமுனிகளின் விளக்கத்தை முக்கியப் ப்ரமாணமாகக் கொள்வோம் என்று கற்றறிந்த பல பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.

நம்பியினுடைய வைபவம் வயாக்யானங்களில் பல இடங்களில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. அதிலே சிலவற்றை நாம் கீழே அனுபவிப்போம்.

  • நாச்சியார் திருமொழி – 12.2 பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம்
    • இங்கே நம்பியுடன் ஆண்டாளை ஒப்பிடுகிறார். எப்படி நம்பி தன்னுடைய பகவத் அனுபவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமாட்டரோ, அதே போல் ஆண்டாளும் தான் எம்பெருமானுடன் பிரிந்த வருத்தத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படமாட்டாள் என்று பெரியவாச்சான் பிள்ளை கூறியுள்ளார்.
    • ஸ்ரீராமானுஜர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளுவதற்கு முன்பு வரை, நம்பியினுடைய வைபவம் அந்த ஊரில் வசிக்கும் ஒருவருக்கு கூடத் தெரியாது. ராமானுஜர் அந்த ஊருக்கு வந்தவுடன், திருக்குருகைப்பிரானுடைய (நம்பியினுடைய திருநாமம் – நம்மாழ்வாருடைய திருநாமம்) திருமாளிகை எங்கு உள்ளது என்று அந்த ஊரில் இருக்கும் சிலரிடம் கேட்டார். அவர்கள் எந்தத் திசையில் உள்ளது என்று காட்டியவுடன், ராமானுஜர் அவர் நின்ற இடத்திலிருந்தே அந்த திசையை நோக்கி ஸேவித்துக்கொண்டே நம்பியினுடைய திருமாளிகையை அடைந்தார். இப்படித் தான் நம்பி மீது வைத்திருக்கும் மதிப்பை புகழ்ந்து பேசிக் காட்டாமல் செய்து காட்டினார். இதைப் பார்த்த பிறகு தான் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நம்பியினுடைய பெருமை புரிந்தது.
    • நமது ஸம்பிரதாயத்தில் உள்ள முக்கியமான அர்த்த விஶேஷத்தை கற்றுக் கொள்வதற்காக முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் ஆறு மாத காலம் நம்பியினுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்தார்கள் என்பதை வ்யாக்யானங்களில் சிறப்பாகக் காட்டியுள்ளனர்.
  • திருவிருத்தம் – 10வது பாசுரம் – நம்பிள்ளை ஸ்வாபதேசம். ஒவ்வொரு முறை நம்பி ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டுச் செல்லும் பொதும், எம்பெருமானார் வழியனுப்புவதற்காக அவருடன் மாராச்சிப்புரம் (ஸ்ரீரங்கம் அருகாமையில் இருக்கும் ஒரு இடம்) என்ற இடம் வரை நடந்து செல்வார். அந்தச் சமயத்தில் எம்பெருமானார் நம்பியிடம் “எப்பொழுதும் அடியேன் எதைத் த்யானம் செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு நம்பி “ஆளவந்தார் காவிரியில் தீர்த்தமாடும் ஸமயத்தில் அவர் உள்ளே மூழ்கும் பொழுது, அவருடைய திருமுதுகைப் பார்க்கும் போது, கூர்மாஸனத்தின் முதுகு போல் இருக்கும் (அமையின் ஓடு போல் இருக்கும் ஒரு இருக்கை). ஆளவந்தார் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகும் எப்பொழுதும் ஆளவந்தாருடைய திருமுதுகின் அழகை நான் பார்த்ததைச் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். நீரும் அதையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிரும்” என்று கூறினார். இந்த நிகழ்வின் மூலம் நம்பி ஒரு ஶிஷ்யன் எப்படித் தன்னுடைய ஆசார்யனுடைய நுண்ணறிவின் மீதும், கட்டளையின் மீதும் பற்று வைத்துள்ளானோ அதே போல் அவருடைய திருமேனி (சீர்வடிவு) மீதும் உண்மையான பற்று வைக்க வேண்டும் என்று காட்டுகிறார்.
  • திருவிருத்தம் 99 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம், ஞானப்பிரான் மட்டுமே உபாயம் என்று ஆழ்வார் கூறுகிறார். இந்த பாசுரமே சரம ஶ்லோகத்தில் இருக்கும் “ஏகம்” என்ற ஶப்தத்தினுடைய அர்த்தத்தை விவரிக்கிறது, அதாவது அனைத்து உபாயங்களையும் நீக்கி விட்டு, எம்பெருமான் மட்டுமே உபாயம் என்று நிர்ணயம் செய்து காட்டும் பாசுரம். நமது ஸம்பிரதாயத்தில் இந்த ஶப்தத்தினுடைய அர்த்தமே மிகவும் ரஹஸ்யமானது, இந்த ஶப்தத்தினுடைய அர்த்தத்தைத் தான் திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜருக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு முறை ஸ்ரீரங்கத்திற்கு உற்சவத்திற்காக எழுந்தருளிய நம்பி, எம்பெருமானரை அழைத்துக்கொண்டு பெரிய பெருமாள் ஸன்னதியில் யாருமே இல்லாத இடத்திற்கு சென்று அவருக்கு “ஏகம்” ஶப்தத்தினுடைய அர்த்தத்தை விரிவாகக் கூற ஆரம்பித்தார். ஆனால் கோயில் கைங்கர்யபரர் அங்கே குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பதை பார்தார். உடனே நம்பி யாரோ ஒருவர் இருக்கிறார் அதனால் அர்த்தததை இப்பொழுது கூறமுடியது என்றார் நம்பி. ஆனால் மற்றொரு சமயத்தில் நம்பி எம்பெருமானாரிடம் அதனுடைய அர்த்தத்தை கூறிவிட்டு, தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அன்று எம்பெருமானார் நம்பியை வழியனுப்பி விட்டு, கொளுத்தும் வெயிலில், ஆழ்வானுடைய திருமாளிகைக்குச் சென்று, நம்பி எப்படி அர்த்தத்தைக் கூறினாரோ அப்படியே அதை ஆழ்வானிடம் கூறினார். ஸஹகாரி நைரபேக்ஷ்யத்தை (தான் குளிரக் கடாக்ஷிப்பதற்கு ஒருவரிடமிருந்து எந்த வித செயலையும் எதிர்பார்க்காமல் இருக்கும் குணம்) எம்பெருமானார் இதன் மூலம் நிரூபிக்கிறார். எப்படியென்றால் இந்த விஶேஷார்த்தத்தை கேட்பதற்கு ஆழ்வான் எந்த ஒரு ப்ரயத்னமும் செய்யவில்லை. ஆனால் எம்பெருமானார் விஶேஷார்த்தத்தை அவருக்குத் தானே கூறினார்.
  • திருவிருத்தம் 95 – “யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு” பாசுரம் வ்யாக்யானம், நம்பியினுடைய ஶிஷ்யர்களுள் ஒருவர் நஞ்ஜீயரிடம் இது நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரம் என்று கூறினார். அத்தோடு அவர் “என்ன தான் ஒரு ஜீவாத்மா விஷயாந்தரங்களிலேயும், பொருள் சேர்ப்பதிலேயும் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கூட, எம்பெருமான் அந்த ஜீவாத்மவிற்குச் செய்யும் நிர்ஹேதுகமான க்ருபாகடாக்ஷத்தை விளக்கமாகக் கூறுகிறது இந்தப் பாசுரம்” என்று கூறினார்.
  • திருவாய்மொழி, 1.10.6 – நம்பிள்ளை வ்யாக்யானம், இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் தன்னுடைய நெஞ்சத்திடம் பேசுகிறார். இதை விரிவாகக் கூறுவதற்காக, நம்பிள்ளை “மிகவும் உயர்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது பகவத் விஷயம், மேலும் அது ஸாமாந்யர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாது. அதனால் தான் நம்பி எப்பொழுதுமே அதைப் பற்றி தனிமையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார், ஆழ்வாரும் தன் நெஞ்சத்தோடு பகவத் விஷயத்தைப் பேசுகிறார்” என்று கூறினார்.
  • திருவாய்மொழி 8.8.2 – எம்பெருமானாருடைய காலக்ஷேப கோஷ்டியில் ஒரு முறை “ஜீவாத்மாவின் ஸ்வரூபம் என்ன? அதாவது ஞாத்ருத்வமா (தன்னை அறிந்தவன்) அல்லது ஶேஷத்வமா (எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன்)? என்று ஒரு கேள்வி எழுந்தது. எம்பெருமானார் அழ்வானை நம்பியிடமிருந்து இதனுடைய அர்த்தத்தை அறிந்து வருமாறு நியமித்தார். ஆழ்வானும் ஆசார்ய நியமனத்தை ஏற்றுக் கொண்டு, திருக்கோஷ்டியூருக்குச் சென்று 6 மாத காலம் நம்பிக்குக் கைங்கர்யம் செய்தார். கடைசியில் நம்பி ஆழ்வான் வந்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். ஆழ்வானும் கேள்வியைக் கூறினார். அதற்கு நம்பி “அடியேன் உள்ளான்” ஜீவாத்மவுடைய ஸ்வரூபம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்பதை தான் ஆழ்வார் இந்த இடத்தில் நிரூபிக்கிறார் என்று கூறினார். ஆனால் வேதாந்தம் ஏன் ஞாத்ருத்வத்தைப் (தன்னை அறிந்தவன்) பற்றிப் பேசுகிறது என்றால், இந்த இடத்தில் தன்னை அறிந்தவன் என்றால் “தான் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்று அறிந்து கோள்வதே” இதனுடைய பொருள். அதாவது, இங்கு ஆழ்வார் மற்றும் நம்பி உணர்த்துவது –  “இந்த ஜீவாத்மா தான் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்று தெரிந்துகொண்டு இருப்பதே உண்மையான ஜீவாத்ம ஸ்வரூபம்”.

திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருடைய பெருமைகளை சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதை நாம் இந்த வலைத்தளத்தில் பார்க்கலாம் “https://granthams.koyil.org/2012/12/20/charamopaya-nirnayam-ramanujars-acharyas-establish-his-uththarakathvam/

எம்பெருமானாருடன் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமாலையாண்டான் திருவாய்மொழி காலக்ஷேபத்தை நிறுத்திய பொழுது, நம்பி அவரிடம் “எம்பெருமானார் ஒரு அவதார புருஷர். அவர் அனைத்து சம்பிரதாய விஷயத்தையும் நன்றாக அறிந்தவர்” என்று கூறி ஸமாதானப்படுத்தினார். நம்பி அவரை எம்பெருமானாருக்குக் காலக்ஷேபத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, நடப்பதை உறுதியும் செய்து கொண்டார்.

ஒரு முறை எம்பெருமானாருடைய பிக்ஷை ப்ரசாதத்தில் சிலர் விஷம் கலந்து கொடுத்து விடுகிறார்கள். இது தெரிந்தவுடன் எம்பெருமானார் எந்த பிரசாதத்தையும் அமுது செய்யாமல் உபவாசமாக இருந்தார். இதை அறிந்தவுடன் நம்பி திருக்கோஷ்டியூரிலிருந்து வந்தார். எம்பெருமானார் மிகவும் கடுமையான வெயிலில், காவேரி நதிக் கரையில் அவரைச் சந்தித்தார். எம்பெருமானார் நம்பியைப் பார்த்தவுடன் சுடும் மணலையும் பொருட்படுத்தாமல் ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்தார், நம்பியும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அருகே இருந்த எம்பெருமானருடைய ஶிஷ்யரான கிடாம்பி ஆச்சான், உடனே எம்பெருமானாரை எழுப்பி, “ஏன் எம்பெருமானாரை சுடும் மணலில் இவ்வளவு நேரம் இருக்க வைக்கிறீர்?” என்று நம்பியிடம் கேட்டார். அதற்கு நம்பி “யார் இந்த கோஷ்டியிலே எம்பெருமானார் திருமேனி (சீர்வடிவு) மீது மிகுந்த பற்று வைத்துள்ளார்கள் என்று பார்ப்பதற்காகவே இவ்வாறு செய்தோம்” என்று கூறினார். அன்றிலிருந்து எம்பெருமானாருக்கு தினமும் ப்ரசாதம் செய்து கொடுக்குமாறு கிடாம்பியாச்சானை நம்பி நியமித்தார். இதிலிருந்து நம்பிக்கு எம்பெருமானாரை மிகவும் பிடிக்கும் என்றும், அதோடு எப்பொழுது எம்பெருமானருடைய நலனையே அவர் சிந்தித்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு திருக்கோஷ்டியூர் நம்பியினுடைய பல பெருமைகளை நாம் பார்த்தோம். “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை ஸ்ரீ ராமானுஜர் பெறுவதற்கு இவரே காரணமாக இருந்தார். அந்த எம்பெருமானாரே நமது ஸம்பிரதாயத்தினுடைய  தர்ஶன ப்ரவர்தகராக இருப்பதை நம்பெருமாளே எம்பெருமானார் தரிஶனம் என்று பாராட்டியுள்ளதை மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் காட்டியுள்ளார்.

ஆளவந்தார் மீதும் எம்பெருமானார் மீதும் அளவற்ற பற்றை வைத்துள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் திருவடித்தாமரைகளை நாமும் பணிந்து வணங்கி வாழ்ச்சி பெறுவோம்.

திருக்கோஷ்டியூர் நம்பியினுடைய தனியன்

ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம்
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://acharyas.koyil.org/index.php/2013/02/27/thirukkoshtiyur-nambi-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org